நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் காரணம்! - பாடம் சொல்லும் கதை! #MotivationStory | A story about importance of patience

வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (28/06/2018)

கடைசி தொடர்பு:08:54 (28/06/2018)

நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் காரணம்! - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

பொறுமை நமக்கு கற்றுத் தருவது என்ன?

நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு இதுவும் காரணம்! - பாடம் சொல்லும் கதை! #MotivationStory

பாடம் சொல்லும் கதை

`பொறுமை மிகக் கசப்பானது. ஆனால், அது தரும் பழமோ மிக இனிப்பானது!’ - தத்துவியலாலர் ரூஸோ (Jean-Jacques Rousseau) உதிர்த்த பொன்மொழி இது. நன்றாக யோசித்துப் பார்த்தால், நமக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம் பொறுமையின்மைதான். இந்த விஷயத்தில் இயற்கையிடம்தான் மனிதர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு மரத்தை எடுத்துக்கொள்வோம்... பனி, மழை, வெயில் அத்தனையையும் அது எதிர்கொள்கிறது. பூக்கவேண்டிய நேரத்தில் பூத்து, காய்க்கவேண்டிய காலத்தில் காய்த்து, உதிர்க்கவேண்டிய பருவத்தில் உதிர்த்து தன் கடமையை ஆற்றுகிறது. அந்தப் பொறுமை மனிதர்களில் பலருக்கு இல்லை. பலர் புதிதாக, வித்தியாசமாக எதையாவது செய்யத் தொடங்குவார்கள். ஆனால், வெகு விரைவிலேயே அதைக் கைவிட்டுவிடுவார்கள். ஏனென்றால், குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்திருக்காது. எந்தச் செயலுக்குமே பலன் கிடைக்க, அதனதன் தன்மைக்கேற்ப காலம் பிடிக்கும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். பொறுமையின்மை, நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான பலனைக்கூட இல்லாமல் செய்துவிடும். வெற்றியாளனாக உருவாக ஒருவர் அறிவையும் அனுபவத்தையும் பெறும் வேட்கையோடு இருக்க வேண்டும்; நம் செயல்பாடுகளுக்கான முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டும். இந்த பேருண்மையை விவரிக்கும் கதை இது. 

 துறவி

நம் ஊரில் அதிர்ஷ்டக்கட்டை என்பார்களே... அந்த மாதிரி மனிதர் அவர்... வியாபாரி. சீனாவின் ஒரு சிறு நகரத்தில் இருந்தார். விவசாயம் செய்தார்; சிறு உணவகம் நடத்திப் பார்த்தார்; சின்னதாகக் கடை போட்டு பீங்கான் பொருள்களை விற்றார்... எதிலும் லாபம் கிடைக்கவில்லை. எந்தத் தொழில் செய்தாலும் தோல்வி, நஷ்டம். `என்னை துரதிர்ஷ்டம் துரத்திக்கொண்டே இருக்கிறது’ என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. `இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்கிற முடிவுக்கு அவராகவே ஒரு கட்டத்தில் வந்திருந்தார். தோல்வியும் ஏமாற்றமும் தொடர்ந்து துரத்துகிறதே என்கிற விரக்தி நிலை. வாழ்க்கையில் அவ்வளவு பெரிய அடி வாங்கிய பிறகு அவரால் ஊரில் இருக்க முடியவில்லை. `எங்கேயாவது போய்விடுவோம்’ என்கிற எண்ணத்தோடு கிளம்பினார். கால் போகிற போக்கில் நடந்தார். ஊரைத் தாண்டி, ஒரு காட்டுக்குள் பயணம் செய்தார். 

பசி, தாகம்... எதைத் துறந்தாலும், விடாமல் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் இந்த இரண்டையும் என்ன செய்ய முடியும்? வழியில் ஒரு சிற்றோடை தெரிந்தது. அதில் தாகத்தைத் தணித்துக்கொண்டு நடந்தார். கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பார். பசி, அவருடைய வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது. காட்டுக்கு நடுவே ஒரு சிறு குடிலைப் பார்த்தார் அந்த மனிதர். அதன் வாசலில் நின்று குரல் கொடுத்தார். உள்ளேயிருந்து ஒரு துறவி வெளியில் வந்தார். துறவிக்கு, வாசலில் நின்றிருந்த மனிதரைப் பார்த்ததுமே, அவர் பசியோடு இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது. 

``உள்ளே வாங்க!’’ என்று அழைத்தார் துறவி. 

வியாபாரி உள்ளே போனார். துறவி, அவரை அமரவைத்து, சில பழங்களையும் தான் சமைத்துவைத்திருந்த கஞ்சியையும் அவருக்கு சாப்பிடக் கொடுத்தார். வந்தவர் பசியாறியதும், மெள்ள அவரைப் பற்றி விசாரித்தார். உள்ளத்திலிருப்பதைக் கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு வடிகால் வியாபாரிக்கு அன்று கிடைத்திருந்தது. தன்னைப் பற்றி, தான் அடைந்த நஷ்டங்கள், தோல்விகளைப் பற்றிச் சொல்லி புலம்பித் தீர்த்தார் வியாபாரி. அவர் சொல்வதையெல்லாம் துறவி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். 

