ஒரு மனிதர்... 400 வகை உருளைக்கிழங்குகள்! - உணவுப் பஞ்சம் தீர்க்கப் போராடும் விவசாயி ஜூலியோ

"என் பிள்ளைகளைவிடவும் இந்த உருளைக்கிழங்குகளை நான் பெரிதும் நேசிக்கிறேன்." இதை எப்போதும் சொல்வார் ஜூலியோ. அது பெருமலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடிகளுக்கு மேல். அங்கு தான் ஜூலியோ தன் குடும்பத்தோடு வாழ்கிறார்.

ஒரு மனிதர்... 400 வகை உருளைக்கிழங்குகள்! - உணவுப் பஞ்சம் தீர்க்கப் போராடும்  விவசாயி ஜூலியோ

புகா குசி (Puka K'usi) - இதற்கு "சிகப்பு பூசணி" என்று அர்த்தம். 

கச்சூன் வக்காச்சி (K'achun Waqachi) - "உங்கள் மருமகளை அழவைக்கும் ஒன்று" என்று அர்த்தம் 

குசி கச்சூன் வக்காச்சி (Kusi K'achun Waqachi) - "மகிழ்ச்சியாக இருப்பவரை அழவைக்கும்" என்பது இதன் பொருள்.

பூமா மக்கி (Puma Maki) - "பூமாவின் பாதங்கள்" என்று அர்த்தம். 

இது மாதிரியாக இன்னும், இன்னும் 400 பெயர்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருவர் வளர்க்கிறார். இவை அனைத்தும் உருளைக்கிழங்கு வகைகளின் பெயர்கள். 

அது பெரு மலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடிகளுக்கு மேல். அங்கு தான் ஜூலியோ ஹன்கோ மமானி (Julio Hancco Mamani) தன் குடும்பத்தோடு வாழ்கிறார். அங்கு தான் உருளைக்கிழங்கு விவசாயம் செய்கிறார். 

பெரு - உருளைக்கிழங்கு விவசாயம்

ஜூலியோ ஹன்கோ மமானி (Julio Hancco Mamani)

பெரு நாட்டின் கஸ்கோ நகருக்கு அருகிலிருக்கும் ஆண்டஸ் (Andes) மலைத் தொடரில் வாழ்கிறார் ஜூலியோ. அவர் வாழும் இடத்திலிருந்து சிறு நகரத்தை எட்ட வேண்டுமென்றாலும் கூட குறைந்தது மூன்றரை மணி நேரம் நடக்க வேண்டும். அந்தப் பகுதியில் குளிர் அதிகம். 

"என் பிள்ளைகளைவிடவும் இந்த உருளைக்கிழங்குகளை நான் பெரிதும் நேசிக்கிறேன்." இதை எப்போதும் சொல்வார் ஜூலியோ. 
ஜூலியோவின் அப்பா 100 வகை உருளைக்கிழங்குகளை பயிரிட்டார். இப்போது ஜூலியோ 400 வகை உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்கிறார். மிக, மிக அரிதாகவே நகரத்திற்கு வருகிறார் ஜூலியோ. அதற்கு அவருக்கான அவசியமும் இருப்பதில்லை. தனக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அத்தனையையும் அவரே தயாரித்துக் கொள்கிறார். 

பெரு பூர்வகுடிகள்

பெருவில் உருளைக்கிழங்குகளின் வரலாறு என்னவென்பதற்கு பல கதைகள் உண்டு. அது 1500களில் ஸ்பானிய படையெடுப்பின் போது, நாட்டிற்குள் வந்தது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருவின் பூர்வகுடிகள் உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யத் தொடங்கினார்கள் என்பதாகவும் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும், பெருவின் பூர்வகுடிகள் வாழ்வில் உருளைக்கிழங்கிற்கு முக்கியப் பங்குண்டு. அவர்கள் அதை வளர்ப்பதையும், அறுவடை செய்வதையும் மிகவும் புனிதமான ஒரு காரியமாகக் கருதுகிறார்கள். 

