வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:38 (07/07/2018)

''டெய்லி நியூஸ் பார்த்துட்டு அந்தக் கட்சி ஆபீஸ் முன்னாடி கொடி விப்பேன்!'' - அனைத்துக் கட்சிக்கொடி விற்கும் ராணி

`வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?' இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனதில் அந்தப் பெண்மணிதான் வந்து செல்வார். குறிப்பிட்ட கட்சி அலுவலகத்தைக் கடந்து வருகிற வேளையில் அந்த அம்மாவை நான் பார்த்திருக்கிறேன். மழையோ வெயிலோ...கையில் சம்பந்தப்பட்ட கட்சியின் கொடிகள் நிறைந்திருக்க... அவற்றை விற்றுக்கொண்டிருப்பார். சரி அவர் அந்தக் கட்சிக்காரர் போல என்று கடந்திருக்கிறேன். பல கட்சி அலுவலகங்களின் வாசலில் அவரைப் பார்த்த பிறகுதான் அவர் கட்சிக் கொடிகளை விற்கிறவர் என்றும் பெயர் ராணி என்றும் தெரிந்தது. உடனே அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. 

ராணி

சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த வெயில் வேளை அது. விஜயகாந்த் கட்சி அலுவலகத்தின் வாசலில் அந்தக் கட்சியின் பேட்ஜ், கட்சிக்கொடிகள், விஜயகாந்தின் முகம் பதிக்கப்பட்ட பேனா ஆகியவற்றைக் கடைப்பரப்பி விற்றுக்கொண்டிருந்தார் ராணி அம்மா. வயது 62 ஆகிறது. பேச ஆரம்பித்ததுமே பல நாள் பழகியவர் போலப் பேச ஆரம்பித்தார்.

``இது என் வீட்டுக்காரர் செஞ்சுக்கிட்டிருந்த தொழிலும்மா. மெஷின்ல கட்சிக் கொடிகளை தயாரிக்கிற தொழில்ல இருந்தார் என் வீட்டுக்காரர். அவர்கிட்ட ஹோல்சேலுல கொடிகள், பேட்ஜ்கள் வாங்கினவங்க எல்லாம் காசு கொடுக்காம ஏமாத்தினதுனால பெருத்த நஷ்டமாயிடுச்சு. வாழ்க்கையை ஓட்டணுமே... `பேசாம கடை போடலாம்டி'னு என் வீட்டுக்காரர் சொன்னதைக் கேட்டு கட்சிக்கொடி விக்கிற கடை போட்டோம். அந்தா இந்தான்னு இதோ... 40 வருஷமாகிடுச்சு.'' என்றவரிடம் 'உங்க வீட்டுக்காரர் பேர் என்னம்மா' என்றேன். '' எஸ்.கே. லோகநாதன்'' என்று இனிஷியலுடன் கணவர் பெயரைச் சொல்கிறார். 

``எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. பொண்ணை என் தம்பிக்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டேன். பையனுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. வீட்டுக்காரர் ஹார்ட் அட்டாக்ல இறந்து 3 வருஷமாயிடுச்சு. பையன் சம்பாதிக்கிறது அவன் குடும்பத்துக்கே சரியா இருக்கு. அவன்கிட்டயோ என் மகள்கிட்டயோ போய் `என்னைப் பார்த்துக்கன்னு' அதிகாரமாக் கேட்க முடியாதில்லையா? இருக்கவே இருக்கு வீட்டுக்காரரு கத்துக்கொடுத்துட்டு போன தொழிலு. இப்ப வரைக்கும் எனக்குக் கஞ்சி ஊத்துறது கட்சிக்கொடி யாவாரம்தான்'' என்கிற ராணியம்மா, தினமும் பேப்பரில் எந்தக் கட்சியில் இன்றைக்குப் பொதுக்குழு கூடுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தக் கட்சி அலுவலகத்துக்கு, அந்தக் கட்சியின் கொடி மற்றும் பேட்ஜ்களுடன் கடை போட சென்று விடுவாராம். `சரி என்னென்ன பத்திரிகை படிப்பீங்க' என்றேன்

ராணியம்மா

``தினமும் காலையில தினத்தந்தி, சாயந்தரம் மாலை மலர், முக்கியமா முரசொலி பேப்பர் வாங்கி படிச்சிடுவேன். நமது எம்.ஜி.ஆர். எப்பவாவதுதான் வாங்குவேன்'' என்றவரிடம், `ஏன் ஜெயலலிதா மேடத்தைப் பிடிக்காதா...' என்றேன் குறும்பாக.

