வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (28/06/2018)

கடைசி தொடர்பு:16:44 (28/06/2018)

தம்பதிகளிடையே 7 year itch ஏன் உருவாகிறது எனத் தெரியுமா?

கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது ரெண்டு பேருக்குமோ, `இந்த ரிலேஷன்ஷிப்பே வேணாம்' என்றோ அல்லது  `வேறொரு உறவைத் தேடலாமே என்றோ தோன்ற ஆரம்பித்து விடும். இதுதான் செவன் இயர் இட்ச்!

தம்பதிகளிடையே 7 year itch ஏன் உருவாகிறது எனத் தெரியுமா?

``பெற்றோர்கள் உறவினர்கள் சூழ நடக்கும் திருமணமாகட்டும், கோவிலிலோ சர்ச்சிலோ நண்பர்கள் சூழ நடக்கும் காதல் திருமணமாகட்டும், மகிழ்ச்சியும், பிரச்னைகளும் அனைத்துத் திருமண உறவிலும் பாகுபாடு இல்லாமல் ஏற்படுகிறது. தாம்பத்ய திருப்தியின்மையில் ஆரம்பித்து ஈகோ வரை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் பிரச்னைகள் தம்பதிகளிடையே வெடிக்கலாம். செவன் இயர் இட்ச் (Seven-Year Itch) மூலமாகக்கூட தம்பதிகளிடையே பிரச்னைகள் ஏற்படலாம். அதென்ன செவன் இயர் இட்ச் என்பவர்களுக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஷாலினி.

"மெத்தப் படித்த தம்பதிகள்கூட சரியாக ஆறுவருட திருமண உறவைக் கடந்ததும் 'அச்சச்சோ அடுத்த வருஷம் செவன் இயர் இட்ச் நம்மளை பாதிக்குமே' என்றெல்லாம் எண்ணி பதறியடித்து கூகுளில் தேட ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சிலரோ... ஏழு வருட திருமண வாழ்வு முடிந்ததும் 'நமக்குள்ள சண்டை வந்தா அதுக்கு செவன் இயர் இட்ச்னு பேரு' என்றெல்லாம் பதற்றமடைகிறார்கள். திருமணப் பந்தத்தில் இணைந்த ஒவ்வொரு தம்பதிகளும் கண்டிப்பாக செவன் இயர் இட்சை கடந்தே தீரவேண்டும். அதை பிரச்னையில்லாமல் கடப்பது எப்படி என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

தம்பதி

இந்த உணர்வு அனைத்துத் தம்பதிகளிடையுமே தோன்றி மறையும் ஒன்றுதான். திருமணமான புதிதில் ஒருவரை ஒருவர் ஈர்க்க நினைப்பதால் உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி இருவரிடையே அன்பு மட்டுமே பிரதானமாகத் தெரியும். கூடவே தாம்பத்யம் இனிக்கும் என்பதால் அங்கே 'செவன் இயர் இட்சு'க்கு வேலை இருக்காது. இதில் சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால், திருமண வாழ்வு என்பது நாம் நினைத்தது போலவோ அல்லது தீர்மானிப்பது போலவோ நடப்பதில்லை. அது மனம் சார்ந்த ஒரு விஷயம். ஒருவருடங்களிலேயே மனம் ஒத்துப் போகாமல், தாம்பத்யம்னா இதுதானா என்று சலித்துப் பிரிகிற தம்பதிகளும் இருக்கிறார்கள். சலிப்பு எங்கே தோன்றுகிறதோ அங்கே செவன் இயர் இட்ச் இருக்கிறது என்று அர்த்தம். இதையும் மீறி வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் தம்பதிகளிடையே நாளடைவில் நம் துணையிடம் இதற்கு மேல் தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எழும்போதுதான் `நானும்தான் வேலைக்குப் போறேன் என்றோ, `நீங்க வேலைக்குப் போறீங்கன்னா நான் வீட்டு வேலை பாக்குறேன்... வடிச்சுக் கொட்டுறேன்' என்பது போன்ற வார்த்தைகள் வெடித்துப் பறக்கும். விட்டேத்தியான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். `இந்த வாழ்க்கைல கெடந்து முட்டிக்கிறதுக்குப் பேசாம வெளிய போய்டலாம்' என்றும் தோன்ற ஆரம்பிக்கும். ஷாலினி

வழியே இல்லாதவர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மனதையும், உடலையும் பழக்கிக்கொள்வார்கள். தாம்பத்யமோ, பிரியமோ அடிபட்டு தேமே என்று வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். மனசு தடுமாறும் நேரங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் பிரியங்கள் தோன்றலாம். அப்படி ஏற்படும் பிரியம் ஆழமான உறவாகக்கூட மாறலாம். இந்த நேரத்தில்தான் உங்களைச் சிறு வயதில் காதலித்த மாமா பையனோ, அத்தை பெண்ணோ ஞாபகத்துக்கு வந்துபோவார்கள். அவர்களை மனது தேடி பேச எண்ணும்'' என்றவர் இதிலிருந்து எப்படி வெளிவரலாம் என்பது குறித்தும் பேசினார்.

``குழந்தைகளை ஸ்பெஷல் கோச்சிங், பாட்டி வீடு என்று அட்லீஸ்ட் ஒரு வாரமாவது அனுப்புங்கள். உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் புதிதாக்குங்கள். பரஸ்பரம் இனி இருவருக்குள்ளும் தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை என்றாலும், சுற்றுலா மூலமாக உங்கள் மனம், எண்ணத்தை ஃபிரெஷ்ஷாக்குங்கள். வீட்டையே அடிக்கடி இன்டீரியரில் ஆரம்பித்து ஒரு சின்ன சேரை நகர்த்தி வைப்பது மூலமாக புதுப்பொலிவடைய வைக்கிறோம். உயிரில்லாத பொருள்களுக்கே இத்தனை அழகியலும், கவனித்தலும் தேவைப்படும்போது இருமனங்களுக்குப் புதுப்பொலிவு தேவைப்படாத என்ன... நிச்சயம் தேவை. பொருளாதாரம், பிள்ளைகள் என்று வாழ்க்கையின் இறுதிவரை நாம் சுழன்றுகொண்டுதான் இருக்கப்போகிறோம். எனவே, ரெஃப்ரெஷ் என்பது வருடம் ஒருமுறையாவது நிகழ வேண்டியது ஒன்று.

அதை நிகழ்த்த வையுங்கள். உங்கள் இருவரிடையே சலிப்பான எண்ணங்களோ, சந்தர்ப்பங்களோ நிகழ்வது போல தெரிந்தால் உங்கள் துணையைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நிச்சயம் உதிர்க்காதீர்கள். அது நிரந்தரப் பிரிவுக்கு அழைத்துச் செல்லும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு ட்ரிப், ஒரு ரெப்ஃரெஷ்மென்ட், சந்தோஷம், தேவையான ஸ்பேஸ் மூலம் எளிதாகக் கடக்கவேண்டிய செவன் இயர் இட்சை இடியாப்பச் சிக்கலாக்கிவிட வேண்டாம் தம்பதிகளே!" என்று முடித்தார்.

பி.கு.: இந்தக் கட்டுரை படித்தவுடன், "இந்தப் பிரச்னையெல்லாம் எனக்கு இல்லையேப்பா! நாங்க ரொம்ப வருஷமா சந்தோஷமா இருக்கோம்!" என்று தோன்றுகிறதா? நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். முடிந்தளவு உங்களைப் போல வாழ, மற்றவர்களுக்கும் டிப்ஸ் கொடுங்களேன்!


டிரெண்டிங் @ விகடன்