எந்திரன் 2.0, தமிழ்ப் படம் 2.0 காத்திருக்க... வந்துவிட்டது ஸ்கோடாவின் இந்தியா 2.0

எந்திரன் 2.0, தமிழ்ப் படம் 2.0 வரிசையில் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரிய முயற்சி ஸ்கோடாவின் இந்தியா 2.0. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் காணவில்லை என்பதால் முடிவெடுக்கும் மொத்த பொறுப்பையும் தனது துணை நிறுவனமாக ஸ்கோடாவிடம் விட்டுவிட்டது.

ஸ்கோடா Vision X

இதன் மூலம், ஸ்கோடாவின் MQB A0- IN பிளாட்ஃபார்மை அடிப்படையாக வைத்து இந்தியாவுக்கென பிரத்தியேகமாக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார்கள் தயாராகப்போகிறது. தற்போது இந்நிறுவனங்களின் கார்கள் இறக்குமதி செய்யப்படுவதால் விலை உயர்வாக உள்ளது. ஆனால், 2.0 திட்டத்தின் மூலம் 90 சதவிகித வாகனங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்போகிறார்கள். தற்போது ஃபோக்ஸ்வாகனின் புனோ தயாரிப்பு தொழிற்சாலையை ஸ்கோடா நிறுவனம் முழுமையாகப் பயன்படுத்தப்போகிறது. மேலும், MQB A0- IN பிளாட்ஃபார்மில் கார்களை தயாரிக்க புதிய புரொடக்‌ஷன் லைனையும் உருவாக்கப்போகிறார்கள். இதன் மூலம் மற்ற நாடுகளில் விற்கப்படும் ஃபோக்ஸ்வாகனின் 1.0 லிட்டர்  TSI பெட்ரோல் இன்ஜின் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாராகப்போகிறது. இந்த இன்ஜின் ஹேட்ச்பேக் கார்களுக்கு 94 bhp பவரிலும், ஸ்கோடா எஸ்யூவி கார்களுக்கு 115 bhp பவரிலும் வரப்போகிறது. இந்தக் கூட்டணியின் முதல் காராக  Skoda Vision X கான்செப்டை அடிப்படையாக வைத்து கிரெட்டாவுக்கு போட்டியாக ஒரு எஸ்யூவி வரப்போகிறது. மேலும் MQB A0- IN பிளாட்ஃபார்மில் பல விதமான பாடி டைப்புகளைப் பயன்படுத்த முடியும் என்பதால் எதிர்காலத்தில் ஹேட்ச்பேக், செடான் கார்களும் இதே பிளாட்ஃபார்மில் வர வாய்ப்புகள் உண்டு.

ஃபோக்ஸ்வாகன் டி கிராஸ்

2020-ன் இரண்டாம் பாதியில் தங்களது முதல் காரை வெளியிடப்போவதாக ஸ்கோடா நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் புதிதாகப் புனோவில் இன்ஜினீயரிங் சென்டரையும் திறக்கவுள்ளது. 2.0 புராஜெக்ட்டுக்கு மொத்தம் 7,900 கோடியைச் செலவு செய்கிறது ஃபோக்ஸ்வாகன். ஸ்கோடா கார்களின் தரம் உயர்வாக இருந்தாலும், அதற்கு ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் அதிகமாக இல்லை. இதனால் கார்கள் விற்பனையாவது குறைவாகவே உள்ளது. இந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களை அதிகம் உருவாக்கப்போகிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!