ரொனால்டோவை யுவன்டஸ் வாங்கக்கூடாது..! இரண்டு நாள் போராட்டத்தில் ஃபியட் ஊழியர்கள்

1000 ஊழியர்களுகளின் சம்பளம் உயர வேண்டுமா, இல்லை ஒரு தனி நபரின் சம்பளம் உயரவேண்டுமா? ஃபியட் தொழிலாளர்கள் கேள்வி...

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான க்ரிஸ்டியானோ ரொனால்டோவை இத்தாலியைச் சேர்ந்த யுவன்டஸ் அணி 105 மில்லியன் யூரோ(800 கோடி ரூபாய்) கொடுத்து தன் அணிக்கு விளையாட கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தி இத்தாலிய கால்பந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருந்தாலும் மெல்ஃபி எனும் சிறிய ஊரில் உள்ள ஃபியட் தொழிலாளர்களை கடுப்பேற்றியுள்ளது. 

உலகக்கோப்பையில் ரொனால்டோ

மெல்ஃபியில் இருக்கும் ஃபியட் தொழிலாளர்கள், யுவன்டஸ் அணி க்ரிஸ்டியானோ ரொனால்டோவை வாங்குவதை எதிர்த்து ஜூலை 15 முதல் 17 வரை 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அகெனல்லி எனும் குடுப்பத்தை சேர்ந்தவர்கள்தான் ஃபியட்-கிரைஸ்லர் நிறுவனத்தில் 29.18 சதவிகித பங்குகளையும், யுவன்டஸ் அணியில் 63.77 சதவிகித பங்குகளையும் வைத்துள்ளார்கள். "இரண்டு நிறுவனத்திலும் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஃபியட் தொழிலாளர்களை புதிய மாடல்கள் வரும் வரை சம்பளத்தை தியாகம் செய்ய சொல்லிவிட்டு ஒரே ஒரு ஃபுட்பால் பிளேயருக்கு 100 மில்லியன் சம்பளம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று கூறி தொழிலாளர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இத்தாலியில் உள்ள Unione Sindicale di Base (USB) எனும் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் "இதை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நீங்க Fiat Chrysler Automobiles தொழிலாளர்களையும் பல ஆண்டுகளாக வருமானத்தை தியாகம் செய்யச் சொல்லிவிட்டு இப்போது ஒரு கேளிக்கை போட்டிக்காக 100 மில்லியன் யூரோ கொடுத்து ரோனால்டோவை வாங்குரீங்களே. ஒரே ஒருவர் மில்லியன்களில் சம்பாதிக்க 1000 தொழிலாளர்களின் குடும்பங்கள் சம்பளம் போதாமல் கஷ்டப்படவேண்டுமா?" என்று ஃபியட் நிறுவனத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும், "இந்தச் சமமற்ற நடவடிக்கை எங்களை வருத்தப்படவைக்கிறது. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எதிர்காலத்துக்கான கார் மாடல்களில் முதலீடு செய்யவேண்டும்' என்று தொழிற்சங்கத்தினர் அறிவுறுத்துகிறார்கள். 

ஃபியட் மெல்ஃபி தொழிற்சாலை

யுவன்டஸ் அணி ரோனால்டோவுக்கு 105 மில்லியன் யூரோ டிரான்ஸ்ஃபர் தொகையைத் தொடர்ந்து ஆண்டுக்கு 30 மில்லியன் யூரோ சம்பளம் என 4 ஆண்டுகளுக்கு டீல் போட்டுள்ளது. விளையாட்டு மட்டுமல்லாமல் யுவன்டஸ் நிறுவனத்தை பலப்படுத்த ரொனால்டோ மற்ற வழிகளிலும் உதவி செய்யவேண்டும் என்பதற்காக 12 மில்லியன் யூரோ ஆன்சிலரி ஃபீஸ் என்று தனியாக கொடுக்கிறார்கள். 1.7 கோடி சதுரஅடி தொழிற்சாலையான மெல்ஃபியில் 8,000 தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தற்போது இந்தத் தொழிற்சாலையில் ஃபியட் 500X மற்றும் ஜீப் ரெனிகாடே மட்டுமே உற்பத்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!