வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/07/2018)

கடைசி தொடர்பு:19:27 (16/07/2018)

``புதிய பள்ளியில் சந்தனப் பொட்டை நடிப்பாக மட்டுமே பார்க்கிறார்கள்!'' - சந்தனப் பொட்டு சர்ச்சை மாணவியின் தந்தை

``ஓர் அகாடமிக் இயரின் நடுவில் இப்படிப் பள்ளியைவிட்டு வெளியேற்றிவிட்டார்களே, மகளின் ஒரு வருடம் வீணாகிவிடுமே என்று பயந்துகொண்டிருந்தேன்.''

ந்தனப்பொட்டு வைத்து குறும்படம் ஒன்றில் நடித்தார் என்பதற்காக, கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை, அவர் படித்துக்கொண்டிருந்த இஸ்லாமியப் பள்ளியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். இதுபற்றி மாணவியின் தந்தை, முகநூலில் பதறியிருந்தார். முழு விஷயத்தையும் தெரிந்துகொள்ள, அவரைத் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர் முயற்சிக்குப் பிறகு, ஒரு வாரம் கழித்துப் பேசினார், மாணவியின் அப்பா உம்மர் மலயில்.

மாணவி ஹென்னா

``என் மகள் ஹென்னா, ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நடனம், பாட்டு, ஆங்கிலப் பேச்சுப் போட்டி ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். அவள் படிக்கும் மதரசா பள்ளியில் நடக்கும் கலை விழாக்களில் தவறாமல் கலந்துகொள்வாள். தவிர, மதரசா பள்ளிகளுக்கிடையேயான கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளை வென்றிருக்கிறாள். இதன் தொடர்ச்சியாக, ஒரு மலையாளக் குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு என் மகளுக்குக் கிடைத்தது. அவள் படிப்பிலும் படு கெட்டி. அவள்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட்'' என அழுத்தமாகக் குறிப்பிட்டுத் தொடர்கிறார். 

``அந்தக் குறும்படத்தின் பெயர், `தக்‌ஷா'. அதில், சந்தனப்பொட்டு வைத்திருப்பதுபோல ஒரு காட்சி. அந்தப் படத்தை பள்ளி நிர்வாகத்தினர் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. அதை ஒரு காரணமாகக் காட்டி, என் மகளை பள்ளியைவிட்டு வெளியேற்றிவிட்டார்கள். படிப்பு, எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் என எல்லாவற்றிலும் பெஸ்ட்டாக இருக்கும் என் மகளை நீக்குவதற்கு நிர்வாகத்துக்கு எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லை. இது, முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இன்னும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. அந்த வேதனையைத்தான், என்னுடைய முகநூலில் பதிவு செந்திருந்தேன். அந்தப் பதிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்தது, மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது'' என்கிறார் உம்மர் மலயில்.

கலை நிகழ்ச்சியொன்றில் ஹென்னா

பாலக்காடு அருகே வல்லப்புழாவில் சொந்தமாகச் சிறுதொழில் செய்துவருகிறார் உம்மர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என ஆனந்தமான கூடு அவருடையது. இதில், ஹென்னா வீட்டின் மூத்த மகள். ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கியது, பாட்டுப் போட்டியில் விருது பெற்றது, கலை நிகழ்ச்சிகளில் நடனமாடியது என உம்மரின் முகநூல் முழுக்க முழுக்க ஹென்னாவின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறது. 

ஹென்னா தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

``மற்றொரு மதரசா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். நல்லவேளை, அவர்கள் இந்தச் சந்தனப் பொட்டு விஷயத்தை ஜஸ்ட் நடிப்பாக மட்டுமே பார்த்தார்கள். ஆனால், என் மகள்தான் தன் தோழிகளை மிஸ் செய்துவிட்ட வருத்தத்தில் இருக்கிறாள். ஓர் அகாடமிக் இயரின் நடுவில் இப்படிப் பள்ளியைவிட்டு வெளியேற்றிவிட்டார்களே, மகளின் ஒரு வருடம் வீணாகிவிடுமே என்று பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை அல்லா காப்பாற்றிவிட்டார்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

மகளுடன் உம்மர் மலயில்

``மறுபடியும் உங்கள் மகள் ஹென்னாவை நடிக்க அனுமதிப்பீர்களா?'' எனக் கேட்டால், தயக்கமின்றி பதில் வருகிறது.

``நிச்சயமாக அனுமதிப்பேன். என் மகளுக்கு நடிப்பின் மீது விருப்பம் இருப்பதோடு, திறமையும் இருக்கிறது. அவள் நடித்த முதல் குறும்படமான `தக்‌ஷா'வே இன்னும் முடிவடையவில்லை. அதில் தொடர்ந்து நடிப்பாள். அவளுக்கு விருப்பம் என்றால், ஆக்டிங் புரொபஷனை தொடர்வாள். அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்கிறார் உம்மர் அழுத்தம் திருத்தமாக.


டிரெண்டிங் @ விகடன்