``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம் | Work and travel to norway an experience of a tamil youth

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (13/07/2018)

கடைசி தொடர்பு:15:06 (13/07/2018)

``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்

நார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள்.

``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்படியே ஒரு செம பயணம்!” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்

தமிழகத்தைச் சேர்ந்த அரசன் எனும் மாணவர் சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி மற்றும் நிதியியல் படிப்பு படித்து வருகிறார். வடதுருவத்தின் அருகில் மட்டுமே காணக்கூடிய வடக்கு வெளிச்சங்களைக் (நார்த்தன் லைட்ஸ்) காண ஆசைப்பட்டு அவர் சென்று வந்த சுவாரஸ்யமான கதையை இங்கே விவரிக்கிறார்.

இனி அரசனின் வார்த்தைகளில்…

நார்வேயில் அரசன் 

எனக்கு வடக்கு வெளிச்சங்களைப் பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கால ஆசை. தற்போது சுவிட்சர்லாந்தில் படித்து வருவதால், இதுதான் சரியான தருணம் என்றெண்ணி, இணையத்தில் அதற்கான தேடல்களில் ஈடுபட்டேன். அதன்பிறகுதான் தெரிந்தது, வடதுருவப்பயணம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களுக்கு எட்டாக் கனி என்பது. அந்த வடக்கு வெளிச்ச ஒளிக்கீற்றுகளை வட துருவத்தின் மிக அருகில் மட்டுமே காண முடியும். ஆனால், அத்தகைய பகுதிகளில் மக்கள் மிகக் குறைவாகத்தான் வசிக்கிறார்கள். மேலும் அந்த ஒளிக்கீற்றுகள் காணக்கிடைக்கும் இடங்கள் மற்றும் நேரங்களைக் கணிப்பதும் கடினமான விஷயம். ஒரு சுற்றுலாப் பயணியாக, சுவிட்சர்லாந்திலிருந்து வடதுருவப்பகுதிகளுக்குப் போய் விடுதியில் தங்கி வடக்கு வெளிச்சங்களைப் பார்த்து வர இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் (மூன்று நாள்களுக்கு) செலவாகும்.

நான், சுவிட்சர்லாந்தில் பகுதி நேரப் பணி செய்து கொண்டே படித்து வரும் மாணவன். எனக்கு அவ்வளவு பெரிய தொகையைச் சுற்றுலாவுக்காகச் செலவு செய்ய முடியாது. அதனால், மற்றவர்களின் உதவியில்தான் போய் வரக்கூடிய சூழ்நிலை. நான் இந்தியாவில், காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களுக்குத் தொண்டு செய்து கொண்டே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதுபோல ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்குள்ள இரண்டு பண்ணைகளைப்பற்றி அறிந்தேன். அவற்றில் நார்வே நாட்டிலிருக்கும் ஆட்டுப்பண்ணையில் பணி செய்து கொண்டே தங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஐரோப்பியர்களுக்குப் பயணம் மிக பிடித்தமான விஷயம். பயணம் என்பது சுற்றுலா அல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஐரோப்பியர்கள் பெரியளவில் பணம் செலவு செய்யாமல் நெடு நாள்கள் பயணம் செய்யக் கற்றிருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் பாஸ்போர்ட்களுக்குக் கிடைக்கும் விசா சலுகைகளும் அவர்களது பயணங்களுக்கு முக்கியமான காரணம். மேலும், பயணம் என்பது அவர்களின் கலாசாரத்தின் முக்கிய அங்கமும் கூட. அந்த நாட்டில் வேலை இல்லாதவர்களுக்குத் தேவையான உதவியை அரசாங்கமே செய்கிறது. ஒரு பட்டப்படிப்பு முடிப்பதற்குள் அல்லது ஒரு வேலை மாற்றத்துக்கு இடைப்பட்ட காலத்துக்குள் அவர்கள் சராசரியாக 8 மாதங்கள் பயணித்து விடுகிறார்கள்.

