திறமையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

கடின உழைப்புக்குக் கிடைக்கும் பரிசு அளப்பரியது!

திறமையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - பாடம் சொல்லும் கதை #MotivationStory

தன்னம்பிக்கைக் கதை

`அறிவு என்பதை நடைமுறைப்படுத்தாதவரை அதற்கு மதிப்பில்லை!’ என்று சொல்லியிருக்கிறார் `சிறுகதை மன்னன்’ என்று குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் (Anton Chekhov). பாடல், நடனம், இலக்கியம், ஓவியம்... என எந்தக் கலையாகவும் துறையாகவும் இருக்கட்டும்... ஒருவர் அதில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தால், அதை வெளிப்படுத்தினால் மட்டும்தான் அதற்கு மதிப்பிருக்கும்; கவனம் பெறும். அந்த  அறிவையும் மழுங்கவிடாமலிருக்க, தொடர் பயிற்சி செய்யவேண்டியது அவசியம். அதாவது கடின முயற்சி. அதுதான், அந்தக் கடின முயற்சிதான் ஒருவரின் அறிவை, திறமையை வெளியே கொண்டு வரும்; அவரை இன்னாரென்று உலகுக்கு அடையாளம் காட்டும்; மேலும் மேலும் உயர வைக்கும். அப்படிப்பட்ட விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பதை உரக்கச் சொல்கிற கதை ஒன்று உண்டு... 

ஓபரா இசைக்குழு

ஜெர்மனி... சீக்கிவில்லி (Cheekyville) என்கிற சிறு நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த ரயில். அதில் பயணம் செய்தவர்களில் பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் மனிதனாக இருந்தான் அவன்... பெயர் வில்லியம் வார்ப்லெர் (William Warbler).  அவன் அடிக்கடி அந்த ரயிலில் பயணம் செய்வது வழக்கம் என்பதால், பலருக்கும் அவனைத் தெரிந்திருந்தது. அவனிடம் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்தது. 

``இந்த சூட்கேஸோடதான் அவனைப் பார்க்க முடியும்’’ என்றார் தன் அருகிலிருந்தவரிடம் பயணி ஒருவர். வில்லியம் வார்ப்லெரிடம் இருந்த விநோதமாக இருந்த ஒரே பழக்கம் என்னவென்றால், யாருடனாவது அவன் பேசினால், சாதாரணமாகப் பேச மாட்டான். `ஓபரா’ (Opera) பாணியில் பதில் வரும். ஓபரா என்பது ஒரு நிகழ்த்து கலை. மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இன்றைக்கும் இருக்கும் ஓர் அற்புதக் கலை. இந்தக் கலையில் பாடலைப் பாடியபடியே நடிகர்கள் நடிப்பார்கள், நடனமாடுவார்கள், சண்டை போடுவார்கள்... எல்லாமும் செய்வார்கள். உச்சஸ்தாயி குரலில் பாடல் ஒலிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம். வில்லியம் வார்ப்லர், யாருடனாவது உரையாடும்போது ஓபரா பாணியைப் பின்பற்றினான். `குட் மார்னிங்’ என்பதை, `கூ... ட்... மா... ர்...னி...ங்...’ என்றால் எப்படியிருக்கும்? அப்படி. 

