இனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு! | Electronic nose may replace search dogs in future

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:22 (12/07/2018)

இனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு!

நாயின் மோப்பசக்தி மனிதனைக் காப்பாற்றும் ஆயுதமாக இருப்பதால் காவல், தேடல் எனப் பல இடங்களில் அதைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்திக்கொண்டும் உள்ளோம்.

இனி மோப்ப நாய்கள் ஓய்வெடுக்கலாம்... வருகிறது எலக்ட்ரானிக் மூக்கு!

ந்த உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள ஏதோ ஒன்றைச் சார்ந்தே இருக்கிறான். சாரும் பொருள் மட்டும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுகிறது. முதலில் இயற்கை. அடுத்து விலங்குகள். கொஞ்சம் விவரம் தெரிந்ததும் விலங்கைப் பழக்கினான். பின் உடல் உழைப்பை இலகுவாக்க இயந்திரங்கள். மின்சாரம் கண்டுபிடித்த பின் அதனால் இயங்கும் பொருள்கள். புதியன வந்ததும் பழையன கழிக்கப்படுவது இயற்கைதானே? இதுபோன்ற கழித்தல் கடந்த இரண்டு நூற்றாண்டாக அதிகமாகி வருகிறது. 

விலங்குகள் பழக்கப்படுத்தபட்ட காலத்திலிருந்து நம் நண்பர்களாக, குடும்பத்தில் ஒருவராகவே பார்த்துள்ளோம். இயந்திரங்கள் வந்த போது நம்மை விட்டு அவற்றை விலக்கிவைக்கத் தொடங்கினோம். ட்ராக்டர் வந்து எருதை ஓரங்கட்டியது. அதுபோல் இப்போது வந்திருக்கும் ஆபத்து நன்றியான நண்பன் எனப் பெயர் வைக்கப்பட்ட நாய்களுக்கு.

நாயின் மோப்பசக்தி மனிதனைக் காப்பாற்றும் ஆயுதமாக இருப்பதால் காவல், தேடல் எனப் பல இடங்களில் அதைப் பயன்படுத்தியுள்ளோம். பயன்படுத்திக்கொண்டும் உள்ளோம். பாம் ஸ்குவாடு, பேரிடர் மீட்பு என்று இதற்காகவே நாய்களைப் பழக்கி உடன் வைத்துள்ளோம்.  ஆனால், அதன் தேவையும் செலவும் அதிகமாக அதற்கு மாற்றாக வளரும் அறிவியல் உலகில் கருவிகள் கண்டு பிடித்துக்கொண்டேயிருக்கிறோம். 

இது ஒன்றும் புதிதல்ல. பல வருடங்களாகப் பல கருவிகள் இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பல வகைகள் பெரிதாகவும், காஸ்ட்லியாகவும் உள்ளதால் அதைப் பயன்படுத்த முடியாமல் கிடப்பிலேயே கிடக்கின்றன. விலைகுறைந்த கையடக்க கருவியை நோக்கிச் சென்ற தேடலில் இப்போது ஐரோப்பியர்கள் லேபிளில் உருவானதுதான் இந்தக் கையடக்க மின்மூக்கு( e-nose). இதன் விவரங்கள் ``அனலிட்டிகள் கெமிஸ்ட்ரி” இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

மோப்ப நாய்

இந்தக் கருவி மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று மாதிரி சேமிக்கம். இது வரும் வாசனையை நுகர்ந்து மெட்டல் ஆக்சைட் செமிகண்டக்டர் வழியே உள்ளனுப்பும். டிடெக்டர், அதை ஆராய்ந்து வகைப்படுத்திய செய்தியை பாலிமர் கண்டக்டர் வழி அனாலிசிஸ் பகுதிக்கு அனுப்பும். அது ஏற்கெனவே அதில் பதிந்த, பழக்கமான செய்தியோடு ஒப்பிட்டு அதை எலக்ட்ரிக் சிக்னலாக மாற்றி வெளியிடும். இந்த அனைத்துச் செயல்களையும் ஒரு சிறிய ரிமோட் அளவில் கைக்குள் அடக்கும் கருவிக்குள்ளேயே செய்து காட்ட முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.

இடர்பாடுகளில் சிக்கிய மனிதர்களிடமிருந்து அசிடோன், அமோனியா, ஐசோபிரின், கார்பன் டை ஆக்ஸைடு முதலியன வெளியேறும். அதை மோப்பம் பிடித்துத்தான் நாய்கள் மனிதர்கள் இருப்பைக் காட்டும். அந்த நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு அதன் குறைந்த அளவைக் கூட நுகர்ந்து அதை எலக்ட்ரிக் சிக்னலாக மாற்றும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. நாய்கள் சீக்கிரம் சோர்ந்துபோகும் போது தேடல் தாமதமாகி உயிர்ப்பலி ஏற்படுவதைக் குறைக்க இந்தக் கருவி உருவாக்கப்படுகிறது. தவிர்த்து வேறு பல (குவாலிட்டி கன்ட்ரோல், புரொடக்ஷன்) தொழிற்சாலைகளில் இதைப் பயன்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

``இது நாய்களின் வேலையை விடத் துல்லியமாக இருக்கும். இது மோப்ப நாய்களைப் பணியிலிருந்து தூக்கிவிடும் ஆயுதமாகவும் மாறிவிடும்" என்கிறார் அதை ஆய்வு செய்யும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஸ்டீபன் டைலர்.

ஒரு சில நேரங்களில் சிறிய வாசனை மாற்றம் கூட, வேறு பொருள் எனக் கருதப்படும் நிலையில் மேலும் இதன் நிறை குறைகள் பற்றி நேரடி நிகழ்வுகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட, இதை இப்போதைய நிலையில் நாய்களுடன் சேர்த்துப் பயன்படுத்தவிருக்கின்றனர்.

இது நாய்க்கு நண்பனா? நமக்கு மட்டும் நண்பனா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்