நார்வே போன்ற நாடுகளில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய முழு நேர ஊழியர்கள் இருப்பதில்லை. அந்நாடுகளில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்கி வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் `ஃபுட் ஃபார் வொர்க் ஸ்கீம்' (Food for work scheme) என்கிறார்கள். பண்ணை வேலை மட்டுமல்லாமல், நம் திறனுக்கு ஏற்றவாறு எல்லா வேலைகளுமே இத்திட்டத்தில் கிடைக்கின்றன. அது தொடர்பான சில இணைய இணைப்புகளையும் இங்கே கொடுத்துள்ளேன்.

https://hippohelp.com/

http://wwoof.net/

https://www.workaway.info/

நார்வே நாட்டில் எனக்கு வாய்ப்பளித்த பண்ணை, சுமார் 250 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இரண்டு நீரோடைகளைக் கடந்து ஒரு மலை வரை தொடர்கிறது அப்பண்ணை. அதில் ஒரு பகுதியில்தான் ஆட்டுப்பண்ணை அமைந்துள்ளது. அங்கு 150 ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் மூன்று குதிரைகளும் உள்ளன. நார்வே நாட்டில் உள்ள `இன்னொவேஷன் நார்வே ஆர்கனைசேஷன்' எனும் அமைப்பின் மூலம் செயல்படும் இப்பண்ணையின் முக்கிய நோக்கம், முழுமையான நிலையான வாழ்வாதாரத்தை விவசாயிகளுக்கு உருவாக்கித்தருவதுதான். சமீபத்தில்தான் இப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணையின் சிறப்பம்சம், இங்கு அமைக்கப்பட்டுள்ள நிலையான சூழல் முறைதான். இம்முறையைச் செயல்படுத்த பண்ணையை நிர்வகிப்பவர்கள், மிகச் சிறந்த சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களைக் கையாள்கிறார்கள்.

 கடுங்குளிரிலிருந்து, ஆடுகளைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உள்ளரங்கத்தில் கொட்டிலில் வைத்துள்ளனர். கொட்டிலின் தரைப் பகுதிக்கும் நிலத்துக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பதால், ஆடுகளின் புழுக்கை மற்றும் சிறுநீர் கொட்டிலின் அடியே சேகரமாகிறது. இதனால், கொட்டில் சுத்தமாக இருக்கிறது. கொட்டிலுக்கு அடியில் சேகரமாகும் கழிவுகள் மூலம் எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு கடுங்குளிர் காலங்களில் வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்கிறார்கள். அந்த எரிவாயுவைக் கொண்டு சமையல் செய்து கொள்கிறார்கள். சமைக்கும் போது வெளிப்படும் புகையைக் கூட சூழலுக்குப் பாதிப்பு இல்லாவகையில் தண்ணீரைச் சுட வைக்கப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எரிவாயு தயாரித்தது போக மீதமிருக்கும் கசடுகளை உலர்த்தி உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆடு வளர்ப்பிலும், நவீனத் தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆடுகளுக்கு வைக்கோலையும், சிறுதானிய மாத்திரைகளையும் உணவாக வழங்குகிறார்கள். இயல்பான மேய்ச்சலில் கிடைக்கும் சத்துகள் இந்த மாத்திரைகளில் அடங்கியுள்ளன. இப்பண்ணையில் பனிக்குகை போன்ற ஓர் அமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட எஸ்கிமோக்களின் குடிசையைப் (இக்லூ) போன்ற அமைப்பு அது. கடுங்குளிர் காரணமாக அந்தப் பனிக்குகை உறைபனியால் சூழப்பட்டிருந்தது. அதனால், எங்களால் அக்குகைக்குள் சென்று பார்க்க முடியவில்லை.

