காஜல் பயன்படுத்தும்போது செய்ய வேண்டியவை..! #BeautyTips

காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. சின்ன டப்பாக்களில் வந்தது மாறி, இப்போது பென்சில் வடிவில் கிடைக்கிறது.

பெண்கள் தங்கள் கண்களை மேலும் அழகேற்றிக்கொள்ள காஜல் பயன்படுத்துகிறார்கள். முன்பு வீட்டிலேயே காஜல் தயாரிக்கும் பழக்கம் இருந்துவந்தது. ஆனால், தற்போது பெரும்பாலும் கடைகளில்தாம் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அதைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி விவரிக்கிறார் பியூட்டி தெரப்பிஸ்ட் வசுந்தரா. 

காஜல்

வசுந்தரா``காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. சின்ன டப்பாக்களில் வந்தது மாறி, இப்போது பென்சில் வடிவில் கிடைக்கிறது. சீக்கிரம் அழியாது என்பதற்காகச் செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது, புதிதாக பென் (pen) மாதிரியான வடிவில் ப்ரௌன், ப்ளாக் கலர்ஸில் கிடைக்கின்றன. இவை மாதிரியான காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.  

இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது. 

ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும்.  ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம். 

காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கண்களின் மென்மையான சருமத்தையும் வறட்சியடையச் செய்துவிடும். அதற்குப் பதிலாக வீட்டிலேயே ரிமூவர்ஸை எளிமையாகத் தயாரித்துவிடலாம்.

காஜல்

பாதாம் எண்ணெய்யில் காட்டனை டிப் பண்ணி எடுத்து அதை, கண்களின் மேல் வைத்து, மென்மையாகத் துடைத்தாலே அனைத்து வகையான மேக்கப்பும் ரிமூவாகி விடும். கண்களுக்கு இன்னும் கூடுதலான பொலிவு வேண்டும் என நினைப்பவர்கள், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், கொஞ்சமாகத் தேங்காய் எண்ணெய் சேர்த்து கண்களில் அப்ளை செய்யலாம். இந்த முறை கண்களைப் பாதுகாக்கவும் உதவும். இந்த முறையைக் கண்களுக்கு மட்டுமல்லாமல் முகத்துலயும் அப்ளை செய்து மேக்கப் ரீமூவராகப் பயன்படுத்தலாம். இதனால் எந்தவோர் எரிச்சலோ, பாதிப்போ கண்டிப்பாக இருக்காது. காய்ச்சாதப் பசும்பாலையும் ரிமூவரா யூஸ் பண்ணலாம். வெள்ளரிச் சாற்றை, காய்ச்சாத பசும்பாலை மிக்ஸ் பண்ணிப் பயன்படுத்தினால் கண்களுக்கு மேலும் குளிர்ச்சியைத் தரும். கண்களின் சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.                                        

காஜல்போடும் கலை: காஜல் கண்களுக்கு உட்பகுதில போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும். கண்கள் சிறியதாக இருப்பவர்கள், குட்டி லைன் மாதிரி காஜல் போடலாம். திக்கா போட்டால் கண்கள் இன்னும் ரொம்பச் சிறியதாகத் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!