வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (17/07/2018)

கடைசி தொடர்பு:15:40 (17/07/2018)

யானைகளையும் சிறுத்தைகளையும் பிடிக்க உதவும் மயக்க ஊசி எதனால் ஆனது? #Tranquilizer

சராசரி மனிதர்களுக்கு ரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை அளவுகளைப் பார்த்துத்தான் மயக்க மருந்துகள் தரப்படும்.

யானைகளையும் சிறுத்தைகளையும் பிடிக்க உதவும் மயக்க ஊசி எதனால் ஆனது? #Tranquilizer

மூர்க்கமான விலங்குகளைப் பிடிக்கவும், அவற்றைக் கையாளவும் தொலைவில் இருந்தபடி துப்பாக்கியால் சுடுவார்கள். துப்பாக்கியிலிருந்து விடுபடும் ஊசி அந்த விலங்கின்மீது குத்திக்கொண்டு நிற்கும். மயக்க ஊசி இறங்கிய சிலமணித்துளிகளில் அந்த விலங்கு மயங்கி விழுவதை நம்மில் பெரும்பாலானோர் நேரிலோ அல்லது டிவியிலோ பார்த்திருப்போம். அந்த ஊசி மயக்கமருந்து என நமக்குத் தெரியும். சிறு விலங்கு முதல் பெரிய விலங்கு வரை அனைத்தும் அடங்கிப்போகும் ஊசியில் அப்படி என்னதான் இருக்கிறது?

மயக்க ஊசி

சில நேரம் விலங்குகள் மீது உபயோகிக்கப்படும் அந்த மருந்து மனிதர்கள் மீதும் பயன்படுத்தப்படும். அந்த மருந்தை டிரான்குலைசர்ஸ் (tranquilizers) என அழைக்கின்றனர். அந்த மருந்தைச் செலுத்தப் பயன்படும் துப்பாக்கிகளை டிரான்குலைசர் கன் எனவும் அழைக்கின்றனர். மருந்தைக் கொண்டிருக்கும் ஊசியானது டிரான்குலைசர் டார்ட் (tranquilizer darts) என அழைக்கப்படுகிறது. டிரான்குலைசர், விலங்குகளின் மத்திய நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும். இதனால் விலங்குகள் அனிச்சையாக மயக்க நிலைக்குச் செல்லும். மூர்க்கமான விலங்குகளை அருகில் சென்று மயக்க மருந்துகொடுத்து பிடிப்பது முடியாத விஷயம். அருகில் சென்று மயக்கமருந்து கொடுத்தால் பிடிப்பவருக்குச் சிக்கல்கள் எழலாம். அதனால் எப்போதும் பாதுகாப்பான தொலைவிலிருந்து சுடுவார்கள். சுட்டவுடன் விலங்குகள் சுருண்டு விழுந்துவிடும். டிரான்குலைசர் மருந்தின் அளவும் தன்மையும் விலங்குகளைப் பொறுத்து மாறுபடும்.

இம்மருந்துகளில் இரு வகைகளிருக்கின்றன. ஒன்று மைனர் டிரான்குலைசர், மற்றொன்று மேஜர் டிரான்குலைசர். மைனர் டிரான்குலைசர் நரம்புகளைச் சாந்தப்படுத்தி, விலங்களின் பதற்றத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டது. டிரான்குலைசர் எனும் மருந்தில் பென்சோடையாசிபைன் (benzodiazepines) மருந்து பிரபலமானது. இதனை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.  விலங்குகளுக்குக் கொடுத்தால் மிகப் பயங்கரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். டிரான்குலைசர் மருந்து செலுத்தி பிடிக்கப்படும் விலங்குகளுக்கு அதிகமான மருந்தைச் செலுத்தினால் சிலமணிநேரங்களில் இறக்கும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளின் எடையையும், உருவத்தையும் கணக்கிட்டு மயக்க ஊசிகள் கொடுக்கப்படும். ஆனால், அந்தக் கணக்கு எல்லாமே விலங்குகளின் உருவத்தைத் தொலைவிலிருந்து பார்த்துதானென்பது குறிப்பிடத்தக்கது.

சராசரி மனிதர்களுக்கு ரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை அளவுகளைப் பார்த்துத்தான் மயக்க மருந்துகள் தரப்படும். ஆனால், விலங்குகளுக்கு அதையெல்லாம் எப்படிப் பார்ப்பது? ஒவ்வொரு விலங்குகளுக்கும் அதன் இயல்பு, எந்த உணவு எடுத்துக்கொள்கிறது, உடல் எடை மற்றும் அதன் குணங்கள் என அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் வனத்துறையினர்தான் அதைச் சரியாகக் கையாள முடியும். ஊசிமருந்தைத் தவறாகக் கையாண்டால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டு இறந்த மகாராஜா யானையின் நிலைமைதான் மற்ற விலங்குகளுக்கும் நிகழும். விலங்குகளுக்குச் சதைப்பற்று அதிகமுள்ள உடற்பாகங்களில் மட்டுமே மயக்க மருந்துகளைச் செலுத்த வேண்டும்.

மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்ட விலங்குகளுக்கு மயக்கம் தெளிய மீண்டும் ஓர் ஊசி கொடுக்கப்படும். அப்போது மயக்கம் தெளியும் சில விலங்குகள் முன்பை விட உத்வேகத்துடன் செயல்படும். மயக்கம் தெளிந்தவுடன்தான் அடைக்கப்பட்டிருப்பது விலங்குகளுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தும். அதனால் அவ்விலங்கைப் பாதுகாப்பாகக் கையாள்வார்கள். மயக்க மருந்து செலுத்தி விலங்குகளைப் பிடிக்க வனவிலங்குகள் ஆர்வலர்களிடம் எதிர்ப்புகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலும் மயக்க மருந்துகளுக்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் தூக்க மருந்துகளை விலங்குகளுக்குச் செலுத்துகிறார்கள், வனத்துறை மருத்துவர்கள். விலங்குகளைப் பிடிக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் சந்தையில் சுலபமாகக் கிடைப்பது கொஞ்சம் வருத்தப்பட வைப்பதாகவும் வனவிலங்கு மருத்துவர்கள் புலம்புகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்