வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (29/06/2018)

கடைசி தொடர்பு:17:12 (29/06/2018)

''World of Dance - பெரிய வாய்ப்பு. ஆனா...!?’’ - நிதிநெருக்கடியில் தவிக்கும் சென்னை கலைஞர்கள்

World Of Dance நடனப் போட்டி என்பது நடனப் பிரியர்களுக்குக் கனவு. இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் குழு பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியான NBC யில் நடைபெறும் World Of Dance ஷோவில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்

''World of Dance - பெரிய வாய்ப்பு. ஆனா...!?’’ - நிதிநெருக்கடியில் தவிக்கும் சென்னை கலைஞர்கள்

``எங்க 18 பேரோட கனவுமே இந்த புரோகிராம்தான் ப்ரோ. இந்தப் போட்டியில கலந்துக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். நாங்க ஜெயிச்சோம்னா, அது எங்களை மாதிரியே டான்ஸ் பிராக்டீஸ் பண்ண இடவசதியில்லாம கவர்மென்ட் பார்க்ல டான்ஸ் பிராக்டீஸ் பண்ற பலருக்கும் பெரிய வாய்ப்பா  இருக்கும்" எனக் கூறிய மயூரனின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை.

`OPM' என்ற இவர்களது நடனக் குழு, அமெரிக்காவில் நடைபெறவுள்ள `World Of Dance' என்ற உலக அளவிலான நடனப் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ளது. சென்னையில் நடத்திய தகுதிப் போட்டியில் World Of dance குழு முதல் இடம் பிடித்ததன் மூலம், இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது. தேர்வுபெற்றிருந்தாலும், அமெரிக்கா செல்லும் அளவுக்குப் பணவசதி இல்லாத காரணத்தால், பண உதவி பெற முயன்றுவருகின்றனர். 

World Of Dance நடனப் போட்டி என்பது, நடனப் பிரியர்களுக்கான கனவு. இந்தப் போட்டியில் தேர்வுசெய்யப்படும் குழு, பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியான NBC-யில் ஒளிபரப்பாகும் World Of Dance ஷோவில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இதில் கலந்துகொண்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதுதான் இந்த இளைஞர்களின் மிகப்பெரிய இலக்கு.   

நடனப் போட்டி

PC: https://www.facebook.com/worldofdanceindia/

நடனம் மட்டுமே வாழ்க்கை எனத் தீர்மானித்துக்கொண்ட இந்த இளைஞர்கள், 2014-ம் ஆண்டிலிருந்து நடனப் பயிற்சி பெற்றுவருகிறார்கள். நடனத்தின் மீதுகொண்ட தீராக் காதலின் காரணமாக நண்பர்களான இந்த இளைஞர்கள், தொடர்ந்து நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நடனப் பயிற்சிக்கு என யாரிடமும்  செல்லாமல் `யூ-டியூப்' வீடியோக்கள் மூலம் நடனப் பயிற்சி பெற்றுவருகிறார்கள். ஆரம்பத்தில் தி.நகரில் உள்ள `நடேசன் பூங்கா'வில்  நடனப் பயிற்சி மேற்கொண்டனர். அதன் பிறகு பல நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குமேல் பூங்காவில் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், நண்பர் ஒருவரின் வீட்டு மாடியில் ஸ்டுடியோ அமைத்து பயிற்சி பெற்றுவருகின்றனர். 

நடனம்

``எங்க எல்லாரோட ஃபேமிலியிலயும் எங்க திறமையை சப்போர்ட் பண்றாங்க ப்ரோ. ஆனா, எல்லாரோட ஃபேமிலியுமே பொருளாதார அளவுல பின்தங்கிதான் இருக்கு. எங்க டீம்லயே நிறையபேர் வேலைக்குப் போய்க்கிட்டேதான் பிராக்டீஸ் பண்ணிட்டிருக்காங்க. ஓரளவுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட பணம் வாங்கி, ரிஜிஸ்டர் பண்ணிட்டோம் ப்ரோ. போறதுக்குத்தான் பணம் ரெடி பண்ணிட்டிருக்கோம். 

சென்னை பார்க்ல நீங்க போய்ப் பார்த்தீங்கனா, நிறைய இளைஞர்கள் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க எல்லாருக்குமே டான்ஸ்ல பெரிய அளவுல சாதிக்கணும் ஆசையிருக்கும். ஆனா, இங்க அதுக்கான வாய்ப்பு ரொம்ப கம்மி. டான்ஸ் ஆடுற பசங்கனாலே ரொம்ப வசதியானவங்கனு நினைச்சுக்கிறாங்க. ஆனா, உண்மை அது இல்லை. ஷூ, டிரெஸ்லாம் வாங்குறதுக்கே ரொம்பச் சிரமப்பட்டுதான் வாங்குறோம். ஏதாவது டான்ஸ் போட்டி வந்தாலே அது சென்னையில நடக்கணும்னு வேண்டிப்போம். வெளியூர்ல போட்டி நடந்தா, அதுக்கான செலவே ரொம்ப ஆகும். அதனால நாங்களே நிறைய போட்டிகள்ல கலந்துக்காம இருந்திருக்கோம். இதுதான் ப்ரோ நிறைய டான்ஸர்ஸோட நிலைமை'' என விரக்தியாகச் சிரிக்கிறார் மயூரன்.

பணமே இன்னும் தயாராகாத நிலையில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் அந்த இளைஞர்கள்.

நம்பிக்கை... மனித வாழ்க்கைக்கான மூலாதாரம்!


டிரெண்டிங் @ விகடன்