"நாங்கள் இப்படித்தான்!" - திருநங்கைகளின் அழகை வெளிக்கொணரும் புது மேக்-ஓவர் | New makeover for Transgenders by Stylist Archana Arthi

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (29/06/2018)

கடைசி தொடர்பு:15:45 (29/06/2018)

"நாங்கள் இப்படித்தான்!" - திருநங்கைகளின் அழகை வெளிக்கொணரும் புது மேக்-ஓவர்

ஆண்-பெண் என இருவருடைய குணாதிசயங்களைக்கொண்டிருக்கும் திருநங்கைகள், முற்றிலும் பெண்ணாகத் தங்களை மாற்றிக்கொள்ள ஏகப்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மனஉளைச்சலுடன் உடல் உபாதைகளையும் பரிசாகப் பெறுகின்றனர்.

இது அழகின் மோதல்!

`திருத்திய நீளமான சிகை
மெலிந்து நெளிந்த புருவங்கள்
ஜிமிக்கி தொடும் வளைந்த கழுத்து
அங்கித் தழுவும் மென்மையான தோள்பட்டை
நாணத்தால் போத்திய மார்பு
ஆடைக்குள் மறைந்த குறுகிய இடை
மிதமான சூட்டைக்கூட ஏற்காத மெல்லிய பாதம் 
இவற்றைக்கொண்டிருக்கும் நாங்களே 
அழகில் சிறந்தவர்கள்' என்றது பெண்மை.

`களைந்த குட்டையான சிகை
படர்ந்த அடர்ந்த புருவங்கள்
சுருள் நிறைந்த தாடி 
திடமான கழுத்து
அகன்ற தோள்பட்டை 
எவ்விதச் சூட்டையும் தாங்கும் பாதங்கள்
இத்தனை பெருமைகளைக்கொண்டிருக்கும்
நாங்களே அழகில் உயர்ந்தவர்கள்' என்று போட்டிபோட்டது ஆண்மை.

`அப்போ எங்களின் அழகு, ஆண்மைக்கானதா அல்லது பெண்மைக்கானதா?' எனப் புரியாமல் ஒதுங்கி நின்றனர் `திருநங்கைகள்'.

எது அழகு என்பதில், நம்மை நாமே எத்தனை நாள்கள்தாம் ஏமாற்றிக்கொண்டிருப்பது? நிறத்தில் வெண்மை, உடலமைப்பில் தொப்பை இல்லாத மெல்லிய இடை இதுதான் `அழகு' என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை. நாடே `டயட்', `பிளீச்சிங்' போன்ற போதையில் மிதந்துகொண்டிருக்கிறது. நோயற்ற ஆரோக்கியமான உடலே என்றும் நிலைத்திருக்கும் அழகு என்பதை மறந்தேபோன `அம்னிஷியா' பேஷன்ட்டாகிவிட்டோம். நாம் நம் அழகுக்கு அழகுச் சேர்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பாவம் திருநங்கைகள் அவர்களின் உண்மையான அடையாளத்தை இழந்துகொண்டிருக்கின்றனர்.

ஆண்-பெண் என இருவருடைய குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் திருநங்கைகள், முற்றிலும் பெண்ணாகத் தங்களை மாற்றிக்கொள்ள ஏகப்பட்ட மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மனஉளைச்சலுடன் உடல் உபாதைகளையும் பரிசாகப் பெறுகின்றனர். ஆனால், ஒப்பனை நிறைந்த போலியைவிட அசலே சிறந்தது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

Real Beauty

அர்ச்சனா`திருநங்கைகள் ஏன் அவங்களோட அடையாளத்தை மாத்திக்கணும்?' என்று தன் ஸ்டைலிங்கில் அவர்களின் அசலை அடையாளப்படுத்தியுள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில், ``நான் காலேஜ்ல இருந்தே திருநங்கைகளோடு நிறைய வொர்க் பண்ணிருக்கேன். அவங்களுக்கு ஸ்டைலிங்கும் பண்ணியிருக்கேன். அப்படி எனக்கு அறிமுகம் ஆனவங்க  திருநங்கை ஸ்வேதா.

