வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (08/07/2018)

கடைசி தொடர்பு:17:32 (08/07/2018)

நீர், மின்சாரம், உணவு எல்லாமிருக்கும் "பூமி கப்பல்"! - அமெரிக்கர் உருவாக்கிய ஆச்சர்ய வீடுகள்

இவர்களிடம் நான் அதிகம் வாக்குவாதம் செய்வது கிடையாது. பனிப்பாறையில் மோதி டைட்டானிக் உடையப்போவதைப் பற்றி அறியாமல், டைட்டானிக் கப்பலின் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் பற்றி எனக்குக் கவலையில்லை.

நீர், மின்சாரம், உணவு எல்லாமிருக்கும்

மெல்லிய மஞ்சள் படர்ந்த நிலப்பரப்பு அது. கோரைப்புற்கள் நிறைந்திருக்கும். வெயில் கடுமையாக இருக்கும். அனல் கொதிக்கும். அதுவே குளிர் காலம் என்றால் குளிர் கடுமையாக இருக்கும். அங்கு இந்தக் கட்டடங்கள் படர்ந்து, ஊர்ந்து, எழுந்து, விரிந்து நின்று கொண்டிருக்கும். அந்த நிலப்பரப்பும், அந்தக் கட்டடங்களின் வடிவமும் ஹாலிவுட் படங்களில் வரும் வேற்றுகிரகமோ என்றும் கூட யோசிக்க வைக்கும். ஆனால், அது பூமி தான். அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்திலிருக்கும் டாவோஸ் (Taos) பகுதி. 

பூமி கப்பல்கள்

அந்த இடம் சீரற்று இருந்தது. பொது உலகம் சொல்லும் அத்தனை ஒழுக்கங்களும் அங்கு மீறப்பட்டிருந்தன. அதைப் பார்க்க வரும் பொது மக்களில் பலரும் அந்த இடத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை. ஆனால், அந்த இடத்தை விரும்பி, அங்கு வீடுகள் கட்டி வாழ்ந்த கூட்டமும் இருக்கத் தான் செய்தது. அதைப் பிடிக்காதவர்கள் அந்த இடத்தை...

"ஒரே குப்பையாக இருக்கிறது..." 

"இங்கேயா வாழ்கிறார்கள்?"

"இது என்ன நாடோடிகள் வாழும் இடம் மாதிரி இருக்கு!"

"அழுக்கு"

மக்கள் இப்படிச் சொல்வதை சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார் மைக் ரெனால்ட்ஸ் (Mike Reynolds). 

மைக் ரெனால்ட்ஸ் - அமெரிக்கா

"இவர்களிடம் நான் அதிகம் வாக்குவாதம் செய்வது கிடையாது. பனிப்பாறையில் மோதி டைட்டானிக் உடையப்போவதைப் பற்றி அறியாமல், டைட்டானிக் கப்பலின் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் பற்றி எனக்குக் கவலையில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... உங்கள் சிறு வயதில் நீங்கள் பார்த்த நீர்நிலைகள் அப்படியே இருக்கின்றனவா? குடிக்கும் நீர் சுத்தமாக இருக்கிறதா? நீங்கள் பார்த்த விவசாய நிலம் இன்று என்னவாக மாறியிருக்கிறது? உங்கள் சின்ன வயதிலிருந்த மின்சாரத் தட்டுப்பாட்டிற்கும், இப்போதிருக்கும் தட்டுப்பாட்டிற்கும் எவ்வளவு வேறுபாடுகள்? உலக வெப்பமயமாதலின் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. வெயில் காலங்களில் மழைக் கொட்டித் தீர்க்கிறது. மழைக்காலங்கள் எல்லாம் கோடைக்காலங்களாக மாறுகின்றன. உயிரினங்கள் அழிகின்றன. ஆனால், அவசர உலக மனிதன் மட்டும் எது குறித்த கவலையும் இல்லாமல் எதையோ நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கிறான்.

இந்த ஓட்டம் நெடுங்காலம் தாங்காது. அதை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன். அதற்கான விடை தான் இந்த 'பூமி கப்பல்கள்' (Earth Ships). ஆம்...இந்த வீடுகளை நான் அப்படித் தான் குறிப்பிட விரும்புகிறேன்."

நீண்ட தாடிக்குள் இருக்கும் வறண்ட உதடுகளை நனைக்காமல்  பேசுகிறார் மைக். 

அமெரிக்கா - இயற்கை வீடுகள் - பூமி கப்பல்கள்

1969 இல் சின்சினாட்டி பல்கலைக்கழக்கத்தில் கட்டடக் கலை படித்து முடித்தார் மைக். உலகம் முழுக்கவே எண்ணெய் தட்டுப்பாடு நிறைந்திருந்த சமயம். அதன் பொருட்டு பல பொருட்களின் விலைகளும் அதிகமாகியிருந்தன. அப்போது மைக் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார். 

