வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (03/07/2018)

கடைசி தொடர்பு:08:07 (03/07/2018)

மேக் இன் இந்தியா... லட்சங்களில் விலை குறைந்த கவாஸாகி நின்ஜா 300, ZX10R

தற்போது 4.27 லட்ச ரூபாய்க்கு (சென்னை ஆன்ரோடு விலை) விற்பனை செய்யப்படும் கவாஸாகி 'நின்ஜா 300', உள்நாட்டு உதிரிபாகங்களின் உதவியுடன் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு விலைக்குறைப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

`நின்ஜா 300...' கடந்த 2013-ம் ஆண்டில் அறிமுகமான இந்த பைக், `நின்ஜா 250' பைக்குக்கு மாற்றாகக் களம்கண்டது. தற்போது உலகளவில் `நின்ஜா 300' பைக்குக்கு மாற்றாக, `நின்ஜா 400' பைக்கை அறிமுகப்படுத்திவிட்டது கவாஸாகி நிறுவனம். ஆனால், இந்தியாவில் இரண்டு மாடல்களும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு இந்த இரு நின்ஜா-க்கள் எப்படி வருகின்றன?

கவாஸாகி நின்ஜா

தாய்லாந்திலிருந்து CKD முறையில் `நின்ஜா 400' பைக்கை, பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்கிறது கவாஸாகி. ஆனால், நின்ஜா 300 சி.சி. பைக்கை, புனேவில் இருக்கும் தனது தொழிற்சாலையில் அந்த நிறுவனம் அசெம்பிள் செய்துவருகிறது. இதனாலேயே இந்த இரு பைக்குகளுக்கும் இடையேயான விலை வித்தியாசம் 1.3 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கிறது. தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு `நின்ஜா 300' பைக்கை தயாரிக்க உள்ளது கவாஸாகி. இதில் 300 சி.சி. பைக்கின் விலை 1 லட்சம் ரூபாய் வரை விலை குறைய இருக்கிறது. 

`நின்ஜா 300' பைக்கின் போட்டியாளர்கள் யார்?

Kawasaki Ninja

தற்போது 4.27 லட்சம் ரூபாய்க்கு (சென்னை ஆன்ரோடு விலை) விற்பனை செய்யப்படும் `கவாஸாகி நின்ஜா 300' பைக்கின் விலை 1 லட்சம் ரூபாய் வரை விலை குறைவதால் போட்டியாளர்கள் பயத்தில் இருக்கிறார்கள். கேடிஎம் RC390, டிவிஎஸ் அப்பாச்சி RR310, யமஹா YZF-R3 ஆகியவற்றுடன், வருகிற ஜூலை 18 அன்று வெளியாகும் பிஎம்டபிள்யூ G310R பைக்குடன் போட்டிபோடும் அளவுக்கு, `நின்ஜா 300' பைக்கின் விலை இருக்கும்.

Localisation செய்யப்படும் பாகங்கள் என்ன?

Kawasaki Ninja

ஃபுல் ஃபேரிங் மற்றும் பாடி பேனல்கள், லைட்ஸ், எலெக்ட்ரிக்கல் வொயரிங், பேட்டரி, அலாய் வீல்கள், டயர்கள், சில இன்ஜின் பாகங்கள் ஆகியவற்றை இந்தியாவில் இருக்கும் உதிரிபாக உற்பத்தியாளர்களிடமிருந்து பெறும் முடிவில் கவாஸாகி ஈடுபட்டுள்ளது. இதனால் `நின்ஜா 300' பைக்கின் விலை குறைவது ஒருபுறம் என்றால், பைக்கின் உதிரிபாகங்களின் விலையும் கட்டுக்குள் வரும் என நம்பலாம்.
 

இந்த முறையாவது பைக்கில் ஏபிஎஸ் இருக்குமா?

