வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (09/07/2018)

கடைசி தொடர்பு:12:29 (10/07/2018)

சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத பயிற்சி வகுப்பு அவசியமா? சில கேள்விகள்... தீர்வுகள்! #FAQ

யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு குறித்த அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை கிடைக்க திருச்சி வாங்க!

சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத பயிற்சி வகுப்பு அவசியமா? சில கேள்விகள்... தீர்வுகள்! #FAQ

போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு, `யூபிஎஸ்சி (UPSC), டிஎன்பிஎஸ்சி (TNPSC)  போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், ஆங்கில அறிவு அவசியமா, படிப்பதற்கு எவ்வளவு செலவாகும், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வெற்றிபெறுவது சாத்தியமா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தேர்வுக்குத் தயாராகலாமா, பள்ளி/கல்லூரியில் எத்தனை சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்?' என ஏராளமான கேள்விகள் இருக்கும். 

போட்டித்தேர்வு

போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களிடமும், வெற்றியாளர்களை உருவாக்குபவர்களிடமும் பேசினாலே அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.  அதற்கான வாய்ப்பை விகடன் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. இந்த வார இறுதியில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது. இந்தப் பயிற்சி முகாமில் பயிற்சி வழங்க உள்ள போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் மற்றும் பயிற்றுநர் டாக்டர் சங்கர சரவணனிடம் பேசினோம்... 

போட்டித்தேர்வுகள் சங்கர சரவணன்``பொதுவாக, சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சிபெற்றிருந்தாலே போதும். ஆனால், இதற்கு முன்பு வெற்றிபெற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தவர்களாக இருந்தனர் என ஆராய்ந்தால், குறைந்தது 70 சதவிகிதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆர்வம் இருந்தால் தேர்ச்சிபெறுவது எளிது. சிலர் ஆர்வம் இல்லாமல் இன்ஜினீயரிங் படித்திருப்பார்கள். அதனால் மதிப்பெண் குறைவாகப் பெற்றிருக்கலாம்.

சில சமயம் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்கள் ஆங்கிலவழிக் கல்விக்கு மாறும்போது மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால், வரலாறு, புவியியல் பிரிவில் ஆர்வத்தோடு இருந்தால் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர்" என்றவரிடம் சிவில் சர்வீஸஸ் தேர்வு குறித்து எழுப்பப்படும் கேள்விகளை முன்வைத்தோம். 

``சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு ஆங்கில மொழி அறிவு தேவையா?" 

``சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்பதால், அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். ஆனால், முதன்மைத் தேர்வையும் நேர்முகத் தேர்வையும் தமிழிலேயே எழுதலாம்.''

``எப்போது சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாராக வேண்டும். கல்லூரியில் படிக்கும்போதே தயாராவது சரியா?" 

``கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராவது நல்லது. கல்லூரியில் படித்து முடித்துவிட்டு அதன் பிறகு தேர்வுக்குத் தயாரானால், இரண்டு மூன்று வருடங்கள் ஆகும். ஆனால், கல்லூரியில் படிக்கும்போதே தயாரானால், பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் போட்டித்தேர்வில் வெற்றிபெற்று பயிற்சிக்குச் செல்லலாம். ஆகவே, படிக்கும்போதே கொஞ்சம் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டு தேர்வுக்குத் தயாராவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்". 

``சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எவ்வளவு நேரம் படிக்கவேண்டி இருக்கும்?" 

``முழுநேரமாகப் படிப்பவர்கள் குறைந்தது எட்டு மணி நேரமும், வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள் குறைந்தது நான்கு மணி நேரமும் படிக்க வேண்டும்". 

``எந்தெந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும்?" 

``NCERT வெளியிட்டுள்ள பள்ளிப் புத்தகங்களை அவசியம் படிக்க வேண்டும். இது அடிப்படை அறிவை மேம்படுத்தும். முதன்மைத் தேர்வுக்கு எடுக்கும் விருப்பப் பாடத்துக்குத் தகுந்தாற்போல் என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதற்கான தனி லிஸ்ட் இருக்கிறது. இதைத்தவிர, தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். தமிழ்வழியில் எழுதுகிறார்கள் என்றால், அதற்குத் தகுந்தாற்போல் புத்தகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்". 

சிவில் சர்வீஸஸ் தேர்வு

``சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத, பயிற்சி வகுப்பு அவசியமா?" 

``பொருளாதாரச் சூழ்நிலையைப் பொறுத்து கோச்சிங் க்ளாஸ் போகலாமா வேண்டாமா என முடிவெடுக்கலாம். பயிற்சி வகுப்பில் படிக்கும்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அங்கு அதிகளவில் பயிற்சித் தேர்வு நடத்துவார்கள். மேலும், தேர்வுக்குத் தயாராகும் நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்முடைய திறனை பரிசோதனை செய்துகொள்ளலாம். பயிற்சி மையத்துக்கு அதிகளவில் கட்டணம் செலுத்தவேண்டி இருக்குமே என நினைத்தால், தேர்வு நெருங்கிவரும் சமயத்தில் `டெஸ்ட் பேட்ஜ்' என்று தனியே பயிற்சி வழங்கப்படுகிறது. அதற்கான கட்டணம் மிகவும் குறைவு. அதில் சேர்ந்து மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம். 

போட்டித்தேர்வு எழுத நிறைய இலவசப் பயிற்சி மையங்கள் உள்ளன. அரசும் இலவசமாகப் பயிற்சி வழங்குகிறது. நிறைய அறக்கட்டளை அமைப்புகள் இலவசப் பயிற்சி மையங்களை நடத்துகின்றன. முதன்மைத் தேர்வுக்குச் சொந்தமாகப் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற்றால், அதன் பிறகு நடக்கும் முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, பல பயிற்சி மையங்களும் குறைந்த கட்டணத்திலேயே பயிற்சி வழங்குகின்றனர்".

``கிராமப்புற மாணவர்கள் வெற்றிபெறுவது சாத்தியமா?"

``சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதிய கிராமப்புற மாணவர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதற்கு ஏராளமானோரை உதாரணமாகச் சொல்லலாம். கிராமப்புற மாணவர்களுக்குப் பலரும் உதவத் தயாராக உள்ளனர்" என்றார் சங்கர சரவணன்.

மேற்கண்ட கேள்விகள்போல் இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், விகடன் பிரசுரம் யூபிஎஸ்சி / டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வரும் சனிக்கிழமை (14-07-2018) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம்.  

கீழ்க்காணும் இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.  https://goo.gl/forms/2OW5cofguEXNKSQN2

மேலும் 044-6680 8019 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தும், 80560 46940, 73959 99467, 97899 77822 என்ற எண்ணில் அழைத்தும் அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியும் முன்பதிவு செய்யலாம். 


டிரெண்டிங் @ விகடன்