பெரு உருளை விவசாயிகள்

பெருவின் உணவு முறையில் உருளைக்கிழங்கு பெரும் பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், இன்று உலகம் முழுக்க எல்லா நாடுகளிலுமே, உணவில் உருளைக்கிழங்கிற்கு முக்கியப் பங்கு உண்டு. உருளைக்கிழங்குகளின் உற்பத்தியைப் பெருக்குவதின் மூலம், உலகில் உணவுப் பஞ்சத்தைக் குறைக்க முடியும் என்று கருதி பெரு அரசு பூர்வகுடிகளோடு இணைந்து சில முயற்சிகளை எடுத்து வருகிறது "சர்வதேச உருளைக்கிழங்கு மையம்" (International Potato Center) எனும் அமைப்பு. குறிப்பாக,  பூர்வகுடிகளின் விவசாய அறிவுத் திறனையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து உருளைக்கிழங்கு உற்பத்தியைப் பெருமளவு பெருக்குகிறது. 

ஆண்டஸ் மலைத் தொடர்களில் இருக்கும் பூர்வகுடிகளை " பப்பா அராரிவா" (Papa Arariwa) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது இவர்கள் "உருளைக்கிழங்குகளின் பாதுகாவலர்கள்" (Guardians of Potatoes) என்று சொல்லப்படுகிறார்கள். 

பெருவின் பிசாக் (Pisaq) நகர் அருகே இருக்கும் "புனிதப் பள்ளத்தாக்கில்" (Sacred Valley) 12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிற்ககு உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படுகிறது. இதில் முழுக்கவே ஆண்டஸ் மலைகளின் பூர்வகுடிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை அந்த விவசாயிகளுக்கு ஏதேனும் விதைகள் வேண்டுமென்றாலோ, பயிர்களில் வைரஸ் தாக்குதல்கள் நடந்தாலோ, அவர்களுக்கான தேவையை செய்து உதவிடுகிறது "சர்வதேச உருளைக்கிழங்கு மையம்". 

விவசாயம் - பெரு

இந்த ஆண்டஸ் மலைத் தொடர்களில் இரவுகளில் குளிர் 4டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். நண்பகல் நேரத்தில் அதிகபட்சமாக 20டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். இது உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கான சரியான சீதோஷ்ண நிலை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக பருவநிலை மாற்றங்களால் இதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் செய்த உயரத்தைக் காட்டிலும், இப்போது அதிக உயரங்களுக்குச் சென்று விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. 

ஒருவேளை இயற்கைச் சீற்றத்தினாலோ, மனிதனின் பிழையினாலோ இந்த உலகிற்குப் பெரும் பிரச்னைகள் ஏதும் வரும் சூழலில் அது நேரடியாக விவசாயத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும். அப்படி ஏதும் ஒன்று நிகழ்ந்தாலும் கூட, இதை மீண்டும் உருவாக்கிடும் அளவிற்கு ஒரு "விதை வங்கியை” உருவாக்கியுள்ளது சர்வதேச உருளைக்கிழங்கு மையம். கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான உருளைக்கிழங்கு விதைகளை இங்கு பத்திரப்படுத்தி வைத்துள்ளது. 

இந்த விதைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பத்திரமாக இருக்கும் வகையில் (-)20 டிகிரி செல்ஷியஸில் லேப்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

உருளைக்கிழங்கு விதைகள் பாதுகாக்கும் இடம்

 பெருவின் உருளைக்கிழங்கு காவலர்களில் ஜூலியோ ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. 

“நான் இந்த மலையின் உருளைக்கிழங்கு காவலன். அதை ஒருபோதும் நான் அழிய விடமாட்டேன். அதை நான் பத்திரமாக பாதுகாப்பேன்.” - ஜூலியோ

 

.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!