பண்ணையின் பராமரிப்புப்பணிகளில் முக்கியமானவற்றில் ஒன்று, இக்குகையிலிருந்து பனியை அகற்றுவது. ஒரு நாள் பனியை அகற்றத் தவறினாலும், அது மிகப் பெரிய பிரச்னையாகி விடும். குளிர் காலத்தில் கால்நடை வளர்ப்பு தவிர, எந்த விவசாயப் பணிகளையும் செய்ய முடிவதில்லை. நார்வே நாட்டில், இந்தப் பண்ணை இருக்கும் இடத்தில் குளிர் காலங்களில் சூரிய ஒளியைக் காண்பது மிக அரிது. நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய நான்கு மாதங்களில் சூரியனைப் பார்க்க முடியாது. மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை, சூரியன் தெரியும் நேரம் படிப்படியாக அதிகரிக்கும். மே மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதி வரை சூரியன் மறையவே மறையாது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மந்தமான சூரிய ஒளி இருக்கும். சூரியனையே காண முடியாத துருவ இரவுகளும் நள்ளிரவில் கூட ஒளிரும் சூரியனும் நார்வே நாட்டு மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்டன. கோடைக்காலத்தில் அந்தப் பண்ணையில் `பெர்ரி' சாகுபடி செய்யப்படுகிறது.

அந்தப் பண்ணையில் ஆறு நாள்கள் வேலை செய்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அந்த ஒரு நாளை நாம் அருகில் சுற்றுலா சென்று வரப் பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் பணி, காலை 6.30 மணிக்குத் துவங்கும். எந்திரத்தை இயக்கி வைக்கோலைத் துண்டுகளாக்க வேண்டும். ஆடுகளின் கொட்டிலுக்குள் கிடக்கும் பழைய வைக்கோலை அகற்றி விட்டு நறுக்கப்பட்ட புதிய வைக்கோலை ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆடுகளின் வட்டிலில் இருக்கும் பழைய தண்ணீரைக் கொட்டி விட்டு புதிய தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். வைக்கோல் கொடுத்து முடித்தபிறகு ஆடுகளுக்குத் தானியங்களைக் கொடுக்க வேண்டும். அது மிகவும் ஆபத்தான விஷயம். குளிர்காலம் என்பதால் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டிலுக்குள்ளேயே வைத்திருப்பதால் அவை, பைத்தியக்காரத்தனமான மனநிலைக்கு உள்ளாகி விடுகின்றன. தானியங்களை எடுத்துச்செல்லும் வாளிகளின் சத்தம் கேட்டவுடன் ஆடுகள் எங்களைத் தாக்க வந்தன. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக அந்த வேலை பழகி விட்டது. என்னைப்போல அங்குத் தங்கியிருந்த சிலரும் என்னோடு சேர்ந்ததால், வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கேம்ப் ஃபையர்

ஆடுகளுக்கான பராமரிப்புப் பணி முடிந்தவுடன் குதிரைகளை மேய்க்க வேண்டும். குதிரைகளுக்கு உணவு அளிப்பது ஒரு சிக்கலான விஷயமாக இருந்தது. குதிரைகளைப் பேணுவது கடினமானதாகவும், சவாலான விஷயமாகவும் இருந்தது. குதிரைகளுக்குச் சுடு தண்ணீரைத்தான் குடிக்கக் கொடுக்க வேண்டும். சுட வைத்து எடுத்து வந்த தண்ணீரை நான்கு மணி நேரத்துக்குள் குதிரைகளைக் குடிக்க வைத்து விட வேண்டும். இல்லையென்றால், தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விடும். அதேபோல தானியங்களை, சுடுநீரில் கரைத்து, `சூப்' போலத் தயாரித்து குதிரையின் வாயில் ஊற்ற வேண்டும். குதிரைகளுக்குத் தண்ணீர் கொடுப்பது, உணவு ஊட்டுவது போன்ற வேலைகளை திறந்த வெளியில்தான் செய்ய வேண்டியிருந்தது. திறந்தவெளியில் ஏழு அடுக்குகளைக் கடந்தும் அங்கு 16 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலை நிலவும். அந்தக் குளிரில் நரம்புகள் கூட விரைத்து விடும்.

குதிரைகளைப் பராமரிக்கும் பணிகளை முடிக்கக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும். அதன்பிறகுதான் நாங்கள் காலை உணவுக்குச் செல்ல வேண்டும். அப்பண்ணையில், எப்போது வேண்டுமானாலும், எந்த உணவை வேண்டுமானாலும் நாமே சமைத்துக் கொள்ளலாம். அடுத்த நாள் சமையல் செய்யவிருக்கும் உணவுக்குத் தேவையான பொருள்களின் பட்டியலை முதல் நாளே கொடுத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை அந்தப் பொருள்கள் சமையலறைக்கு வந்து விடும்.

