வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (28/06/2018)

கடைசி தொடர்பு:18:39 (28/06/2018)

நிறம் மாறிய இந்தியா... அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்! #Alert

நிறம் மாறிய இந்தியா... அதிர்ச்சியளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்! #Alert

காற்று மாசுபாடு,  உலகம் முழுவதும் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு வருடத்துக்கு 7 மில்லியனுக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டின் காரணமாக இறக்கிறார்கள் என்று உலகச் சுகாதார மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. நகரமயமாதல், அதிகரிக்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை,  குறையும் மரங்களின் எண்ணிக்கை என வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏராளம். இந்நிலையில் இந்தியாவின் காற்று  நிலையைப் பற்றிய ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 

வளிமண்டலத்தில் அதிகரித்த ஃபார்மால்டிஹைடு

செயற்கைக்கோள் புகைப்படம்

பூமியைச் சுற்றி வளிமண்டலத்தை ஆராயும் பல செயற்கைக்கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளால் அனுப்பப்பட்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்தைத் தொடர்ச்சியாக ஆராய்ந்து உடனுக்குடன் தகவல்களை அளிக்கும். அப்படி யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சியின் புதிய செயற்கைக்கோள் Sentinel-5P எடுத்து அனுப்பிய ஒரு புகைப்படம் இந்திய நிலப்பரப்பைச் சுற்றிலும் காணப்படும் வளிமண்டலத்தில் ஃபார்மால்டிஹைடின் அளவு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. கடந்த அக்டோபர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட Sentinel-5P செயற்கைக்கோள் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் காற்றின் தரத்தை ஆராயும் பணியில் ஈடுபட்டு வந்தது. கடந்த நான்கு மாதங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தற்பொழுது இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இருக்கும் காற்றில் ஃபார்மால்டிஹைடின் செறிவு குறைவாகக் காணப்படுவதன் காரணம் அங்கே மக்கள் தொகையும் குறைவாகவே இருப்பதுதான். மேலும் அந்த இடங்களில் பாலைவனப் பரப்பும் அதிகம். இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும்  ஃபார்மால்டிஹைடின் செறிவு குறைவாகக் காணப்படுகிறது.

ஃபார்மால்டிஹைடின் அளவு அதிகரித்ததன் பின்னணி

காட்டுத்தீ

ஃபார்மால்டிஹைடு வழக்கமாகக் காற்றில் காணப்படும் என்றாலும் படத்தில் இருக்கும் அடர்த்தியான நிறம் கொண்ட பகுதிகள் இயல்புக்கு மாறான செறிவைக் கொண்டுள்ளதையும், காற்று அதிகமாக மாசுபாடு அடைந்திருப்பதையும் காட்டுகின்றன. தாவரங்களிலிருந்து இயற்கையாகவே இது வெளியாகும் என்றாலும் கூட தீ மற்றும் இதர மாசுபாடே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் விறகுகளின் அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், காட்டுத்தீயும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

விளைவுகள் என்ன ?

ஃபார்மால்டிஹைடு என்பது நச்சுத் தன்மை கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால், காற்றில் அதிகம் காணப்படும் வாயுக்களான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றோடு ஒப்பிடும் போது ஃபார்மால்டிஹைடு அளவு மிகவும் குறைவானது. இதனால் உடனடியாகப் பெரிய அளவில் எந்தப் பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் இதே நிலை தொடர்ச்சியாக நீடிக்கும்போது சில பாதிப்புகள் உருவாகலாம்.

விளைவுகள்

குறிப்பாக மனிதர்களுக்குக் கண்களிலும் மூச்சக்குழாயிலும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கு இது வழி வகுக்கும். Sentinel-5P செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கும் Tropomi என்ற கருவிதான் காற்று மாசுபாட்டை ஆராய்ந்துகொண்டிருக்கிறது. இது வெறும் ஃபார்மால்டிஹைடு மட்டுமன்றி நைட்ரஜன்-டை-ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனாக்சைடு போன்ற வாயுக்களின் அளவையும் தொடர்ந்து கண்காணிக்கும். இந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதன் முக்கிய நோக்கமே காற்று மாசுபாட்டைக் கண்டறிந்து அதைக் குறைக்க வேண்டும் என்பதுதான். செயற்கைக்கோள்கள் அதன் பணியைச் சரியாகச் செய்து வருகின்றன ஆனால், அதை உணர்ந்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோமா என்பதுதான் இப்போது நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.  


டிரெண்டிங் @ விகடன்