Published:Updated:

பாசப் போராட்டம் வென்றது! - அதே பள்ளியில் ஆசிரியர் பகவான்

எஸ்.மகேஷ்
பாசப் போராட்டம் வென்றது! - அதே பள்ளியில் ஆசிரியர் பகவான்
பாசப் போராட்டம் வென்றது! - அதே பள்ளியில் ஆசிரியர் பகவான்

மாணவர்களின் பாசப் போராட்டத்துக்குப்பிறகு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பகவான், வெளியகரம் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பகவான், ஆசிரியை சுகுணா ஆகியோர் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் ஆசிரியர் பகவானின் இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடமாறுதல் உத்தரவைப் பெற வந்த  அவரைக் கட்டியணைத்து மாணவ, மாணவிகள் பாசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் மீடியாக்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகின. அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதுதொடர்பான அறிக்கையும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மாணவ, மாணவிகளின் பாசப் போராட்டத்தால் ஆசிரியர் பகவான், வெளியகரம் அரசுப் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற என்ன வழிவகை உள்ளது என்று கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, கல்வித்துறை விதிப்படியே அவரை, அதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில, ``ஆசிரியர் பகவான் இடமாற்றத்தை ரத்து செய்யவில்லை. கடந்த சனிக்கிழமை அவர், அருங்குளம் பள்ளியில் பணிக்குச் சேர்ந்துவிட்டார். பிறகு அங்கிருந்து மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியில் பணியாற்றுகிறார்" என்றனர். 

 தொடர்ந்து அதே பள்ளியில் ஆசிரியர் பகவான் பணியாற்றுவதால் மாணவ, மாணவிகள்  மகிழ்ச்சியில் உள்ளனர்.