காலை உணவை முடித்த பிறகு மதியம் ஒரு மணி வரை எங்களுக்கு எந்த வேலையும் இருக்காது. ஒரு மணிக்கு மீண்டும் நாங்கள் கொட்டகைக்குள் சென்று ஆடுகளுக்குக் கொஞ்சம் வைக்கோலையும், தண்ணீரையும் அதற்கான தட்டுகளில் நிரப்ப வேண்டும்.

வழக்கமாக மதிய நேரத்தில் பண்ணையில் கட்டுமானப்பணிகளைத்தான் நாங்கள் செய்தோம். அந்தக் கொட்டகை மற்றும் பண்ணையின் கட்டமைப்பு சவால்கள் மீது எங்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அங்கிருந்த சில தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் எங்களது மூளையைப்பயன்படுத்தி உதவிகள் செய்தோம்.

மாலை நான்கு மணிக்கு பொது உணவுக்கான வேலைகளை ஆரம்பிப்போம். எல்லோரும் ஒன்றாக உண்பது, இரவில் மட்டும்தான். ஒரு தன்னார்வலர் (அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சமையல்காரர்) மட்டும் எங்களுக்குச் சமையல்காரராக உதவி புரிந்தார். அவர்மூலம் சில நல்ல உணவுகளைச் சாப்பிட முடிந்தது. எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அது ஐரோப்பிய உணவாகத்தான் இருந்தது. அதாவது உப்புச்சப்பில்லாமல்.

6 மணிக்கு இரவு உணவை முடித்து, 6.45 மணிக்கு மீண்டும் ஒரு முறை கொட்டிலுக்குள் சென்று காலையில் செய்த பணிகளை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டால், அன்றைய பணி முடிவடைந்துவிடும். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு இரவு இனிமையாகக் கழியும். இரவு பன்னிரண்டு மணி வரை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்போம். சில சமயங்களில் கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளையும் விளையாடுவோம்.

ஒரு நாள் திரு.ஹூயூபர்ட் (பண்ணை உரிமையாளரின் கணவர்) எங்களுக்கு `கேம்ப் ஃபயர்' உருவாக்கித் தந்தார். மைனஸ் 28 டிகிரி குளிரில் நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தது மறக்க முடியாத அனுபவம். இரவு முழுவதும் ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்தான். அன்று வானம் முழுவதும், பச்சை நிறமாகக் காட்சி அளித்தது. இந்த ஒளி தொடர்பாக நிறைய நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. அந்தப் பச்சை நிற ஒளியைக் காண்பது அவ்வளவு அரிதல்ல. வெவ்வேறு நிறங்களில் ஒளி சீரற்று நகர்வதைக் காண்பதுதான் மிக அரிதான விஷயம். இதுதான் வடக்கு வெளிச்சம் (நார்தர்ன் லைட்ஸ்) என அழைக்கப்படுகிறது. அங்கேயே வசிக்கும் பலருக்குக்கூட இது காணக்கிடைக்காது. ஏனென்றால், எப்போது ஒளி நகரும் என்பது கணிக்க முடியாத விஷயம். மைனஸ் 20 டிகிரி குளிரில் இரவு முழுவதும் அமர்ந்து யாராலும் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா.

அன்றைய இரவு ஒரு மணியளவில் தீ முழுவதும் அணைந்த பிறகு குளிர் வாட்டத்தொடங்கியது. உடனே வீட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். வீட்டை நெருங்க 50 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நேரத்தில், வானில் ஓர் அதிசயத்தைக் கண்டோம். வானத்தில் இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஊதா போன்ற நிறங்கள் தீடிரெனச் சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்தன. அப்படியே நின்று விட்டோம். அண்ணாந்து வானையே பார்த்துக்கொண்டிருந்ததால் கழுத்தில் வலி ஏற்பட்டு விட்டது. மற்றொருபுறம் குளிர் வாட்டி வதைத்தது. ஆனாலும் நாங்கள் எங்கள் பார்வையை வானத்திலிருந்து அகற்றவில்லை.