ஒருமுறை அவங்க எனக்குப் பழைய பிக்சர் ஒண்ணு ஷேர் பண்ணியிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன். காரணம், அதுல திருநங்கைகள் அவங்களோட ஒரிஜினாலிட்டி மாறாம, அவங்க அவங்களாவே இருந்தாங்க. அதுதான் அவங்களோட உண்மையான முகம்னு இப்போ இருக்கிற பல பேருக்குத் தெரியாது. எனக்கும்தான்! அகலமான தோள்பட்டை, முரட்டு முகம், தாடி, மீசை, கிருதா இதுலாம் அப்படியே இருந்துச்சு. அவங்களோட உடலமைப்பையும் அவங்க மாத்திக்கலை. ஆனா, அவங்களும் மேக்கப் போட்டிருந்தாங்க. இல்ல இல்ல... கொஞ்சமா மெருகேத்திக்கிட்டாங்க. மீசைக்குமேல புல்லாக்கு, கிருதாவுக்குப் பக்கத்துல ஜிமிக்கி, வகுடெடுத்துச் சீவிய முடி, கையில வளையல், கால்ல கொலுசுனு அவ்வளவு அழகு! இதுதான் அவங்களுக்கான அடையாளம்னு அந்த போட்டோ பார்த்ததும்தான் புரிஞ்சது. 

இப்போல்லாம் அவங்களை வெச்சு நிறைய ஃபேஷன் ஷூட் பண்றாங்க. அதுல அவங்களோட அடையாளம் மொத்தமா அழிஞ்சுப்போயிடுது. தெரிஞ்சோ தெரியாமலோ, அவங்களுக்கு வேற ஓர் அடையாளத்தை நாம உருவாக்கிட்டிருக்கோம். அவங்க வேற ஒரு ஜெண்டருக்கு மாறணும்னு அவசியமில்லை. அவங்க ஒரு, மூணாவது தனிப்பட்ட மைனாரிட்டி ஜெண்டர். அவ்வளவுதான். அவங்களோட ஏற்றத்தாழ்வுதான் அவங்களுக்கான அசல் அழகு. அதை எதுக்கு ஆணோட அல்லது பெண்ணோட முகமூடி போட்டு மறைக்கணும்?

`இவ்வளவு அழகா இருக்காங்க... இவங்க திருநங்கையா!' இந்த வார்த்தைகளை நாம எத்தனை பேரு சொல்லிருப்போம்! திருநங்கைனா பொண்ணா அழகாதான் இருக்கணுமா? அவங்க அடையாளத்தை அழிச்சாதான் அழகா? அப்படினா, நாமளே திருநங்கைகள்ல அழகானவங்களை மட்டும்தான் திரும்பிப் பார்க்கிறோம் இல்லியா? ஒரிஜினலா இருக்கிறவங்களை இளக்காரமாப் பார்க்கிறோம். இது ரொம்பத் தப்பு. இதுலாம்தான் அவங்க மனசுல ஆழமாப் பதிஞ்சு, பொண்ணுபோல முழுசா மாறணும்னு தூண்டுது.

நாம இதுவரைக்கும் ஃபேம்ல இருக்கிற சில திருநங்கைகளை மட்டும்தான் பார்த்திருக்கோம். ஆனா, சராசரி வாழ்க்கையில இருக்கிற எத்தனையோ திருநங்கைகளோட மனக்குமுறல்கள் கேட்டா நம்மளால நிம்மதியாத் தூங்கவே முடியாது. அவ்வளவு வலி அவங்களுக்குள்ள. இதைப் பற்றி ஸ்வேதாகூடவும் பேசினேன். அவங்க சொன்ன பதில், `திறமையையெல்லாம் யாருமே பார்க்கிறதில்லை. மரியாதையைக்கூட ஆள் பார்த்தும், அழகைப் பார்த்தும்தான் கொடுக்குறாங்க'னு ரொம்பவே கஷ்டப்பட்டுச் சொன்னார்.

Transgender Real beauty

இது எல்லாத்துக்கும் காரணம், நாம மட்டும்தான். அந்தக் குற்றஉணர்ச்சி ரொம்ப நாளா இருந்துச்சு. இந்த Stereo type-பை மாத்தணும்னு நினைச்சேன். இனிமே யாரும் இவங்களுக்கு ஏன் மீசை இருக்குனு கேட்கக் கூடாது. இதுக்காக அஞ்சு திருநங்கைகளைத் தேர்வுசெஞ்சு அவங்களோட உண்மை அழகை ஷூட் பண்ணியிருக்கோம். அவங்களை அவங்களா வாழவிடணும்னு எல்லோரையும் கேட்டுக்குறேன். இப்படி ஒரு கான்செப்ட்னு சொன்னப்போ, நிறையப் பேரு ரொம்பவே தயங்கினாங்க. எல்லாத்தையும் மீறி இதைப் புரிஞ்சுக்கிட்டு எங்களுக்கு சப்போட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி" என்று விடைபெற்றார் அர்ச்சனா ஆர்த்தி.

அழகின் தேடலில், திருநங்கைகளின் ஆச்சர்யமூட்டும் அழகைக் கண்டு வியப்பில் மூழ்கிப்போனேன்!


டிரெண்டிங் @ விகடன்