வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (09/07/2018)

கடைசி தொடர்பு:08:30 (09/07/2018)

சிக்கலான தருணத்தை எதிர்கொள்வது எப்படி? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

சிக்கலான தருணத்தை எதிர்கொள்வது எப்படி? - யதார்த்தம் சொல்லும் கதை #MotivationStory

யதார்த்தம் சொல்லும் கதை

`நம் தலையெழுத்தைத் தீர்மானிப்பது நட்சட்திரங்கள் அல்ல, நாம்தான்’ - விதி குறித்து அழுத்தம் திருத்தமாக இப்படிக் குறிப்பிடுகிறார் நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare). உட்கார்ந்த இடத்திலிருந்து ஆர்டர் செய்து, எங்கேயோ இருக்கும் ஸ்வீடனிலிருந்து ஒரு பொருளை வாங்கலாம்; ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஒருவருடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசலாம்; உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் விமானத்தில் பறக்கலாம்... அறிவியல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து... எல்லாத் துறைகளிலும் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்துவிட்ட காலம் இது. ஆனால், இன்றைக்கும் தலைவிதியை நம்பி, ஜோதிடத்தின் பின்னால் ஓடுபவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஜாதகம் பார்த்து பெண்ணை நிராகரிப்பவர்கள் முதல், சகுனம் பார்த்து வெளியே செல்பவர்கள்வரை லட்சக்கணக்கில் மனிதர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை விதியின் மேல் மனிதர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும் என்கிற அழுத்தமான எண்ணம். `என்னங்க... உங்க பையன் வேலைக்குப் போறானா?’ என்று ஒருவர் கேட்கிறார். மற்றவர் பதில் சொல்கிறார்... `இன்னும் நல்ல வேலையா ஒண்ணும் கிடைக்கலைங்க. விதினு ஒண்ணு இருக்குல்ல... அவனுக்கு வேலை எப்போ கிடைக்கணும்னு இருக்கோ, அப்போதானே கிடைக்கும்?’ இந்தப் பதிலில் அந்தப் பையனின் தகுதி, திறமை, முயற்சி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, விதி மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. கொஞ்சம் முயன்றால், யார் வேண்டுமானாலும் தலைவிதியைக்கூட மாற்றிவிடலாம். எதிர்காலத்தை கணிப்பதற்கு மிகச் சிறந்த வழி, அதை நம் இஷ்டம்போல் உருவாக்குவதுதான். இந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் கதை ஒன்று... 

கதை

எல்லா காலங்களிலும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். மத்திய ஐரோப்பாவில் அப்படி ஆணவம் நிறைந்த கொடுங்கோல் அரசன் ஒருவன் ஒரு காலத்தில் இருந்தான். கடுமையான வரி விதிப்பு, கண்டதற்கெல்லாம் தண்டனை... என அவன் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அந்த அரசனுக்கு முக்கியமான ஒரு குணம் இருந்தது. அவனைத் தவிர மற்ற யாரையும் பாராட்டிப் பேசுவது அவனுக்குப் பிடிக்காது. அதற்காக நல்லவர்களோ, திறமைசாலிகளோ, எல்லோர் மனதிலும் இடம்பிடித்திருப்பவர்களோ இருக்க மாட்டார்களா என்ன? இருக்கத்தான் செய்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஒரு துறவி. அவர், அந்த அரசனின் ஆட்சிக்குட்பட்ட சின்னஞ்சிறு கிராமத்திலேயே இருந்தார். குட்டி குடிசை, எளிமையான வாழ்க்கை, வருபவர்களை உபசரித்து, கனிவாகப் பேசி ஆலோசனை சொல்லும் சுபாவம், வைத்திய அறிவு, ஞானம்... இந்த குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் துறவியைப் பிரபலமாக்கிக்கொண்டிருந்தன. 

துறவியிடம் மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்கள் இருந்தார்கள். அவர்களைவிட அவரின் அன்பான வார்த்தைகளைக் கேட்பதற்கும், ஆசிகளைப் பெறுவதற்காகவும் வருபவர்கள் இன்னும் அதிகமாக இருந்தார்கள். கிராமத்துக்கு வெளியே இருந்த அவரின் சின்னஞ்சிறு குடிசைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வர ஆரம்பித்தார்கள். நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அந்தத் துறவி நாடறிந்த ஒருவராகிவிட்டார். எங்கும் அவரைப் பற்றியே பேச்சு. கொடுங்கோல் அரசனின் மந்திரி ஒருவர், அந்தத் துறவி குறித்த தகவலை அரசனின் காதுக்குக் கொண்டு சென்றார். 