வானில் வெளிச்சம்

அந்த ஒளி வேகமாக நகர ஆரம்பித்தது. அடிவானத்தில், இடது பக்கமிருந்து வலது பக்கத்துக்கு ஆரஞ்சு நிற ஒளி நகர்ந்தது. அதற்குக் கீழேயே சிகப்பு நிற ஒளி வலது பக்கமிருந்து இடது பக்கத்துக்கு நகர்ந்து. உச்சியிலிருந்து பச்சை வண்ண கதிர்கள் நேராகக் கீழிறங்கின. அந்த ஒளிமயமான வானத்தைக் கண்டவுடன் எங்களை அறியாமலே கூச்சலிட ஆரம்பித்தோம். அதைக் கேட்டு பண்ணை உரிமையாளரின் மகன் திரு. மிகேல்சன் ஓடி வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கண்டிப்பாக வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்த வர்ண ஜாலத்தை 'ஐ போன் கேமரா'க்களில் கூட சரியாகப் பதிவு செய்ய முடியாது. அதற்கு மேம்பட்ட DSLR கேமராக்கள் தேவை. அந்த ஒளியின் நாட்டியம், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நீடித்தது. நாட்டியம் முடிந்ததும் அனைவரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போதுதான், `நான் இங்கேதான் பிறந்து வளர்ந்து வருகிறேன். இதுவரை இப்படிப்பட்ட காட்சியைக் கண்டதில்லை' என்று மிகேல்சன் சொன்னார். அதைக் கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பரமானந்தம் அடைந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த பண்ணைக்கு அருகில் இருக்கும் கடைக்கும் பண்ணைக்குமான தொலைவு 12 கிலோ மீட்டர். அந்தக் கடை இருக்கும் பகுதியின் பெயர் `நோர்ட்க்ஜோஸ்பாட்ன்' (nordkjosbotn). இந்தப் பகுதியில் குளிர் காலத்தில் கடலில் உறைந்தநிலையில்தான் கடலலைகளைக் காண முடியும். அந்த நாட்டு மக்கள் அந்தப் பனிக்கட்டியில் பனிச்சறுக்கு விளையாடுகிறார்கள். அங்கு மீன் பிடித்தல் ஒரு சவாலான விளையாட்டு. பனித்தளத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு பனிப்பாறையில் துளையிட்டு அதற்குள் தூண்டிலை விட்டு மீன் மாட்டும் வரை மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.

என்னால் அந்த மக்களோடு மிக விரைவாக நட்பாகப் பழக முடிந்தது. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கார் ஓட்டுவது, மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும். நார்வேயில் மிக அற்புதமாக இருந்தது. நார்வேயின், அமைதியான வெற்றிடங்களும், மலைச் சரிவுகளும் மலைகளும் ரம்மியமானவை. கடல் மட்டத்திலிருந்து 542 மீட்டர் உயரத்தில் உள்ள ரைட்டன் மலை (Mount Ryten) மற்றும் க்வால்விகா (Kvalvika) கடற்கரை ஆகியவற்றுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அவை அப்படியே என் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலைதான் ஆர்டிக் பிரதேசத்தின் தனித்துவம். காற்றுதான் இங்கே நாம் உணரும் குளிர் நிலையை முடிவு செய்யும். காற்றின் வேகம் அதிகமானால் நாம் உணரும் குளிரும் அதிகமாகும்.

நார்வேயில் பத்து நாள்கள் தங்கிவிட்டு நாடு திரும்பலாம் என முடிவு செய்தபோது, துரதிர்ஷ்டவசமாகப் பனிப் புயல் தாக்கியது. வட துருவத்திலிருந்து சில மைல்கள் மட்டுமே உள்ள அப்பகுதியிலிருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதான ஒரு செயல் இல்லை. விமானம் ஒரு வசதியான வழி. ஆனால் நான் முன்பதிவு செய்யாததால் கட்டணம் அதிகமாக இருந்தது.

அங்கிருந்து நார்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோ அல்லது ஸ்வீடன் தலை நகர் ஸ்டோக்ஹோல்ம் செல்ல வேண்டும். அங்கிருந்து பெர்லின் வழியாக சுவிட்சர்லாந்து செல்லப் பேருந்துகள் கிடைக்கும். பேருந்துகளில் கட்டணம் மிகக்குறைவுதான். இரண்டு தலைநகரங்களுக்குமே பேருந்து மற்றும் ரயில் ஆகியவை மூலமாகக் கிட்டத்தட்ட 28 மணி நேரங்கள் பயணிக்க வேண்டும்.

