இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை!

சர்வதேச அளவில், மிகப்பெரிய திறந்தநிலைப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டுவருகிறது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU). இந்தப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க, ஜூலை 31-ம் தேதி வரை  காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை

மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், அஞ்சல் வழியில் படிக்கும் வகையில் ஏராளமான இளநிலை, முதுநிலை மற்றும் ஏராளமான டிப்ளோமா படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு, ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மண்டல இயக்குநர் முனைவர் கிஷோர், "பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு படிப்புகளை வழங்கிவரும் கல்வி நிறுவனங்களில் முதன்மையானது, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம். மத்திய மனிதவளத் துறையின்கீழ் செயல்பட்டுவருகிறது. பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், பொருளாதார சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியாத இளைஞர்கள், வேலை வாய்ப்பில் இருப்பவர்கள், குடும்பத்தலைவிகள், தொழில்துறையில் உள்ளவர்கள், முனைப்போடு வேலை தேடுபவர்கள், கல்லூரியில் படிக்கும்போது கூடுதலாகத் தன்னுடைய துறை சார் அறிவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள் என அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்க வேண்டும் என்பதை முதன்மையான நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவருகிறோம். 

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம்

சென்னை மண்டல அலுவலகத்தின்கீழ் 28 படிப்பு உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆன்லைனில் https://onlineadmission.ignou.ac.in/admission/ முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. சேர ஆர்வம் உள்ள மாணவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் மண்டல அலுவலகத்திலோ அல்லது ஆன்லைனிலோ விண்ணப்பிக்க வேண்டும்" என்றவர், ``இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தேர்வெழுதும் வாய்ப்பை வழங்கிவருகிறோம்.  கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியான திறனாய்வுகளையும், இறுதித் தேர்வு முறையையும் கடைப்பிடித்துவருகிறோம்" என்றார்.  

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பி.ஏ, பி.காம், சோசியல் சர்வீஸ், பிசிஏ, டூரிசம், நூலகப்படிப்பு மற்றும் ஒரு வருட டிப்ளோமா படிப்பில் சேர்பவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பில் பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வளர்ந்துவரும் துறையான உணவு பாதுகாப்பு மேலாண்மை, டூரிசம் மேனேஜ்மென்ட், கணிதப்பாடத்துடன்கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ், சமூகப் பணி ஆலோசனை, உளவியல் ஆலோசனை போன்ற படிப்புகள் உள்ளன. படிப்புகள்குறித்து மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை.

சென்னை மண்டல அலுவலகம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பெரியார் திடலில் செயல்பட்டுவருகிறது. அலுவலக நேரத்தில் நேரில் சென்று படிப்புக்கான விவரங்களைப் பெறலாம். தொலைபேசிமூலம் தகவல் பெறுபவர்கள் 044-26618438/ 26618039 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!