Published:Updated:

தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

Published:Updated:
தொடர் இழப்புகளைக் கடந்து தேன் தயாரிப்பில் கோடி லாபம் ஈட்டும் ஜோஸ்பின்!

கணவர், மகள் என்று அடுத்தடுத்து இழக்க நேர்ந்த ஒரு பெண் எவ்வளவு முடங்கிப் போவார்? ஆனால், அத்தனை சோகங்களையும் தாண்டி, வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து, தேனீ வளர்ப்பில் வெற்றிக்கொடிநாட்டிய பெண்ணாக உருவாகியிருக்கிறார், ஜோஸ்பின். `வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி.. குடும்பத்துக்கு ஆயுள் கெட்டி' என்று தேனீ வளர்ப்புப் பற்றி பலருக்கும் பாடம் எடுத்து, பல தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறார்.

மதுரை மாவட்டம், கடச்சனேந்தலைச் சேர்ந்தவர், ஜோஸ்பின். இயற்கை முறையில் தேன் சேகரித்து வருகிறார். தென் இந்தியாவிலேயே நாவல் பூவில் தேன் சேகரிக்கும் முதல் ஆளாக இருக்கிறார். கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த விழாவில் அவரைச் சந்தித்துப் பேசினோம். தோல்விகளும் இழப்புகளும் சூழப்பட்ட அவரது வாழ்வில், வலிகளே அதிகம். ஆனால், தனது கடின உழைப்பால் வெற்றிபெற்றுள்ளார்.


 

``நான் பிறந்தது சிவகங்கை. வாக்கப்பட்டு வந்த இடத்துல வறுமை. கணவர் வருமானம் குடும்பம் நடத்த போதலை. அதனால், `சுயதொழில் பண்ணலாம்'னு, மதுரை வேளாண் அறிவியல் கல்லூரியில் காளான், தேனீ வளர்ப்புப் பயிற்சியில் கலந்துகிட்டேன். 10 தேனீ பெட்டிகளோடு, இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன். சிவகங்கையில் உள்ள என் தங்கை ராஜரிதா தோட்டத்தில்தான் தேனீ பெட்டிகளை வெச்சேன். சனி, ஞாயிறு அங்கே போய் தேனைச் சேகரிப்பேன். ஆரம்பத்தில் தேன் சேரலை. விடாமுயற்சியோடு செயல்பட்டேன். அந்தச் சமயத்தில்தான் தமிழக அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்தை ஆரம்பிச்சது. அரசுத் தரப்பிலிருந்து என் தேனீ வளர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டு வந்தாங்க. `தேனீக்கள் கொட்டாம தேனீக்களை வளர்க்க முடியுதா?'னு கேட்டாங்க. அதோடு, விவசாயிகளுக்குத் தொழில் விழிப்புஉணர்வு கொடுக்க, 63 தேனீ பெட்டிகளை வாங்கிட்டுப் போனாங்க. அப்போதான், இதையே தொழிலாப் பண்ணலாம் என்கிற நம்பிக்கை வந்துச்சு. 


 

ஒரு லட்சம் முதலீட்டில் 100 தேனீ பெட்டிகளை உருவாக்கினேன். அந்த நேரத்தில் கணவர் செல்வராஜ் உடல்நலமில்லாமல் திடீர்ன்னு இறந்துட்டார். அந்த அதிர்ச்சி விலகறதுக்குள்ளே என் 13 வயசு மகள் பிரபாவும் கேன்ஸரில் இறந்துட்டா. எனக்கு உலகமே வெறுத்துப் போச்சு. வீட்டுக்குள் முடங்கிட்டேன். என் தங்கை தோட்டத்தில் நான் அமைச்ச 100 தேனீ பெட்டிகளும் பராமரிக்கப்படாமல், வீணாகப் போய் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம். கணவர், மகள், தொழில் என எல்லாம் இழந்து ஸ்தம்பித்து நின்னேன். என் மகன் விஜய் கண் முன்னாடி வந்ததால், அவனுக்காக வாழணும்னு, வங்கியில் 50 சதவிகித மானியத்தில் ஒன்பதரை லட்சம் கடன் வாங்கினேன். 1000 தேனீ  பெட்டிகளைத் தயார்செய்தோம். மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சூரியகாந்தி பூ தோட்டங்களில் வைத்தேன். சிவகங்கை மாவட்ட குளம், கம்மாய்களில் வளர்ந்து கிடக்கும் கணக்கில்லாத நாவல் மரங்கள் உள்ள பகுதிகளில் தேனீ பெட்டிகளை வைத்தேன். இப்படித் தென் இந்தியாவில் முதன்முதலாக தேன் எடுத்தது நாங்கதான்'' என்கிற ஜோஸ்பின் வெற்றியை நோக்கிப் பயணித்துள்ளார்.