நான், நார்விக் எனும் சிறிய டவுனுக்குப் பேருந்தில் சென்று அங்கிருந்து ஸ்டோக்ஹோல்ம்க்கு ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பெர்லின் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலமாக சுவிஸ் செல்லலாம் எனத் திட்டமிட்டேன். நான் இருக்கும் இடத்திலிருந்து சுவிஸ் செல்ல கிட்டத்தட்ட 60 மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். அழுதுகொண்டே அதற்கான பயணச்சீட்டுகளை வாங்கினேன். கிளம்ப வேண்டிய நாளுக்கு முந்தைய நாளில் நான், தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்து எனது பொருள்களை எடுத்து வைத்த சமயத்தில்தான் பனிப்புயல் வீச ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு அதே நிலைமை நீடிக்கும் என்று அறிவித்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் புயலைச் சமாளிப்போம் என்று முடிவு செய்தேன்.

பண்ணை

மறுநாள் காலை, ஆடுகளுக்கும் குதிரைக்கும் ஒரு `பை' சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து எல்லாரையும் கட்டித்தழுவி விடை பெற்றேன். நான் தங்கியிருந்த பண்ணையிலிருந்து நார்விக் செல்ல யாரிடமாவது `லிஃப்ட்' கேட்போம் என முடிவு செய்தேன். நார்விக் செல்ல வேண்டிய பேருந்து காலை பத்து மணிக்குத்தான். அது மதியம் இரண்டு மணி அளவில்தான் நார்விக் சென்றடையும். அங்கிருந்து ஸ்டோக்ஹோல்மிற்கான ரயில் மதியம் 3:05 க்கு இருந்தது. புயலால், பேருந்து தாமதமாகி விடலாம் என்று எண்ணிதான் லிஃப்ட் கேட்க முடிவு செய்தேன். மிகேல்சன் என்னை நோர்ட்க்ஜோஸ்பாட்ன் வரை காரில் கொண்டு வந்து விட்டார்.

கடும் பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது. நான் ஒரு அட்டையில், `நார்விக்’ என எழுதி அதை ஏந்திக்கொண்டு சாலையில் நின்று கொண்டிருந்தேன். புயலின் வேகத்தினால் இரு முறை அட்டை கையை விட்டுத் தவறி பறந்து விட்டது. அதை எடுக்க ஓடி, பனியில் சறுக்கி விழுந்தேன். பத்து நிமிடங்களில் இரண்டே கார்கள் மட்டும்தான் வந்தன. அவையும் நிற்காமல் சென்று விட்டன. என் கால்கள், குளிரில் உறைந்து விட்டன. எனக்கு அழுகையே வந்து விட்டது. அந்தச் சூழ்நிலையில், ஒரு ஜீப் வந்து என்னிடம் வந்து நின்றது. அந்த ஜீப்பில் இருந்தவர்கள், என்னை பார்டுஃபோஸ் (Bardufoss) என்ற இடம் அவரை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். அது, நார்விக் செல்ல வேண்டிய தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் உள்ள இடம். `எட்டா தென்னையை விட எட்டும் எலுமிச்சையே மேல்' என அவர்கள் வாகனத்தில் ஏறினேன்.

