Published:Updated:

தினம் ஒரு தகவல்… 107 நாடுகள்… 7,000 தமிழர்கள்… போலீஸ் பப்ளிக் ஸ்கூலின் சேவை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போலீஸ் பப்ளிக் ஸ்கூல் வண்டலூர் அருகே இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் காவலர்கள் ஆகியோரின் இணைப்பு பாலமாக விளங்கும் இப்பள்ளி ஆரம்பம் முதலே அசத்தத் தொடங்கி இருக்கிறது.

தினம் ஒரு தகவல்… 107 நாடுகள்… 7,000 தமிழர்கள்… போலீஸ் பப்ளிக் ஸ்கூலின் சேவை!
தினம் ஒரு தகவல்… 107 நாடுகள்… 7,000 தமிழர்கள்… போலீஸ் பப்ளிக் ஸ்கூலின் சேவை!

காவல்துறையினர் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொள்வார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் முதல்வர் பதவியில் இருந்தபோதெல்லாம் காவல்துறையினருக்கு ஏராளமான சலுகைகளை வழங்குவார். அதன்படி, 2012-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூர் என்ற இடத்தில் காவலர்களுக்கான ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்துக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் காவல்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுபோல் காவல்துறையைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக, ‘போலீஸ் பப்ளிக் ஸ்கூல்’ தொடங்கப்படும் எனக் கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் போலீஸ் பப்ளிக் ஸ்கூல் தொடங்க தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பள்ளியில் காவல்துறை, வனத்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் குழந்தைகளுக்கு 50 சதவிகிதமும், இதர பொதுமக்களின் குழந்தைகளுக்கு 50 சதவிகிதமும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை, படிப்படியாக மாணவர்கள் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, தாம்பரத்தை அடுத்துள்ள மேலக்கோட்டையூரில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 51.72 கோடி மதிப்பீட்டில் அந்த இடத்தில் வகுப்பறைகள் மற்றும் விடுதிகளுக்கான கட்டடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள காவலர் உயர் பயிற்சி மையத்தில் ஐந்தாம் வகுப்புவரை, போலீஸ் பப்ளிக் ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது. கல்வித்துறை இணைச் செயலாளர் தலைமையில், 6 காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இந்தப் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலக்கோட்டையூரில் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டபிறகு, இங்கிருக்கும் மாணவர்கள் அங்கு மாற்றம் செய்யப்பட உள்ளார்கள். மாநில அரசு பாடத் திட்டத்தின்படியே இங்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். சி.பி.எஸ்.இ பாடப்பிரிவைத் தொடங்கவும் காவல்துறை சார்பில் தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய வண்டலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வளவனைத் தொடர்புகொண்டு பேசினோம். கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் இதுவரை 50 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த வருடம் 8-ம் வகுப்புவரை இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்தப் பள்ளி படிப்படியாக 12-ம் வகுப்புவரை செயல்படத் தொடங்கும். ஆடிட்டோரியம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன வசதிகளுடன் இந்தப் பள்ளி தரம் உயர்த்தப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக 60 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஏழ்மையானவர்கள் அதிக அளவில் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க விரும்புகிறார்கள். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் 50 சதவிகிதக் கட்டணத்தை அரசே ஏற்கிறது. இதனால் இந்தப் பள்ளி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.

``நீங்கள் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ்கூட மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதே” என்றதும், சிரிப்போடு பேசத் தொடங்கிய காவல்துறை அதிகாரி வளவன், ``அந்த வாட்ஸ்அப் குரூப்பில் காவல்துறையைச் சேர்ந்த நான்கு முக்கிய நபர்கள் இருக்கிறோம். நல்ல ஐடியாக்களை உருவாக்கி அதை ஒரு குறுந்தகவலாக வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பி வைப்போம். தூய தமிழில்தான் செய்திகளை உருவாக்குவோம். எங்கள் குழுவில் உள்ளவர்கள், தங்களின் பள்ளி-கல்லூரி நண்பர்களுக்கு இதைத் தினமும் அனுப்பி வைக்கிறார்கள். நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் என நாடு கடந்து எங்கள் செய்தி எங்கோ ஒரு இடத்தில் வசிக்கும் தமிழர்களைச் சென்றடைகிறது. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களும் அவர்களின் நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார்கள். இப்படியாக, சுமார் 107 நாடுகளில் உள்ள 7,000 பேருக்கு நாங்கள் அனுப்பும் தகவல்கள் அன்றாடம் சென்றடைகிறது” என்றார் மகிழ்ச்சியாக.

நல்ல குறுஞ்செய்தி, ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்!