சென்னையில் களைகட்டிய உணவு - இசைத் திருவிழா! | Food Truck and Music Festival in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (11/07/2018)

கடைசி தொடர்பு:08:00 (11/07/2018)

சென்னையில் களைகட்டிய உணவு - இசைத் திருவிழா!

சென்னையில் களைகட்டிய உணவு - இசைத் திருவிழா!

வயிற்றுப் பசியைப் போக்க உணவு. ஆத்மாவின் அயர்ச்சியைப் போக்க இசை. இந்த இரண்டும் இணைந்தால், வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்! இசை மற்றும் உணவு மீதுள்ள மனிதனின் காதல், என்றைக்குமே அழியாத ஒன்று. அப்படிப்பட்ட இசை-உணவு இரண்டையும் ஒரே இடத்தில் பரிமாறி மகிழ்ந்தது `Food Truck and Music Festival'. வீடு, அலுவலகம் என மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், இடைவெளி அத்தியாவசியமானது. வெளிநாடுகளில் அவ்வப்போது நடைபெறும் உணவு-இசைத் திருவிழா,  சென்னையிலும் நடைபெற்றது. கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள VGP பூங்காவில், நடைபெற்ற இந்தத் திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இசை

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதலில் இருப்பது `உணவு'. பழைய சோறு, பச்சைமிளகாய் தொடங்கி மெக்ஸிகன் உணவு வகைகள் வரை அத்தனையும் ஆயிரம் கதைகள் சொல்லும். ஒரே மசாலா, ஒரே வகை பருப்பு. ஆனால், வீட்டுக்குவீடு மாறுபட்ட சுவை. `அந்த வீட்டில்/உணவகத்தில் சாப்பிட்ட அந்தச் சாம்பார் சாதத்தின் அதே சுவை வரும்வரை முயன்றுகொண்டே இருப்பேன்' என சபதம் எடுத்துக்கொண்டு இன்றைக்கும் தினமும் கணவருக்கு `சாம்பார் சாதம்' கட்டிக்கொடுக்கும் மனைவி இருக்கத்தான் செய்கிறார்கள். சேர்க்கப்படும் சமையல் பொருள்களின் அளவு, கைப்பக்குவம், பொறுமை இப்படிச் சொல்லிக்கொண்டேபோகும் அளவுக்கு சமைப்பதிலும் அதை சுவைப்பதிலும் இருக்கும் சந்தோஷம் `உணவுப் பிரியர்கள்' மட்டுமே அறிந்தது. அப்படிப்பட்ட உணவுப் பிரியர்கள் அனுபவித்துச் சாப்பிடும் அளவுக்கு ஏகப்பட்ட வெரைட்டி இந்த விழாவில் இடம்பெற்றிருந்தன. அனைத்து உணவு வகைகளும் டிரக்கில் இருந்தபடியே பரிமாறப்பட்டது.

குடும்ப விழாக்கள், நண்பர்களுடன் வார இறுதி நாள்கள், காதலியுடன் இரவு நேர நடைப்பயணம், கணவருடன் நீண்டதூர ரயில் பயணம், புகழ், மகிழ்ச்சி, வீழ்ச்சி, தனிமை, வெறுமை என எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் தெரிந்தோ தெரியாமலோ இதயத்துக்கு வலுசேர்ப்பது `இசை'. ஒவ்வொரு தாளத்திலும் நம் உணர்வுகள் அவ்வளவு அழகாய் வெளிப்படும். `பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்...' என்ற மெலடியாகட்டும், `கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா...' என்ற நாட்டுப்புறக் கலவை பாடலாகட்டும், `யாக்கை திரி காதல் சுடர்...' என்ற வெஸ்டர்ன் மியூசிக் பாடலாகட்டும், இசைக்கேற்ப நம் கை-கால்கள் தாளமிடாமல் இருக்குமா? பிக் பாஸ் மமதி, மும்தாஜைக் குறிப்பிடுவதுபோல் நம்முடனே பிறந்த `சோல் சிஸ்டர்'தான் இசை. இசையுடன் சேர்ந்து நடனமாடவும் அனுமதி என்றதும் இரட்டிப்பு உற்சாகமாகிவிட்டனர் அங்கு கூடியிருந்த மக்கள்.

Food Festival

நான் சென்றிருந்த நேரத்தில், இந்தியாவின் ஒரே Couple DJ-வான (Disco Jockey) நாவ்ஸ் மற்றும் தீபிகாவின் இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த 5 வயது குழந்தைகள் முதல் 50 வயது முதியவர்கள் வரை அனைவரும் இசைக்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து நடனமாடியதால் சோர்வடைந்த கூட்டத்தை ஒரு கம்பீரக் குரல் தட்டி எழுப்பியது. எத்தனை மனஉளைச்சலுடன் இருந்தாலும், நம்மை நன்றாகப் புரிந்துகொண்ட ஒருவரின் ஆறுதல் வார்த்தை எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்குமோ, அதுபோல் இருந்தது அவரின் ஆரவார நடவடிக்கைகள். வித்தியாசமாக இருக்கிறதே என்ற ஆச்சர்யத்துடன் கூட்டத்தை உற்சாகப்படுத்திய பிரிட்டோவிடம், இந்த இரண்டு நாள் நிகழ்வுகளைப் பற்றியும் கேட்டேன். 

பிரிட்டோ``பிறந்த நாள், கல்லூரி விழாக்களைத் தொகுத்து வழங்குற `மாஸ்டர் ஆஃப் செரிமெனி (MC)'யைத்தான் நான் எட்டு வருஷமா பண்ணிட்டிருந்தேன். சமீபத்துலதான் `ஹயிப் மேன்'னு சொல்ற, மக்கள் கூட்டத்தை ஆடவைக்கிறது, உற்சாகப்படுத்துறது, சில சிக்நேச்சர் ஸ்டெப் போடுறதுன்னு வெளிநாடுகள்ல பரவலா இருக்கிற கான்செப்ட் பண்ணலாம்னு நினைச்சேன். இங்கதான் முதல்முறையா டிரைபண்ணியிருக்கேன். பார்ட்டியில மக்களை ஆடவைக்கிறது கஷ்டமில்ல. ஆனா, இதுபோல குடும்பமா வர்ற இடத்துல மக்களை உற்சாகமா ஆடவைக்கிறதுதான் மிகப்பெரிய சவால். எனக்கு மக்களைச் சிரிக்கவைக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதுக்காக எனக்குத் தெரிஞ்ச ஒரு வழி இது" என்றார்.

பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சிறிது நேரம் தங்களின் கவலைகளை மறந்து, இனிமையான இசையுடன் ஆனந்தமாய் உணவருந்திய மக்களைப் பார்த்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன்.


டிரெண்டிங் @ விகடன்