அந்த வாகனத்தில் இரண்டு பேர் இருந்தனர். பயணம் மிகவும் அபாயகரமாகவே இருந்தது. கடும் பனி கொட்டிக்கொண்டிருந்ததால் முன்னே செல்லும் வாகனங்கள் சுத்தமாகத் தெரியவில்லை. சாலையில் பனி உறைந்திருந்ததால், வாகனம் வழுக்கிக்கொண்டே இருந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இருவரும் சிரியாவிலிருந்து போரின் காரணமாக நார்வேவுக்குத் தஞ்சம் புகுந்தவர்கள் எனத் தெரிந்தது. சிரியாவில் அவர்கள் பட்ட இன்னல்கள் பற்றியும் நார்வேவுக்கு வர அவர்கள் மேற்கொண்ட மிக ஆபத்தான பயணத்தைப் பற்றியும் கேட்டறிந்தேன். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் நமது அரசாங்கம் செய்ததைத்தான் அவர்களின் அரசாங்கம் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. மக்களின் வளர்ச்சிக்காகத்தான் நாடே தவிர, ஆட்சியாளரின் வளர்ச்சிக்காக இல்லை என்பது இன்னும் பல நாட்டு அரசாங்கங்களுக்குப் புரியவில்லை என்பது மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது. பல நாடுகளில் இன்று நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு ஆட்சியாளர்களின் பதவி மோகமே பெரும் காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இந்தப் பிரச்னை பரவியிருப்பதை அவர்களுடன் உரையாடியதிலிருந்து புரிந்து கொண்டேன். அவர்கள் என்னை பார்டுஃபோஸ் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்றனர்

அந்த நேரத்தில், பனிப்பொழிவு மிக அதிகமாகி விட்டது. சாலையில் ஒரு வாகனம் கூட தென்படவில்லை. அரை மணி நேரம் நின்று சோர்ந்துபோன சமயத்தில், பெரிய ட்ரைலர் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். அதன், ஓட்டுநர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அது வோல்வோ நிறுவனத்தின் வாகனம். நான் இது வரை ட்ரைலர் கேபினில் அமர்ந்தது இல்லை. அது எனக்கு மிகவும் புதுமையும் ஆச்சர்யமுமாய் இருந்தது. கேபினில் ஹீட்டர், ஏர் கண்டிஷனர் , காபி மெஷின், ஓவன், குளிர்சாதனப்பெட்டி, ஜி.பி.எஸ் நேவிகேஷன் சிஸ்டம், நீளமான படுக்கை என அத்தனை வசதிகளும் இருந்தன. எனக்குக் கொஞ்சம் `போலிஷ்' மொழி தெரிந்திருந்ததால் அந்த மொழியில் ஓட்டுநரிடம் சில வார்த்தைகள் பேசினேன். மிகவும் சந்தோஷப்பட்ட அவர், எனக்குக் கொஞ்சம் இனிப்புப் பண்டங்களைக் கொடுத்தார். மொழிப்பற்றுதான் அனைத்தையும் விஞ்சியது என உணர்ந்தேன்.

நாங்கள் சென்று கொண்டே இருக்கும்போது, ஒரு வாகனம் எங்களை வேகமாக முந்திக்கொண்டு சென்றது. அது, நான் செல்லத் திட்டமிட்டிருந்த பஸ். ஆனால், அந்த அசாதாரண வானிலையில் ட்ரைலர் வாகனத்தால் வேகமாகச் செல்ல முடியவில்லை. கடின முயற்சி செய்தும் அந்த ஓட்டுநரால், என்னைச் சரியான நேரத்துக்கு ரயில் நிலையத்தில் விட முடியவில்லை. நான் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அந்தச் சமயத்தில் என்னை நெகிழ வைத்த விஷயம், அந்த ஓட்டுநர் அன்றைய இரவு நான் நார்விக்கில் தங்குவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்ததுதான். நான், பணிவாக அதை நிராகரித்து விட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

பொதுவாக, ஐரோப்பிய நகரங்களில் பேருந்து நிலையம் ரயில் நிலையத்தின் அருகிலேயே இருக்கும். நான் வர முன்பதிவு செய்திருந்த பேருந்து அங்கு நின்றுகொண்டிருந்தது. திட்டமிட்டபடி பேருந்திலேயே வந்திருந்தால், நான் ரயிலைப் பிடித்திருக்க முடியும். அதுதான் விதியின் சதி.

