வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (30/06/2018)

கடைசி தொடர்பு:14:27 (30/06/2018)

இன்ஜினீயரிங் ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடக்கும்? மாணவர்/பெற்றோர் கவனத்துக்கு!

இன்ஜினீயரிங் ஆன்லைன் கலந்தாய்வு எப்படி நடக்கும்? மாணவர்/பெற்றோர் கவனத்துக்கு!

கடந்த 21 வருடமாக நடந்துவந்த நேரடிப் பொறியியல் கலந்தாய்வுக்கு மாற்றாக, ஆன்லைன் கலந்தாய்வுக்கு மாறியிருக்கிறது தமிழக அரசு. பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் கலந்தாய்வில் எப்படிக் கலந்துகொள்வது எனத் தெரியாமல் மாணவர்களும் பெற்றோர்களும் தடுமாறிவருகின்றனர். இவர்களுக்கு முழுமையாக உதவும் வகையில் ஆன்லைன் கலந்தாய்வுகுறித்து அனைத்து விஷயங்களையும் விகடன் வாசகர்களுக்காகத் தொகுத்துள்ளோம். 

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். மாணவர்களின் தரவரிசை எண், மாணவர்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், 04.07.2018 தேதிக்குள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அலுவலகத்தை அணுகி, குறைகளை சரிசெய்துகொள்ளலாம். 

தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். முதல் குழுவினராக 1 முதல் 15,000 ரேங்க் பெற்றவர்களும், இரண்டாவது சுற்றில் 15,001 ரேங்க் முதல் 40,000 ரேங்க் வரை உள்ளவர்கள், மூன்றாவது சுற்றில் 40,001 ரேங்க் முதல் 70,000 ரேங்க் வரையிலும், நான்காவது சுற்றில் 70,001 முதல் ஒரு லட்சம் வரையிலும், ஐந்தாவது சுற்றில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரேங்கில் இருப்பவர்களும் தனிக் குழுவாகப் பிரிக்கப்படுவார்கள். இவர்கள் எப்போது ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விவரங்கள், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பிவைக்கும். இவர்களின் பட்டியல் விவரமும் இணையத்தில் வெளியிடப்படும். 

கலந்தாய்வுக்கு என ஒதுக்கப்பட்ட நாளில், கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதை, ஆன்லைன் வழியாகவோ அல்லது வரைவோலையாகவோ (Demand Draft) செலுத்தலாம். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5,000 ரூபாயும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 1,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்துபவர்கள், வரைவோலையை உதவி மையத்தில் செலுத்திய பிறகே ஆன்லைன் கவுன்சலிங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குழுவினருக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு, மூன்று நாள்கள் (மூன்றாவது நாள் 5 மணி வரை) ஒதுக்கப்படும். இந்த நாளில் வீட்டிலிருந்தே கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பத்தை வரிசைப்படி பதிவுசெய்யலாம். 

கணினி மற்றும் இணைய வசதி இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள பொறியியல் உதவி மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்க்கும்போது, கல்லூரி விவரங்கள் குறித்து வழங்கப்பட்ட கையேட்டில் கடைசிப் பக்கத்தில் கல்லூரித் தேர்வு குறித்த பட்டியல் தேர்வுசெய்வதற்கான மாதிரிப் படிவம் வழங்கப்பட்டிருக்கிறது.  அதில் கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் முன்கூட்டியே தேர்வுசெய்து குறித்து வைத்துக்கொள்ளலாம்.

பொறியியல் கலந்தாய்வு

ஆன்லைன் கலந்தாய்வின்மூலம் மாணவர் எந்தக் கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வுசெய்யலாம் என்றாலும், ஒதுக்கீடு செய்யும்போது மாணவர் விருப்பத் தேர்வாகக் குறிப்பிடும் முதல் கல்லூரியும் பாடப்பிரிவும் முதல் தேர்வாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால், மிகுந்த கவனத்துடன் தேர்வுசெய்வது அவசியம். 

பொறியியல் கலந்தாய்வு

விருப்பப்பட்ட கல்லூரியை, ஆன்லைனில் நான்கு வழியில் தேர்வுசெய்யலாம்.

1) கல்லூரிக் குறியீட்டு எண் மூலம் உள்ளீடுசெய்து தேர்வுசெய்தல்.

2) மாவட்டவாரியாகக் கல்லூரியைத் தேர்வுசெய்தல்.

3) பாடப்பிரிவுகளின் வழியே தேர்வுசெய்தல்.

4) கல்லூரிப் பெயரைக்கொண்டு தேர்வுசெய்தல். 

பொறியியல் கலந்தாய்வு

மேற்சொன்ன ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்தால் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளும், அதில் காலியாக உள்ள இடங்களும் திரையில் தோன்றும். விருப்பமான பாடப்பிரிவுக்கு இடதுபக்கம் உள்ள பட்டனை க்ளிக் செய்து அதன் கீழே உள்ள `Adding of Choice' என்ற பட்டனை க்ளிக் செய்தால், `Do you want to add this Choice: College 1: Branch Name' என்ற பாக்ஸ் வரும். இதில் `Yes' என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் தேர்வுசெய்த பாடப்பிரிவும் கல்லூரியும் உங்களுடைய விருப்பப் பட்டியலில் சேர்ந்துவிடும். அதற்கு அடுத்து `Do you add as choice?' எனக் கேட்கும். இதுபோன்று எத்தனை கல்லூரிகளையும் மற்றும் பாடப்பிரிவையும் தேர்வுசெய்துகொள்ளலாம். 

