மனிதன் ஆயுள் அதிகரித்திருக்கிறது... ஆனால் மற்ற உயிரினங்கள்?

மனிதன் ஆயுள் அதிகரித்திருக்கிறது... ஆனால் மற்ற உயிரினங்கள்?

மழைக்காலம் தொடங்கியிருக்கிறது, மண்ணையும் மனிதரையும் குளிரச் செய்யும் மழை கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், மழையை ரசித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்யும்  நகரவாசிகள் மழையோடு தொடர்புடைய ஓர் உயிர்ப்பான விஷயத்தை மறந்து விட்டிருக்கிறார்கள் என்றால் அது ஈசல்தான். நல்ல மழை நாளுக்குப் பிறகு பறந்து திரியும் ஈசல்கள் படிப்படியாக மறைந்து கொண்டிருக்கின்றன.

ஈசல்

கிராமங்களில் கூட முன்னர்ப் போல அவற்றைப் பார்க்க முடிவதில்லை. மண்ணின் தன்மை மாறியது, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு போன்றவை அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இது போல் உயிரினங்கள் அழிவுக்கு உள்ளாவது வழக்கத்தை விட 1000 மடங்கு அதிக வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது என்று  இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் டாக்டர் எலிசபெத் போக்ஸ் என்பவர் ஆய்வு செய்து தந்திருக்கும் கட்டுரையில் இதைக் குறிப்பிட்டுள்ளார். 

இயல்பை விடவும் அதிக வேகம்

 உயிரினங்கள்

இயற்கையில் எதுவுமே நிரந்தரம் கிடையாது, இயற்கையின் செயல்பாடும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. பூமி தோன்றிய பிறகு பல உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன, அழிந்திருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் உயிரினங்கள் அப்படியே இருக்கப்போவதில்லை. ஒரு காலத்தில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்து வந்த டைனோசர்களும், மாமூத்களும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து  போயிருக்கின்றன. இயற்கையில் ஓர் உயிரினம் தோன்றுவதும் அதன்பிறகு அழிவதும் வழக்கம்தான் என்றாலும் தற்பொழுது மனிதர்களால் அந்த வேகம் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு, நகரமயமாக்கல் என மனிதர்கள் இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் உயிரினங்கள் அழியும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. இயல்பை விடவும் ஆயிரம் மடங்கு வேகம் என்பது பூமியின் வரலாற்றில் இதற்கு முன்பு இருந்ததில்லை.

ஈடுகட்ட முடியாத இழப்புகள்

 காண்டாமிருகம்

உலகத்தில் வாழ்ந்து வந்த கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோனது பலருக்கும் நினைவிருக்கலாம். தற்போது அதை மீட்ருவாக்கம் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் அது எளிதான காரியமல்ல. இவையெல்லாம் நம் கவனத்துக்கு வந்ததால் அவை அழிந்த விவரம் தெரிந்திருக்கிறது. இது தவிர உலகம் முழுவதும் நம் கவனத்துக்கு வராமல் அழிந்து விட்ட, அழிந்துகொண்டிருக்கும், எதிர்காலத்தில் அழியப்போகும் உயிரினங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் உயிரினங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அந்தப் பகுதிகளில் வசிக்கும் உயிரினங்கள் இன்னும் முழுமையாக வகைப்படுத்தப்படவே இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் அந்தப் பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுகிறது. தனியார் மட்டுமன்றி அரசும் இதற்குத் துணை போவதும்தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. உலகில் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படும் போது அது பட்டியலிடப்படுவது போலவே காணாமல்போனவையும் பட்டியலிடப்படுவது வழக்கம். ஆனால், இரண்டுக்குமான விகிதம் தற்பொழுது அதிகமாக வேறுபட்டுக்காணப்படுகிறது.

காடுகள் அழிப்பு

கடந்த நாற்பது வருடங்களில் மட்டும் மீன்கள், பறவைகள், பாலூட்டிகள், எனப் பல வகையானவற்றின் எண்ணிக்கை 58 சதவிகிதம் குறைந்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களைச் சூறையாடினால் தவறில்லை என்ற விஷயம் மக்களின் மனதில் தொடர்ந்து விதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும். அதனால், உயிரினங்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படப்போவது உறுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!