 

20 நாள்களுக்கு ஒருமுறை போய் தேனைச் சேகரிச்சுட்டு வருவோம். இதற்கிடையில், நம்மாழ்வார் அய்யா தொடர்பு கிடைச்சு, தேனீ வளர்ப்புப் பயிற்சி குறித்த கூட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சேன். அவரைச் சந்தித்த பிறகு, என்னால் தேனீ வளர்ப்பில் உச்சம் தொட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுச்சு. தேன் கணிசமாகக் கிடைச்சாலும் சந்தைப்படுத்துவது பெரிய பிரச்னையாக இருந்துச்சு. நம்மாழ்வாரின் வானகத் தொடர்பு இருந்ததால்,இயற்கை குறித்து இயங்கும் பலரது தொடர்பு கிடைச்சது. அவர்கள் மூலமாக தமிழகம் முழுக்க ஓரளவு தேனை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். 

நாவல், சூரியகாந்தி, வேப்பம் பூ, முருங்கைப் பூ, மலைத்தேன், கொம்புத்தேன், கொசுத்தேன் என 11 வகையான தேன்களை எடுக்கிறோம். துளசிச் சாறு, பூண்டுச் சாறு, இஞ்சி, மாம்பழம் என மதிப்புக்கூட்டப்பட்ட 22 வகையான தேன்களாவும் மாற்றுகிறோம். தமிழகம் முழுக்க 300 கடைகளுக்கு விற்பனை செய்கிறோம். 2008-ம் ஆண்டு, மதுரை கொட்டையப்பட்டியில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கினோம். அப்புறம் மதுரையில் மூன்று தோட்டங்கள் வாங்கினோம். இப்போ வங்கி இன்னும் இரண்டு கோடி கடன் கொடுத்திருக்கு.


 

`விபிஸ் இயற்கை தேனீ பண்ணை' என கம்பெனி தொடங்கினேன். எங்க கம்பெனியில 50 பேர் வேலை பார்க்கிறாங்க. தேனீ வளர்ப்பு பற்றி மாணவர்களுக்கு, தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பயிற்சி கொடுக்கிறேன். தவிர, தேனீ வளர்ப்பு பற்றி இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கேன். மாநிலம் முழுக்க விழிப்புஉணர்வு பண்றேன். எங்க கம்பெனி சார்பாக, தேனீ வளர்க்க விரும்புபவர்களுக்கு, ஸ்டாண்டு, முகவலை, ஸ்மோக்கர், தேன் எடுக்கும் மெஷின், பெட்டி, பிரேம் என எல்லா உபகரணங்களையும் தயாரித்து விற்பனை செய்யறோம். வருஷத்துக்கு மூன்றரை கோடி டர்ன் ஓவர் பண்றோம். லாபமாக  வருஷத்துக்கு 30 லட்சம் வருது.