ஓபரா பாடகர்

முதன்முதலாகப் பார்ப்பவர்கள், `அவனுக்குத் தொண்டையில் ஏதோ பிரச்னை... அதனால்தான் அப்படிப் பேசுகிறான்’ என்று நினைத்தார்கள். ஒருவரிடம்கூட அவன் சாதாரணமாகப் பேசுவதேயில்லை. `என்னப்பா வார்ப்லெர்... சாப்டியா?’ என்று ஒருவர் கேட்டால், `ஓ... சா... ப்... டே...னே...’ என்று ஓபரா பாணியில்தான் அவனிடமிருந்து பதில் வரும். அதோடு, அவன் மற்றவர்களால் கேலி செய்யப்படும் அளவுக்கு மிகச் சாதாரணமான, பழைய உடைகளையே அணிந்திருந்தான். பேசுவதற்கு பதிலாக அவன் பாடுவது பலருக்கு வேடிக்கையாக இருக்கும். இப்படி அவனைப் பார்த்துப் பார்த்துப் பழகியவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது ஒரு நாள். நகரெங்கும் போஸ்டர்கள்... ஜெர்மனியிலேயே பிரபலமான ஒரு ஓபரா இசைக்குழுவில் வில்லியம் வார்ப்லெர் பாடப் போகிறான் என்று சொன்னது அந்த போஸ்டர். அந்த இசை நிகழ்ச்சி, ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெறப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

குறிப்பிட்ட நாளில் நடந்த அந்த `ஓபரா’ நிகழ்வு ஓர் அதிசயம். வார்ப்லெரை முன்பு அறிந்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். பிரமாதமாகப் பாடி, நடித்து, அத்தனை பேரையும் நெகிழ்ந்து போகச் செய்திருந்தான் வார்ப்லெர். நிகழ்ச்சி முடிந்ததும், வார்ப்லெரை பத்திரிகை நிருபர்கள் சிலர் பேட்டியெடுத்தார்கள்.  அவர்களுக்கு பதிலளித்தபோது, பழைய மாதிரி அவன் பாடவில்லை; தேர்ந்த, தெளிவான உச்சரிப்பில் நிறுத்தி, நிதானமாக பதில் சொன்னான். அவனையறிந்தவர்கள் அசந்து போனார்கள். `இந்த மாற்றம் எப்படிச் சாத்தியம்? எதைக் கேட்டாலும், பாடியே பதில் சொல்கிறவன் பேசுகிறானே!’ 

ஓபரா பாடகர்

அன்றைய தினத்திலிருந்து வார்ப்லெர் மாறிவிட்டான். மேடையில் மட்டும்தான் பாடுவான். அவனுடைய இந்த மாற்றம் குறித்து சிலர் சந்தேகப்பட்டார்கள்; சிலர் அவன் பைத்தியமாகிவிட்டானோ என்று நினைத்தார்கள். உண்மையில், அவர்களுக்கெல்லாம் அவன் கூடவேயிருக்கும் அந்த பெரிய சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அதனால்தான், அவனைப் பற்றிக் கண்டதையும் நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். 

அந்த சூட்கேஸுக்குள் ஒரு பெரிய கற்பாறை இருந்தது. அதில் வார்ப்லெர் தனக்குப் பாடக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் சொன்ன பொன்மொழியை பொறித்துவைத்திருந்தான். அந்தப் பொன்மொழி வாசகம்... `பயிற்சி செய்! உனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. எனவே, ஒவ்வொரு நொடியும் பயிற்சி செய்! வாய்ப்பு உடனே வரலாம், கொஞ்சம் தாமதமாகவும் வரலாம். எப்போதாவது பயிற்சி செய்வது என்கிற சிந்தனைக்கே இடம் கொடுக்காதே... கடினமாக உழை! தொடர்ந்து பயிற்சி செய்! நீ உனக்கான வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறாய். அது வந்துகொண்டிருக்கிறது...’ 

இந்த அறிவுரையைத் தன்னுடனே வைத்துக்கொண்டதோடு, அதைப் பின்பற்றியதால் வில்லியம் வார்ப்லெர் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தான். அதுவும் எப்படி? அது ஒரு காலை நேரம்... செய்தித்தாள் வாங்கப் போன வார்ப்லெர் இப்படிக் கேட்டிருக்கிறான்... ``ஒ... ரு... பே... ப்... ப... ர்...’ அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வந்த ஓபரா இயக்குநருக்கு, வார்ப்லெரின் இனிய, சங்கீதக் குரல் காதில் விழுந்திருக்கிறது! 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!