பொறியியல் கலந்தாய்வு

இவ்வாறு தேர்வுசெய்யும்போது இடையில் புதிய விருப்பத்தை நுழைக்கவும், ஏற்கெனவே தேர்வுசெய்ததை நீக்கவும், விருப்பப் பட்டியலை மாற்றி அமைக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. விருப்பப் பட்டியலை மாற்றியமைக்க `My Choice' என்பதை க்ளிக்செய்தால், விருப்பப் பட்டியலின் லிஸ்ட் வரும். ஒவ்வொரு விருப்பத்துக்கும் அருகில் உள்ள பென்சில் போன்ற குறியீட்டைத் தேர்வுசெய்தால் எடிட் செய்வதற்கு `Delete Choice, Change Branch, Change Choice Number, Interchange Choices' என்ற நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து மாற்றத்தைச் செய்தால், `Update Choice Confirmation' எனக் கேட்கும். `Yes' என்றால் உங்களுடைய மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படும். 

பொறியியல் கலந்தாய்வு

பென்சில் குறியீட்டுக்கு அருகில் உள்ள அம்புக்குறியைத் தேர்வுசெய்தால் உங்களுடைய விருப்பத்தின் இடத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இவ்வாறு மாற்றி அமைத்த பிறகு விருப்பப் பட்டியலை நீங்கள் பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் வசதியுள்ளது. உதவி மையத்தில் இலவசமாக பிரின்ட் எடுத்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியைத் தேர்வுசெய்ய வழங்கப்பட்ட மூன்றாவது நாளில், 5 மணிக்குள் கல்லூரியைத் தேர்வுசெய்து லாக் செய்துவிட வேண்டும். ஒருவேளை லாக் செய்யாவிட்டால், அது தானாகவே கல்லூரியை லாக் செய்துகொள்ளும். லாக் செய்த பிறகு எதையும் மாற்றி அமைக்க முடியாது. லாக் செய்யும்போது `I have completed adding my preferencial choices and hence lock my choice' என்பதைத் தேர்வுசெய்து லாக் செய்ய வேண்டும். லாக் செய்யும்போது, பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு கடவு எண் அனுப்பிவைக்கப்படும். அந்த எண்ணை உள்ளீடாகக் கொடுத்து லாக் செய்ய வேண்டும். உடனே, பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரிக்குக் கல்லூரி விருப்பப் பட்டியல் அனுப்பிவைக்கப்படும். 

பொறியியல் கலந்தாய்வு

நான்காவது நாள் காலையில் தரவரிசை மற்றும் விருப்பப் பட்டியல் அடிப்படையில் தேர்வான கல்லூரி மற்றும் பாடப்பிரிவின் விவரங்கள் மாணவர் பதிவுசெய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். மின்னஞ்சல் வழியே தேர்வான விவரத்தைத் தெரிந்துகொண்டு, கல்லூரி மற்றும் பாடப்பிரிவை உறுதிப்படுத்த இரண்டு நாள்கள் வழங்கப்படும். 

பொறியியல் கலந்தாய்வு

கல்லூரித் தேர்வை உறுதிப்படுத்தும்போது மாணவர்களுக்கு ஐந்து விதமான ஆப்ஷன்கள் உள்ளன.

1) இப்போது எனக்கு ஒதுக்கப்பட்டதை நான் உறுதி செய்கிறேன்.

2) இப்போது ஒதுக்கப்பட்டதை நான் ஏற்கிறேன். ஆனால், எனது முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தால் அதை ஏற்று உறுதிசெய்கிறேன்.

3) இப்போது ஒதுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லை. அடுத்தகட்ட கலந்தாய்வுக்குச் சென்று, அதில் உள்ள காலி இடங்களுக்குப் பங்கேற்க விரும்புகிறேன்.

4) இப்போது ஒதுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லை. ஆனால், எனது முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தால் நான் அதை ஏற்று உறுதிசெய்கிறேன்.

5) இப்போது எனக்கு ஒதுக்கப்பட்டதை நான் நிராகரிக்கிறேன். நான் கலந்தாய்விலிருந்து வெளியேறுகிறேன். இனிமேல் நான் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதை அறிவேன். 

இந்த ஐந்து ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய வேண்டும். இந்த உறுதி செய்ததையும், பதிவுசெய்த மொபைல் எண்ணுக்குக் கடவுச்சொல் அனுப்பிவைக்கப்படும். அதை உள்ளீடுசெய்தால் Final Allotment கடிதம் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். 

பொறியியல் கலந்தாய்வு

விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறைப் படிப்புகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள்,  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பால் நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடிக் கலந்தாய்வாக நடைபெறும். 

தெரியாத நபர்களிடம் கலந்தாய்வுக்காக உருவாக்கப்பட்ட யூஸர் நேம், பாஸ்வேர்டு, மொபைல் எண்ணைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. கல்லூரிகளைத் தேர்வுசெய்யும் விருப்பப் பட்டியல் தயாரிக்கும்போது, தெரியாத நபர்களின் ஆலோசனைகளைப் பெறக் கூடாது. https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu என்ற இணையதள முகவரிகளை மட்டுமே பயன்படுத்தவும். எப்படிக் கலந்தாய்வு நடக்கும் என்பதற்கான குறும்படங்களையும் யூ டி-யூப்பில் https://www.youtube.com/c/TNEATamilnadu Engineering Admission பதிவேற்றியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். அதையும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004259779 என்ற எண்ணிலும், 044-2235 9901- 20 என்ற எண்ணிலும் அழைத்து விவரங்களைக் கேட்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்