இந்த வெற்றி சாதாரணமாக் கிடைச்சுடலை. கணவன், மகளை இழந்த துக்கம், தொழில் சவால்களை மீறியே வெற்றி பெற்றிருக்கேன். நம்மாழ்வார் எனக்கு வழித்துணையாக இருந்தார். 5 தேசிய விருதுகளை வாங்கியிருக்கேன். அரசு, தனியார் என்று தந்த 36 மாநில விருதுகளை தேனீ வளர்ப்புக்காக வாங்கியிருக்கேன். `இந்திய அளவில் சிறந்த பெண் தேனீ வளர்ப்பாளர்' என்கிற விருதையும் வாங்கியிருக்கேன். இதுவரை 1000 புதிய தேனீ வளர்ப்பாளர்களை உருவாக்கியிருக்கேன். சீக்கிரமே மெஷினரி மூலம் தேன் வளர்ப்பைப் பண்ணப்போறோம். தேனீக்கள் வளர்த்தால், அதைச் சுற்றியுள்ள மரங்கள், பயிர்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். என் வீட்டில் 25 தேனீ பெட்டிகளை வைத்துள்ளேன். அதனால், அருகில் உள்ளவர்களின் வீடுகளில் எலுமிச்சை, மாமரங்கள் அதிக காய்களை காய்ப்பதாகச் சொல்றாங்க. எனக்கும் அன்போடு கொடுப்பாங்க'' என்கிற ஜோஸ்பின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

``மலருக்கும் மலருக்கும் மணமுடிக்கும் வேலையைத் தேனீக்கள் செய்கின்றன.  


 

அதாவது மகரந்தச் சேர்க்கையை அதிகமாகச் செய்கின்றன. `பழுப்புப் புரட்சி' பெயரில் இதை முன்னெடுக்கும் நான், `வீட்டுக்கொரு தேனீ  பெட்டி.. குடும்பத்துக்கு ஆயுள் கெட்டி' என்கிற கோஷத்தையும் முன்வைக்கிறேன். பிறந்த குழந்தைக்குத் தேன் அவ்வளவு நல்லது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் குழந்தைகளுக்குத் தேனை கொடுத்துவந்தால் காய்ச்சல் வராது. எதிர்ப்புச் சக்தி, ஞாபக சக்தி அதிகரிக்கும். அறிவு வளர்ச்சி நல்லா இருக்கும். சுடுநீரில் தேனைக் கலந்து குடித்தால், உடல் எடை குறையும். செல்கள் அதிகம் சிதிலமடையாது. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தேனை அவசியம் உணவில் சேர்த்துக்கணும். இன்சுலின் சுரப்பியைத் தூண்டுவதால்,சர்க்கரை வியாதி வராது. கல்லீரல், கணையத்தை வலுவாக்கும். முக்கியமா தேன் இதயத்துக்கு நல்லது. `பீ வெனம் தெரபி' என்கிற பெயரில் செய்யப்படும் தேனீயை உடலில் கொட்டவிடுவது அவ்வளவு உடல் பிரச்னைகளை தீர்க்கும். மூட்டுவலிக்குத் தேனீக்களை கொட்டவிடுகிறார்கள். இது சீனா, அமெரிக்கா, கேரளா போன்ற இடங்களில் ஃபீஸ் வாங்குகிறார்கள். ஆனால், நான் இலவசமாகவே தேனீக்களை விட்டு கொட்டவிடும் தெரபியைச் செய்கிறேன். தேனீ விஷம் ஆயுளைக் கூட்டும். நரம்பு பிரச்னைகள், வாதநோய், பிரஷர் உள்ளிட்ட பிரச்னைகள் இந்தத் தேனீக்களை கொட்டவிடுவதால் தடுக்கப்படும். இப்படிப் பல நன்மைகள் கிடைக்குது.

ஆனால், தேனை உணவில் சேர்த்துக்க பலரும் தயங்கும் நிலையே உள்ளது. லாபம் தரவல்ல இந்தத் தேனீ வளர்ப்பு தொழிலைச் செய்ய பலரும் முன்வர்றதில்லை. தேனீ வளர்க்கும் தொழிலில் பலரையும் ஈடுபடுத்தவும், தேனை அனைவரது இல்லத்திலும் உணவாக மாற்றவும் எனது விழிப்புஉணர்வு தொடர்ந்து நடக்கும். நம்மாழ்வார் அய்யா வழியில் எல்லோரையும் இயற்கைக்கு மாற்றியே தீருவேன்" என்றார் நம்பிக்கையாக!

`ஆணிற்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!' என்ற பாரதியின் வரிகள் நம் மனக்கண் முன்னால் வந்துபோனது. வாழ்த்துகள் ஜோஸ்பின்!