Kawasaki Ninja

வருகிற ஏப்ரல் 1, 2019 முதல் 125சிசிக்கு மேற்பட்ட அனைத்து டூ-வீலர்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதை உணர்ந்திருக்கும் கவாஸாகி, முதலில் அதிரடியான விலையில் ஏபிஎஸ் இல்லாத `நின்ஜா 300' பைக்கைக் களமிறக்கி, பிறகு ஏபிஎஸ்கொண்ட `நின்ஜா 300' பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரலாம். ஆனால், முதலிலேயே ஏபிஎஸ் மாடலை அறிமுகப்படுத்துவது, போட்டியாளர்களுக்கு நெருக்கடி தர உதவும். 


`நின்ஜா 300' பைக்கின் டெக்னிக்கல் விவரங்கள்:

Kawasaki Ninja

172 கிலோ எடையுள்ள `நின்ஜா 300' பைக்கில் இருப்பது, 39bhp பவர் மற்றும் 2.8kgm டார்க்கை வெளிப்படுத்தும் 296சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்; ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், இந்த லிக்விட் கூல்டு இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக், 17 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக்கொண்டிருக்கிறது. ஸ்டீல் டியூப்லர் சேஸியைக்கொண்ட `நின்ஜா 300' பைக்கின் முன்பக்கத்தில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 290மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் - 110/70 R17 டியூப்லெஸ் டயர் மற்றும் பின்பக்கத்தில் Bottom Link மோனோஷாக் சஸ்பென்ஷன் - 220மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக் - 150/60 R17 டியூப்லெஸ் டயர் போன்ற மெக்கானிக்கல் பாகங்கள் இடம்பெற்றுள்ளன.
 

Localised நின்ஜா 300 பைக்கின் அறிமுகம் எப்போது?

Kawasaki Ninja

பைக் ஆர்வலர்களுக்குத் தனது தீபாவளிப் பரிசாக, உள்நாட்டு உதிரிபாகங்களைக்கொண்ட `நின்ஜா 300' பைக்கை, அசத்தலான விலையில் கவாஸாகி வெளியிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஒருவேளை 5.6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நின்ஜா 400 பைக்கின் விலையில் பாதி அளவுக்கு இந்த பைக் வந்தால், 300சிசி பிரிவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாக நின்ஜா 300 திகழ்வதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஏனெனில், அந்த செக்மென்ட்டின் பழைய மாடலாக இருந்தாலும் பர்ஃபாமன்ஸ் மற்றும் தொழில்நுட்பரீதியில் போட்டியாளர்களுக்கு சவால்விடக்கூடிய திறன், இந்த கவாஸாகி பைக்குக்கு இருக்கிறது என்பதே நிதர்சனம்.


பிட் நியூஸ்:

Kawasaki Ninja

இந்நாள் வரையில், தனது 1000சிசி சூப்பர் ஸ்போர்ட் பைக்குகளான நின்ஜா ZX-10R மற்றும் நின்ஜா ZX-10RR ஆகியவற்றை, CBU முறையில் முழு பைக்காக இந்தியாவுக்கு இறக்குமதி செய்தே விற்பனை செய்துவந்தது கவாஸாகி. ஆனால், தற்போது CKD முறையில் இந்த பைக்குகளைப் பாகங்களாக இறக்குமதி செய்து, புனேவில் அசெம்பிள் செய்ய அந்த நிறுவனம் தொடங்கிவிட்டது. இதனால், முறையே 18.8 லட்சம் மற்றும் 21.9 லட்சம் விலையைக்கொண்டிருந்த ZX-10R மற்றும் ZX-10RR பைக்குகளின் விலை, தற்போது முறையே 12.8 லட்சம் மற்றும் 16.1 லட்சம் என்றளவுக்குக் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

Kawasaki Ninja

இந்த 6 லட்சம் ரூபாய் விலைக் குறைப்பால், `இந்தியாவின் விலை குறைவான 1000சிசி சூப்பர் ஸ்போர்ட் பைக்' என்ற பெருமையை, இந்த இரு பைக்குகள் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்த அறிமுக விலைகள், ஜூலை மாத இறுதி வரை மட்டுமே இருக்கும் எனவும், பிறகு விலை அதிகரிக்கப்படும் என கவாஸாகி தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்