``அப்படியில்லம்மா, எனக்குக் கலைஞரையும், ஸ்டாலினையும் ரொம்பப் பிடிக்கும் அதான்...'' என்று வெட்கச் சிரிப்பு சிரித்தார். `கலைஞரிடம் பேசியிருக்கிறீர்களா...' என்றால், ``அப்பா, புள்ளை ரெண்டு பேர்கிட்டேயும் பேசினதில்ல. பக்கத்து இருக்கிறவங்க அவங்களை நெருங்கவே விட மாட்டாங்க. ஆனா கட்சி ஆபீஸ் போறதுனால அவங்க போறப்ப வர்றப்ப பார்த்திருக்கேன். ரொம்ப சந்தோஷப்பட்டுக்குவேன். அவ்வளவுதான் நம்மால முடியும். ஆனா, வைகோ அண்ணன்கிட்ட  நல்லாப் பேசுவேன். அவரு கட்சி ஆபீஸுக்கு வந்தார்னா, அவர் ஆபீஸ் ரூம் வரைக்கும் போய் பேசுவேன். தங்கச்சின்னுதான் என்னைக் கூப்பிடுவார். ரொம்ப அன்பான மனுசன். ஒரு தடவை அவர்கூட சேர்ந்து கன்னியாகுமரி வரைக்கும் நடைப்பயணம்கூட போயிருக்கேன்'' என்றவர், வைகோ தனக்குச் செய்த இரண்டு உதவிகளை நன்றியுடன் குறிப்பிடுகிறார். 

``போன வருசம் எனக்கு வயித்துல கட்டி வந்து ரொம்ப உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. ஜி.ஹெச்.சுக்குப் போயி பார்த்ததுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. அதிலேயும் எனக்கு முன்னாடி நிறையப் பேர் வெயிட்டிங்க்ல இருந்ததால உடனே ஆபரேஷன் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு வயித்து வலி தாங்க முடியாம வைகோ அண்ணனைப் போய் பார்த்து விஷயத்தைச் சொன்னேன். உடனே என் கண்ணு முன்னாடியே ஹாஸ்பிட்டல் டீனுக்கு போன் போட்டு, `என் தங்கச்சிக்கு சிகிச்சைப் பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. கூடவே, அவரு கைப்பட ஒரு லெட்டரும் தந்தாரு. அந்த லெட்டர்லகூட என் உடன் பிறவாத சகோதரி ராணின்னுதான் எழுதியிருந்தார். நான் கிளம்பும்போது என் கையில் 5000 ரூபாய் பணமும் கொடுத்தாரு. இப்ப ஆபரேஷன் நடந்து  நல்லா இருக்கேன். 

``இந்தப் பிரச்னைக்கு முன்னாடி, ஒரு தடவை என் கையில் வெள்ளையாத் திட்டுத்திட்டா வந்துடுச்சு. வைகோ அண்ணன்கிட்ட போய் சொன்னேன். ஒரு தோல் டாக்டருக்கு லெட்டர் கொடுத்தாரு. அவரைப் போய் பார்த்து மருந்து வாங்கிட்டு என் கையில இருந்த காசை கொடுக்கப் போனேன். ஆனா, அந்த டாக்டர், இந்த லெட்டர்ல உங்ககிட்ட பணம் வாங்க வேண்டாம்னு குறிப்பிட்டிருக்காரும்மா. பணத்தை அவர் தரேன்னு சொல்லியிருக்காருன்னு சொன்னாரு. அவரு வெறும் வாயளவுல என்னைத் தங்கச்சின்னு சொல்லலம்மா. கட்சி ஆபீஸ் வாசல்ல என்னைப் பார்த்துட்டாருன்னா,  பையன்பத்தி விசாரிப்பாரு. குடும்ப விஷயம் வரைக்கும் விசாரிப்பாரு. அவரு மாதிரி குடும்பம் வரைக்கும் பேசுற அரசியல்வாதியை நான் பார்த்ததில்லம்மா'' என்று நெகிழ்ச்சியாக முடித்தார் ராணி அம்மா.

 


டிரெண்டிங் @ விகடன்