துறவி

``அரசே... நம் ஆட்சிக்குட்பட்ட கிராமமொன்றில் துறவி ஒருவர் இருக்கிறாராம். பல சிக்கலான நோய்களுக்குக்கூட மருந்து தருகிறாராம். எத்தனையோ பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனை சொல்கிறாராம். `ஞானவான், அற்புதமான மனிதர், தெய்வத்துக்கு இணையானவர், அவரிடம் மகத்தான சக்தி இருக்கிறது, அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை...’ என்றெல்லாம் அவரைக் குறித்துப் பலரும் பேசிக்கொள்கிறார்கள்...’’ 

இன்னும் சிலரிடம் துறவியைப் பற்றி விசாரித்தான் அரசன். எல்லோரும் அந்த மந்திரியைப் போலவே கருத்து சொன்னார்கள். அதையெல்லாம் கேட்கக் கேட்க, அவனுக்குள் பொறாமை கனன்று எரிந்தது. `துறவி ஒன்றும் பெரிய ஆளில்லை, அவரும் சாதாரண மனிதர்தான்... சொல்லப்போனால் எனக்கு முன்னால் அவர் ஒன்றுமேயில்லை’ என்று எல்லோருக்கும் நிரூபிக்க ஆசைப்பட்டான். அதற்காகவே ஒரு திட்டமும் தீட்டினான். அந்தத் துறவியை அழைத்துவரச் சொல்லி, தன் வீரர்கள் சிலரை அனுப்பிவைத்தான். 

வீரர்கள் துறவியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். அமைதி தவழும் முகம், அருள் பொங்கும் கண்கள், கனிவான புன்னகை... எப்போதும் போலவே இயல்பாக அரசவைக்குள் நுழைந்தார் துறவி. அவரைப் பார்த்தான அரசன். `அவர் மகா ஞானவான். எந்தக் கேள்வி கேட்டாலும், அதற்கு மிகச் சரியான பதிலை அவர் சொல்லிவிடுவார்’ என்று மந்திரிகள் அவனிடம் சொல்லியிருந்தார்கள். அரசன், தன் ஆசனத்துக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு கறுப்புத் துணிப் பையை எடுத்தான். ஏற்கெனவே அதற்குள் ஒரு கிளியைவைத்து, அந்தப் பையை நன்கு சுற்றி, மூடிவைத்திருந்தான். 

துறவி அரசவைக்குள் வந்து அமர்ந்ததும், அந்த கறுப்புப் பையை எடுத்தான் அரசன். அதற்குள் இருந்த கிளியின் கழுத்தைத் தன் கைகளால் பிடித்துக்கொண்டான். பிறகு துறவியிடம், ``இதற்குள் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம்’’ என்றான். 

``அந்தப் பைக்குள் ஒரு கிளி இருக்கிறது’’என்றார் துறவி. 

அரசன் அசந்துபோனான். `இதற்குள் கிளி இருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? உண்மையிலேயே இவர் எல்லாம் அறிந்தவராக இருப்பாரோ! இறைவனின் முழு அருள் பெற்ற ஞானியா இவர்?’ என்றெல்லாம் ஒரு கணம் நினைத்தான். ஆனாலும், அவரை எப்படியாவது அவமானப்படுத்திவிட வேண்டும் என்கிற கெட்ட எண்ணம்தான் அவனுக்கு மேலெழுந்தது. அரசன், தன் இரண்டாவது கேள்வியைக் கேட்டான்... ``சரி. இதிலிருக்கும் கிளி உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா?’’ 

கிளி

அரசனின் திட்டம் என்னவென்றால், துறவி `கிளி இறந்துவிட்டது’ என்று சொன்னாரென்றால், உயிரோடு கிளியை வெளியே பறக்கவிட்டுவிடுவது; அவர், `கிளி உயிரோடிருக்கிறது’ என்று சொன்னாரென்றால், கிளியின் கழுத்தை நெறித்து `பார்... கிளி இறந்துவிட்டது’ என்று காண்பிப்பது. ஆக, துறவி எந்தப் பதிலைச் சொன்னாலும் வெற்றி அரசனுக்குத்தான். 

இந்த மாதிரிச் சூழ்நிலையில் எல்லோருக்கும், `இருக்கிறது’ அல்லது `இல்லை’ என ஏதோ ஒரு பதிலைச் சொல்வதற்குத்தான் வாய்ப்பிருக்கும். ஆனால், அந்தத் துறவிக் கொஞ்சமும் கலங்காமல் தெளிவாகப் பதில் சொன்னார். ``அரசே, அது உங்கள் கை. கிளி உயிரோடு இருக்க வேண்டுமா, இறக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.’’ 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்