பழைய பீர் டின்களைக் கொண்டு கொத்து, கொத்தாக கயிறு கொண்டு கட்டினார். அது செங்கல் போல் செயல்பட்டது. பின்னர், பல தேவையற்ற பொருட்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டினார். 1972யில் தான் உருவாக்கிய முதல் வீட்டிற்கு "தம்ப் ஹவுஸ்" (Thumb House) என்று பெயரிட்டார்.

ஒரு வீட்டை, ஓர் உலகமாக மாற்றத் தொடங்கினார் மைக். அதை முழுக்க, முழுக்க ஒரு தற்சார்பான வீடாக உருவாக்கினார். ஒரு மனிதன் வீட்டில் வாழ 6 அத்தியாவசியமான விஷயங்கள் தேவை என்பது மைக்கின் கருத்து. அந்த 6 விஷயங்களுக்காக அவன் யாரையும், எதையும் (அரசோ அல்லது அரசு சார்ந்த சேவையையோ)  சாராமல் இருக்க வேண்டும் என்பது தான் மைக் வீடுகளின் அடிப்படை. 

1. நீர் - மைக் உருவாக்கும் வீடுகளில் வெளியிலிருந்து எந்தத் தண்ணீர் குழாய் இணைப்புகளும் கிடையாது. முழுக்க, முழுக்க மழை  நீர் சேமிப்பு, கிணறு போன்றவற்றின் மூலம் நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. 

2. உணவு உற்பத்தி - அடிப்படையான காய்கறிகள் மற்றும் பழங்களை உருவாக்கும் வகையில் இந்த வீட்டின் தோட்டம் அமைக்கப்படுகிறது.

3. கழிவு நீர் - திடக்கழிவு மற்றும் கழிவு நீரை சுத்திகரித்து அதை மீண்டும் பல பயன்பாட்டிற்குக் கொடுக்கும் வசதிகள் இந்த வகை வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. 

4. மின்சாரம் - சூரிய சக்தி மற்றும் காற்றாலைகள் மூலம் வீட்டிற்குத் தேவையான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

5. புறச்சூழலுக்கு ஏற்ற சீதோஷ்ணம் - கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், நடுங்கும் குளிராக இருந்தாலும் இந்த வீட்டிற்குள் ஒரே மாதிரியான சீதோஷ்ணம் தான் நிலவும். அதற்காக கட்டுமானத்தின் போதே சில இயற்கைத் தொழில்நுட்பத்தின் வசதியோடு வீடுகள் கட்டப்படுகின்றன. 

6. தேவையற்ற பொருட்களிலிருந்து உருவாகும் வீடு - பழைய அலுமினிய கேன்கள், பாட்டில்கள், பழைய கார் டயர்கள் என குப்பையாக தூக்கிப்போடப்படும் பல பொருட்களைக் கொண்டு தான் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. 

மைக் ரெனால்ட்ஸ் - அமெரிக்கா

ஆரம்பக்காலங்களில், பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து, தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கத் தொடங்கினார் மைக். அவரின் வீட்டிற்கு அருகிலேயே பலரும் இடங்களை வாங்கி ஒரு சமூகமாக இது போன்ற வீடுகளில் வாழத் தொடங்கினார்கள். ஒரு சமயத்தில் அப்படியாக மைக் கட்டிக் கொடுத்த சில வீடுகளில், சில பிரச்னைகள் உருவாகின. கூரைகள் ஒழுகுவது, சூடு அதிகமாக வீட்டிற்குள் வருவது போன்ற பிரச்னைகள் எழுந்தன. இந்தப் பிரச்னைகள் காரணமாக 1990யில் மைக்கின் கட்டடக் கலை நிபுணர்  உரிமம் அரசால் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் அது போன்ற வீடுகளைக் கட்டவே இல்லை. 
பின்னர், 17 ஆண்டுகால போராட்டத்திற்கு 2007யில் அவருக்கு மீண்டும் உரிமம் அளிக்கப்பட்டது. இப்போது சமீப காலங்களாக பல வீடுகளைக் கட்டுவது, இந்த இயற்கையான தற்சார்பு வீடுகள் குறித்த பாடங்களை எடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார் மைக். அவர் தான் கட்டும் வீடுகளுக்கு வைக்கும் பெயர்களும் வித்தியாசமாகத் தானிருக்கும் . சமீபத்தில் அவர் கட்டிய வீடுகளின் பெயர்கள் இவை:

1. ஹாபிட் ஹவுஸ் (Hobbit House).

2. வே பீ (Way Bee). 

3. பீனிக்ஸ் (Phoenix).

4. லெமூரியா (Lemuria). 

பூமி கப்பல்கள்

" எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நான் கண்டுபிடிக்க எனக்கு நீண்ட நாட்களாகின. எனக்குப் பிடித்ததை நான் செய்யத் தொடங்கினேன். அது மக்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளின் நான் இறந்து போகலாம். என் நிறுவனமும், நான் உருவாக்கிய இந்த இடமும் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப் படலாம். ஆனால், மக்கள் இயற்கைச் சார்ந்த தற்சார்பு வாழ்விற்கு மாறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதைக் கண்டிப்பாக உணர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்... உணர்வார்கள் என்று நம்புகிறேன்." என்று சொல்கிறார் மைக் ரெனால்ட்ஸ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்