வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (09/07/2018)

கடைசி தொடர்பு:14:02 (09/07/2018)

'ஃப்ளைட்ல ஆக்சுவலா இதுதான் நடந்தது!'' - தெரிவிக்கிறார் சின்னத்திரை நடிகை

பாலியல் தொல்லை,பலாத்காரமென்று நிறையச் செய்திகள் வருகிறதென்று கோவத்துடன் பேச ஆரம்பிக்கிறார்.

 

"நாம என்ன சீண்டினாலும் என்ன பண்ணாலும் சமூகத்துக்குப் பயந்துட்டு, பெண்கள் வெளியே சொல்லமாட்டங்கன்னு பல ஆண்கள் மனதில் பதிஞ்சிருக்கு. அதுதான் அவங்களைத் தவறு செய்ய தைரியமூட்டுது. நியூஸ் பேப்பரைத் திறந்தாலே, பாலியல் தொல்லை, பலாத்காரம் என ஒருநாளில் எத்தனை செய்திகள்'' எனக் கோபத்துடன் பேசுகிறார் இந்த நடிகை . 

பெண்

விமானத்தில் தன்னை மறைமுகமாக வீடியோ எடுத்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை தட்டிக் கேட்டிருக்கிறார் . இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் வெளியாகிப் பரபரப்பானது. 'என்ன நடந்தது?' என அவரிடமே கேட்டோம். முதலில், 'மீடியாவிடம் பேசவே பிடிக்கவில்லை' என ஆதங்கப்பட்டவர், பிறகு நடந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

''நடிகை என்றாலே எல்லோரும் தவறான கோணத்தில் பார்க்கிறாங்க. நாங்களும் பெண்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு. என் அம்மா மூன்று நாள்களுக்கு முன்னாடி ஐதராபாத்தில் தவறிட்டாங்க. அங்கே போய் இறுதிச் சடங்குகளை முடிச்சுட்டு ரொம்ப மன அழுத்தத்துடன் சென்னைக்கு விமானம் ஏறினேன். எனக்கு முன் சீட்டில் சுமார் 45 வயதுள்ள ஒருத்தர் என்னையே பார்த்துட்டிருந்தார். சரி, சீரியலில் பார்த்திருப்பார். அதனால் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்னு இயல்பா எடுத்துக்கிட்டேன். களைப்பில் நல்லா தூங்கிட்டேன். திடீர்னு கண் முழிச்சு பார்த்தப்போ அந்த ஆள் செல்ஃபி எடுத்துட்டிருந்தார். அந்த பிரேமில் நானும் இருக்கிறதை கவனிச்சேன். அப்பவும், செலிபிரிட்டியோடு சேர்த்து எடுத்துப்பாங்கதான். ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு எடுக்கலாமேனுதான் நெருடலோடு சும்மா இருந்தேன். 

பெண்

 

கொஞ்ச நேரத்துக்குப் அப்புறம் அவர் செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டார். நான் கவனிக்கிறது தெரிஞ்சதும் குனிஞ்சுக்கிறது, அப்புறம் எடுக்கிறதுனு என தொடர்ச்சியா செய்துட்டே இருந்தார். இனியும்  அமைதியாக இருக்கிறது சரியில்லைன்னு, 'என்ன பண்றீங்க? ஏன் போட்டோ எடுக்கறீங்?'னு கேட்டேன். அதுக்கு அவர், 'நான் செல்ஃபி எடுத்துக்கிறேன் உங்களுக்கு என்ன பிரச்சனை?'னு சொன்னார். அப்புறம், நான் உஷாராகவே இருந்தேன். சென்னையில் வந்து இறங்கினதும், பிக்கப் பண்ண  வர்றதா சொன்னதால், ஏர்போட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்பவும் அந்த ஆள் என்னை ஃபாலோ செய்யறதும், வீடியோ எடுக்கிறதுமா இருந்தார். கோபத்தோடு "உங்க செல்லைக் கொடுங்க. நான் பார்க்கணும்' சொன்னேன். அந்த நேரத்தில் மகனும் வந்துவிட, ஏர்போர்ட் போலீஸில் சொல்லி, அந்த நபரின் செல்லை வாங்கிப் பார்த்தோம்'' என்ற அவர், விரக்தியுடன் தொடர்ந்தார்.

''அதில், என்னைப் பலவித கோணங்களில் வீடியோ எடுத்திருக்கிறதைப் பார்த்து அதிர்ச்சியா இருந்துச்சு. பின் சீட்டில் இருந்ததால், ஜூம் செஞ்சு அவருடன் சேர்ந்து டிராவல் பண்ற மாதிரி வீடியோ எடுத்திருக்கார். மத்தவங்க செல்ஃபி எடுத்துக்கும்போதும் அவங்க பிரேமில் நாம வரோமான்னு கவனிக்கணும்னு அப்போதான் புரிஞ்சது. அந்தப் படங்களையும் வீடியோவையும் பார்த்த  என் மகன் கோபப்பட்டான். அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அது கைகலப்பா ஆச்சு. என்ன பிரச்னை என முழுசா புரிஞ்சுக்காமலே சுற்றி இருந்தவங்க கூடிட்டாங்க. 'சினிமாக்காரங்கன்னா யார் மேலேயும் கை நீட்டிடுவீங்களா?'னு  என் மகனை அடிக்க வந்துட்டாங்க. போலீஸ்தான் சூழலை அமைதியாக்கினாங்க. நடந்துட்டிருந்த வாக்குவாத்தை ஒரு தனியார் டிவி வீடியோ எடுத்ததையும், ஒளிபரப்பினதையும் அப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டோம். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு, அவங்க டி.ஆர்.பிக்காக எங்களைப் பலியாக்கினதும் பெரிய மன உளைச்சல் ஆகிடுச்சு. என் அனுமதியில்லாமல் வீடியோ எடுத்த ஒரு தனி நபருக்கும், என்ன நடந்தது என விசாரிக்காமலே ஒளிபரப்பின அந்த டிவிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? மீடியாவை மக்கள் அதிகமா நம்பறாங்க. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பொறுப்புணர்வு மீடியாவுக்கு இருக்கணும். உங்க சுயநலத்துக்காக விசாரிக்காமலே எதை வேண்டுமானாலும் செய்தியாக்கி காட்டுவீங்களா? இதே இடத்தில் உங்கள் அம்மா, சகோதரி இருந்திருந்தாலும் இதையே செய்வீங்களா?'' எனக் கொதிக்கிறார்.

ஓரிரு நிமிட அமைதிக்குப் பிறகு, ''அந்த நபர் வீடியோ எடுத்த விஷயத்தை கண்டுக்காமல் நான் அமைதியாக இருந்திருந்தால் விஷயம் வெளியே வந்திருக்காது. ஆனால், நிச்சயம் நாளைக்கு இன்னொரு பெண்ணையும் அப்படி எடுப்பான். தப்பு பண்ணாத நாம எதுக்கு பயப்படணும்னுதான் தட்டி கேட்டேன். எல்லாப் பெண்களுக்கும் நான் சொல்லிக்கிறது இதுதான். உங்களுக்கு எதிரா ஒரு அக்கிரமம் நடக்கும்போது, அசிங்கமாகிடுமோ, சமூகம் என்ன நினைக்குமோனு பயந்து ஓடாதீங்க. எதிர்த்து நில்லுங்க. Women is not a weaker sex'' என்றார் ரௌத்திரத்துடன்.


டிரெண்டிங் @ விகடன்