``சொல்லுங்க ஐயா... இவ்வளவு கஷ்டத்துக்குப் பிறகும் நான் வாழணுமா... என் ஊர்ல இருக்கணுமா... அதுக்கு ஏதாவது நியாயமான ஒரு காரணம் சொல்லுங்க பார்ப்போம்...’’ 

துறவி எழுந்துகொண்டார். ``என்கூட வாங்க’’ என்று சொல்லி, அந்த வியாபாரியை அழைத்துக்கொண்டு குடிலுக்குப் பின் பக்கம் சென்றார். 

ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, ``அது என்ன?’’ என்று கேட்டார் துறவி. 

``அதுவா... எங்க ஊர்ல பன்னம்னு (Fern) சொல்வோம். சிலர் பரணிச் செடினு சொல்வாங்க. சீக்கிரமே முளைச்சிடக்கூடிய ஒரு தாவர இனம்.’’ 

இன்னோர் இடத்தைச் சுட்டிக்காட்டி, ``அது என்ன?’’ - கேட்டார் துறவி. 

``அது தெரியாதா?’’ 

பரணிச் செடி

``பரணிச் செடியையும் மூங்கிலையும் ஒரே நேரத்துலதான் நான் விதைபோட்டு வளர்க்க ஆரம்பிச்சேன். ரெண்டையுமே ரொம்ப கவனமா வளர்த்தேன். ரெண்டுக்கும் தேவையான தண்ணீர், உரம் எல்லாத்தையும் போட்டேன். சூரிய ஒளி கிடைக்கிற மாதிரியான இடத்துலதான் வளர்த்தேன். ரொம்ப சீக்கிரத்துலயே பரணிச் செடி பூமியிலருந்து முளைச்சு வெளியே வந்துடுச்சு. கிடுகிடுனு வளர ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, மூங்கில் அவ்வளவு சீக்கிரம் வளரலை. ரெண்டு, மூணு வருஷம் ஆச்சு. பூமியிலருந்து சின்னதா ஒரு இன்ச்கூட வளரலை. வளர்ச்சிக்கான எந்த அடையாளமும் இல்லை. அதுக்காக நான் மூங்கில் செடியை விட்டுடலை. தொடர்ந்து தண்ணி ஊத்திட்டு வந்தேன்; நல்லா பராமரிச்சேன். அஞ்சாவது வருஷம்தான் மூங்கில்ல சின்னதா துளிர் விட்டுது. அதுக்கப்புறம் ஆறே மாசம்... கிடுகிடுனு பல அடி உயரத்துக்கு வளர்ந்துடுச்சு. அதுக்காக அந்த மூங்கில் நாலு வருஷம் வளராமலே இருந்துச்சுனு அர்த்தமா?’’ 

வியாபாரி அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. 

``இதுக்கான பதில் ரொம்ப எளிது. அந்தச் சின்ன மூங்கில் மரம் பூமிக்கடியில வளர ஆரம்பிச்சுது; பூமிக்கு மேல வளரும்போது, தான் பலமா இருக்கணும்கிறதுக்காக முதல்ல வேர்களை பலப்படுத்திச்சு. அதுக்காக நாலு வருஷம் பொறுமையா பூமிக்கடியில காத்திருந்தது. வேர்கள் பலமானதும், பூமிக்கு வெளியே தலை காட்ட ஆரம்பிச்சுது. பலமான அடித்தளம் இல்லைனா, வளர்ச்சியின்போது அதன் வீர்யத்தைத் தாங்க முடியாது; மூங்கிலால வாழவும் முடியாது. வேர் நல்லா பலப்பட்டதும், உயரமா வளர ஆரம்பிச்சுடுச்சு.’’ 

அடுத்து துறவி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க வியாபாரி ஆர்வத்தோடு காத்திருந்தார். 

 மூங்கில்

``அந்த மூங்கில் மாதிரிதான் நீங்களும். உங்களுக்கு வாழ்க்கையில கிடைச்ச நஷ்டங்கள், தோல்விகளெல்லாம் கஷ்டங்கள் இல்லை. அனுபவங்கள். அந்த அனுபவங்களையெல்லாம் எவ்வளவு விலை கொடுத்தாலும் யாராலயும் வாங்க முடியாது. இத்தனை நாளா அந்த அனுபவங்களின் மூலமா உங்களோட வெற்றிக்கான வேர்களை பலப்படுத்தியிருக்கீங்க. ஆனா, உங்களுக்குப் பொறுமை இல்லை. அவசரப்பட்டு எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீங்க பொறுமையா இருந்திருந்தீங்கன்னா, அந்த மூங்கில் மாதிரி கிடுகிடுனு வளர்ந்திருப்பீங்க.’’ 

வியாபாரி, அந்தத் துறவியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். அந்த இறுக்கமான பிடியில் ஒரு நம்பிக்கை தெரிவதை துறவி உணர்ந்தார். வியாபாரி, மேற்கொண்டு ஒரு வார்த்தைகூடப் பேசாமல், திரும்பி தன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்