நார்விக், ஆர்க்டிக் வளையத்தில்தான் இருக்கிறது. அதாவது நான் இன்னும் துருவப் பிரதேசத்திலிருந்து கீழே வர வில்லை. நார்விக், ஸ்வீடன் நாட்டின் `கிருனா' என்ற இடத்திலிருந்து எடுக்கப்படும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் ஒரு துறைமுக நகரம். அந்த நகரத்தில் எங்கு தங்குவதென்று எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள் பயணம் செய்ய வேண்டிய ரயிலுக்கான பயணச்சீட்டை வாங்கச் சென்றேன். நார்விக், நார்வே நாட்டின் ஒரு பகுதி. ஆனால், ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள், சுவீடன் ரயில்வேவுக்குச் சொந்தமானவை. அதனால், அந்த ரயில்நிலையத்தில் பயணச் சீட்டு அலுவலகம் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல், இரவு தங்குவதற்கான வழியைத் தேட ஆரம்பித்தேன். சில விடுதிகளில் விசாரித்தபோது, ஒரு இரவு தங்குவதற்கு 150 யூரோ கட்டணம் கேட்டார்கள். அது எனது செலவழிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. அதனால், `Couch Surfing' ஆப் மூலமாக ஏதேனும் வீடுகளில் தங்க இடம் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தேன். ஐந்தே நிமிடங்களில் ஒரு பெண் அவர் வீட்டில் என்னைத் தங்க அனுமதித்தார்.

அவரது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். கடலோரமாக இருந்த வரிசை வீடுகளில் ஒன்று அவருடைய வீடு. மிக அமைதியான ஒரு சூழல். அவர், போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு சுமார் 42 வயது இருக்கும். முதுநிலை வேதியியல் பயின்று விட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரும் அவரின் நாய்க் குட்டியும்தான் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தனிமையைப் போக்குவதற்கும் கலாசாரப் பரிமாற்றத்துக்காகவும் பயணிகளைத் தங்க அனுமதிப்பதாகக் கூறினார். என்னுடைய பயணத்தின் சோகத்தை அவரிடம் சொன்னேன். அவர், `பொதுவாக ஸ்வீடிஷ் ரயில்வேயில் இடம் இருந்தால்... மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளும்படி நாம் காரணம் சொன்னால், நம்மிடம் இருக்கும் பயணம் செய்யப்படாத பழைய ரயில் பயணச்சீட்டை வைத்தே பயணம் செய்ய அனுமதிப்பார்கள். அது சட்ட பூர்வமானது இல்லை. ஆனால், செயல் முறையில் நடக்கக்கூடிய விஷயம். மேலும், ரயிலிலேயே பயணச்சீட்டு கண்காணிப்பாளரிடம் பயணிச்சீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்று சொன்னார். அதனால் அடுத்த நாள் ரயிலில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். அதே சமயம் ஆன்லைனில் தேடியதில் ஸ்டோக்ஹோல்மிலிருந்து சுவிஸுக்கு மலிவுக் கட்டணத்தில் விமானப் பயணச்சீட்டும் எனக்குக் கிடைத்தது.

ரயில் பயணம், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் ரயில் பயணித்தது. சுவீடன் நாட்டில், ரயில்களில் தேவைக்கு அதிகமாகவே வசதிகள் உள்ளன. பேருந்து நிலையம் கூட ஒரு விமான நிலையம் போல் செயல்படுகிறது. பயணிகளைப் புறப்பாடு வாசலுக்கு வந்து பேருந்துகள் ஏற்றிச் செல்கின்றன. சுவீடன் நாட்டிலிருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்து திரும்பினேன்.

இப்பயணத்தை மேற்கொண்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட இத்தருணத்தில், பயணத்தின் பிரதிபலிப்பாக எனக்கு ஒரு விஷயம் மனதில் மிக ஆழகமாகப் பதிந்துள்ளது. என்னால் மிகக்குறைந்த செலவில் இப்பயணத்தை மேற்கொள்ள முடிந்ததற்கான காரணம், ஒரு மனிதர் இன்னொருவர் மேல் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை ஆகியவைதான். இதை மனதளவில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயலிலும் இருக்க வேண்டும் என எண்ணி என்னால் முடிந்த அளவுக்குச் சில நபர்களுக்கு என் வீட்டில் தங்கும் உதிவியை நான் செய்து வருகிறேன், என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆனால், அது மட்டுமே போதாது என்பதையும் நான் உணர்கிறேன்.

அனைவருக்கும் இயன்ற அளவில் உதவுவோம்... நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்