`அன்புள்ளம் கொண்ட மகளுக்கு அம்மா எழுதும் கடிதம்...’ - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

`அன்புள்ளம் கொண்ட மகளுக்கு அம்மா எழுதும் கடிதம்...’ - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

நெகிழ்ச்சிக் கதை

`நாற்பது என்பது இளமையின் முதுமை வயது; ஐம்பது என்பது முதுமையின் இளமை வயது’ என்று குறிப்பிடுகிறார் ஃப்ரெஞ்ச் கவிஞரும் நாவலாசிரியருமான விக்டர் ஹியூகோ (Victor Hugo). உலகம் முழுக்க எத்தனையோ அறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் `முதுமையைக் கொண்டாட வேண்டும், முதியவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ உதவ வேண்டும்’ என்று வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் முதியவர்களைப் புறக்கணிக்கும் போக்கு நின்றபாடில்லை. தனக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று அறிந்திருந்தும், மனிதர்கள் முதியோரை ஏளனம் செய்கிறார்கள்; தட்டிக் கழிக்கிறார்கள்; ஒதுக்கிவைக்கிறார்கள். வயதாவதென்பது நோயல்ல, இயற்கை. வாழ்ந்த வாழ்க்கையை நிதானமாக அசைபோடும் பருவம். அந்த முதிர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கடிதம் மூலமாக ஒரு தாய், தன் மகளுக்கு உணர்த்தும் கதை இது... 

 தாய் - மகள்

ஸ்பெயினிலிருக்கும் சிறு நகரத்தில் வசிக்கிறார் அந்த மூதாட்டி. அவர், தன் மகளுக்கு எழுதிய கடிதம் இது. ``அன்பு மகளே... இன்று, நீ  என்னைப் பார்க்கும்போது வயதானவளாகத் தெரிகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என் செல்லம். அதைவிட முக்கியம், என்னுடைய இந்த வயதில் என்னை நீ புரிந்துகொள்ள முயற்சி செய். அதுதான் என் விருப்பம்.  நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரே விஷயத்தை ஆயிரமாவது முறையாக நான் திரும்பவும் சொல்லிக்கொண்டிருப்பேன். உடனே இடை மறித்து, `இப்போதாம்மா ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி இதைச் சொன்னே...’ என்று சொல்லாதே. தயவுசெய்து இதைக் கேளேன்... நீ சிறு குழந்தையாக இருந்த காலத்தை நினைவில் கொண்டு வா. அப்போதெல்லாம், ஒரே கதையில் உன் கண்கள் உறக்கத்தைத் தழுவும் வரை ஒவ்வொரு நாள் இரவும் நான் உனக்குச் சொல்வேன். அது மாதிரிதான் இதுவும். 

எனக்கு குளிக்க விருப்பமில்லாத நாள்களில், அதற்காக என்னைப் பைத்தியமாக அடிக்காதே, சங்கடப்படுத்தாதே! உனக்கு நினைவிருக்கிறதா... நீ சிறு பெண்ணாக இருந்தபோது, நீ குளிக்க வராமல் ஓடுவாய்... நான் உன்னைத் துரத்திப்பிடித்துக் குளிக்க அழைத்துப் போவேன்... அது மாதிரிதான் இதுவும். 

இன்றைக்கு எல்லாவற்றிலும் புதிது புதிதாகத் தொழில்நுட்பம், அதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அப்பாவியாக நான்... அப்படித்தானே என்னை நினைக்கிறாய் என் மகளே! அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடு. அதைவிட்டுவிட்டு என்னை அப்படி ஒரு பார்வை பார்க்காதே! என் கண்ணே... உனக்கு நினைவிருக்கிறதா... எப்படி முறையாகச் சாப்பிடுவது, அழகாக உடை உடுத்துவது, தலை வாருவது... என்று எத்தனை விஷயங்களை, தினமும் மிகப் பொறுமையாக நான் உனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறேன். அது மாதிரிதான் இதுவும்.  

அம்மா

இன்று, நீ என்னைப் பார்க்கும்போது வயதானவளாகத் தெரிகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என் செல்லம். அதைவிட முக்கியம், என்னுடைய இந்த வயதில் என்னை நீ புரிந்துகொள்ள முயற்சி செய். அதுதான் என் விருப்பம். 

நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த விஷயத்தை விட்டுவிட்டு நான் வேறு ஒன்றுக்குத் தாவலாம்; மாறலாம். பேசியதை நினைவுக்குக் கொண்டு வர எனக்கு நேரம் கொடு மகளே. அந்த விஷயத்துக்கு என்னால் வர முடியவில்லையென்றால் உணர்ச்சிவசப்படாதே, பொறுமையை இழக்காதே, கோபப்படாதே. மிக முக்கியமான ஒரு விஷயம், உன் இதயத்துக்குத் தெரியும். அது, நான் உன்னுடன் இருக்கிறேன். அதுதான், அது ஒன்றுதான் இப்போது முக்கியம். 

இப்போது வயதாகிவிட்டது. முன்புபோல என் வயதான, தளர்ந்த கால்களை எட்டுவைத்து உன் வேகத்துக்கு என்னால் நடக்க முடியாது மகளே. இந்த சந்தர்ப்பத்தில், நீ முதன்முதலில் நடை பழகியபோது நான் எப்படி என் கரங்களை உனக்கு உதவுவதற்காக நீட்டினேனோ, அப்படி உன் கைகளை எனக்குக் கொடுத்து உதவு  கண்ணே! 

இந்த நாள்களில் துயரம் கொள்ளாதே... என்னுடன் இரு... நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக முடித்துக்கொள்ளப்போகிறேன் என்பதைப் புரிந்துகொள். நீ எனக்கு பரிசாகத் தந்திருக்கும் நேரத்தையும் மகிழ்ச்சியையும் நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன் மகளே... அதற்காக உனக்கு நான் நன்றி சொல்கிறேன். 

மன நிறைவோடு, மலர்ந்த சிரிப்போடு உனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் மகளே... `ஐ லவ் யூ.’ 

நேசத்துடன் 

அம்மா  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!