``750 மீ தொலைவிலிருந்து எரிக்கும் லேசர் துப்பாக்கி!" - போராட்டங்களைச் சமாளிக்க சீனாவின் ஆயுதம் | Chinese company developed laser rifle

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (09/07/2018)

கடைசி தொடர்பு:11:51 (09/07/2018)

``750 மீ தொலைவிலிருந்து எரிக்கும் லேசர் துப்பாக்கி!" - போராட்டங்களைச் சமாளிக்க சீனாவின் ஆயுதம்

இந்த லேசர் ஆயுதம் போராட்டக்காரர்களை சமாளிக்க உதவுமா?

``750 மீ தொலைவிலிருந்து எரிக்கும் லேசர் துப்பாக்கி!

க்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காகப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் நாட்டை ஆளும் அரசுகளுக்கு ஒரு வித பயம் ஏற்பட்டுவிடும். அடுத்த நிமிடமே போராட்டக்காரர்களின் கூட்டத்தை எப்படிக் கலைக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். காவல்துறை அல்லது ராணுவத்திடம் அதை நிறைவேற்றுங்கள் என்ற உத்தரவையும் அளித்து விடுவார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் அரசுகள் உலகம் முழுவதுமே ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன.

போராட்டம்

இடத்துக்கு இடம்  போராட்டக்காரர்களை கலைப்பதற்குப் பல வழிகளைக் கைவசம் வைத்திருக்கிறார்கள். முதலில் பேச்சுவார்த்தை, தண்ணீரைக் கூட்டத்தின் மேல் அதிவேகமாகப் பீய்ச்சி அடிப்பது போன்ற வலி இல்லாத முறைகளை பயன்படுத்துவார்கள். அப்படியும் வேலை நடக்கவில்லை என்றால் அடுத்தது தடியடி, ரப்பர் குண்டுகளை வைத்துச் சுடுவது, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், உச்சபட்சமாக துப்பாக்கிச் சூடு என அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள். அப்படிப் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்குச் சீனாவில் லேசர் ஆயுதம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

 ZKZM-500

ZKZM-500 என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் துப்பாக்கியை ZKZM லேசர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதைப் பயன்படுத்தும் போது இரண்டு நொடிகள் தொடர்ச்சியாக லேசர் கதிர்கள் வெளிப்படும். அப்படி இந்தத் துப்பாக்கி 1000 தடவைகள் இயங்கும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் AK-47 துப்பாக்கியின் அளவில் இருக்கும் இந்த லேசர் ஆயுதம் மூன்று கிலோ எடை கொண்டது. 800 மீட்டர் அல்லது அரை மைல் தொலைவில் இருந்தும் கூட இலக்கைத் தாக்கும் தன்மை கொண்டது.  

சீனா

 இந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் லேசர் கற்றை மனிதனின் தோல்களையும், திசுக்களையும் எரிக்கும் தன்மையைக் கொண்டது. இதன் மூலமாகத் தீப்பற்றும் தன்மை கொண்ட எந்தப் பொருளாக இருந்தாலும் எரிக்க முடியும். மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான லித்தியம்-அயான் பேட்டரிகள் இதற்குத் தேவையான சக்தியை அளிக்கும். இதை கார், கப்பல் மற்றும் விமானத்தில் கூட பொருத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி ஜன்னல்களுக்குப் பின்னால் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

``இந்தத் துப்பாக்கி அசாதாரணமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் தேவையில்லாத பேனர்கள், அல்லது அதில் கலந்துகொள்ளும் நபர்களின் முடியையும், உடைகளையும் எரிக்க முடியும்" என்கிறார் இதனை வடிவமைத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர். $15,000 அமெரிக்க டாலர்கள் செலவில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

 ZKZM-500

லேசர் மிகவும் சக்தி வாய்ந்த ஒளிக்கற்றையாகக் கருதப்படுகிறது. லேசர் மூலமாகப் பொருளின் மீது ஆற்றலை எளிதாக ஒரு புள்ளியில் குவித்துவிட முடியும் என்பதால் இதில் ஆபத்தும் அதிகம். அதிக சக்தி வாய்ந்த லேசர் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் அமெரிக்கா இதைப் போலவே ஒரு லேசர் ஆயுதத்தை உருவாக்கியிருந்தது. ஆனால், அதன் செயல்திறன் மிகவும் குறைவாக இருந்தது. உடையைக் கூட அந்த லேசர் தாண்ட முடியவில்லை வெற்று உடம்பில் மட்டுமே அதனால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. தற்பொழுது ZKZM-500 அதை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் போராட்டத்தை ஒடுக்க மட்டுமே பயன்படுத்துவோம் எனக் கூறினாலும், இதனை மேம்படுத்தி ராணுவத்தில் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றும் திட்டம் சீனாவிடம் இருக்கக்கூடும். 

லேசர் ஆயுதம்

உலகம் முழுவதிலும் வல்லரசு நாடுகள் தொடங்கி பல நாடுகள் அடுத்த தலைமுறை ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியைப் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டார்கள். அவற்றில் முக்கியமானது லேசர் ஆயுதங்கள். சயின்ஸ்  ஃபிக்ஷன் திரைப்படங்களிலும், கதைகளிலும் மட்டுமே உலகம் அறிந்து வந்த லேசர் ஆயுதங்கள் கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும். அமெரிக்கா, சீனா எனச் சில நாடுகள், முதல் தலைமுறை லேசர் ஆயுதங்களை உருவாக்கி பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close