வெளியிடப்பட்ட நேரம்: 10:38 (18/07/2018)

கடைசி தொடர்பு:10:38 (18/07/2018)

கேமெ கவுடா... - 14 குளங்கள் வெட்டிய 82 வயது முதியவர்!

40 ஆண்டுகால அசராத உழைப்பின் பயனாக இன்று  குந்தினிபெட்டா மலைப்பகுதியைச் சுற்றி 14 குளங்களை வெட்டியுள்ளார் கேமெ கவுடா.

கேமெ கவுடா... - 14 குளங்கள் வெட்டிய 82 வயது முதியவர்!

ஆடு மேய்க்கும் ஒருவர், குளங்கள் வெட்டி இயற்கையை நேசிக்கிறார்.

`வழி தவறிய இரண்டு மீன்கள்

சந்தித்துக்கொண்டன மணல்வெளியில்.

இரண்டிடமும் 

கடல் பற்றிய கதைகள் இருந்தன

கடல் இல்லை.'

- இலக்குவன். 

கோடைக்காலங்களில் வீட்டின் மொட்டைமாடியில் சிறிய பாத்திரத்தில் நீர் வைப்பதை நாம் பார்த்திருப்போம். கோடை வெயிலைச் சமாளிக்க, பறவைகள் நீர் அருந்துவதற்காக இதுபோல பல வீடுகளிலும் அமைத்திருப்பர். மனிதர்கள் மட்டுமன்றி பறவைகளும்  விலங்குகளும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதைத் தடுப்பதற்காக தனி மனிதனாகப் போராடி வெற்றியும் கண்டுள்ளார்  82 வயது  கேமெ கவுடா. 

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள தாசனடுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கேமெ கவுடா. அந்தப் பகுதியில் மலாவலி தாலுகாவில் உள்ள குந்தினிபெட்டா மலைப்பகுதயில் 14 குளங்களை அமைத்துள்ளார் கேமெ கவுடா. இதற்காக தனது வாழ்வில் 40 ஆண்டுகளைச் செலவுசெய்துள்ளார். தனது 42-வது வயதில் ஆடு மேய்பவரான கேமெ கவுடா, தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக குந்தினிபெட்டா மலைப்பகுதிக்கு ஓட்டிவந்துள்ளார். கரடுமுரடாக வறண்டு கிடந்த அந்த மலைத்தொடரில் ஆடுகள் நீரைத் தேடி அங்குமிங்கும் அலைந்துள்ளன. அந்த மலைப்பிரதேசத்தில் நீரின் சுவடே இல்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் கேமெ கவுடா. அங்கு இருக்கும் பறவைகளும் விலங்குகளும் எங்கு சென்று நீர் அருந்தும் என யோசித்துள்ளார். அதற்கான தீர்வையும் எட்டியுள்ளார்.  தனது ஆடுகளில் இரண்டை விற்று குளம் வெட்டத் தேவையான கடப்பாரை, மண்வெட்டி என அனைத்துக் கருவிகளையும் வாங்கியுள்ளார். 

குளங்கள்

Photo Courtesy : Deccan Herald

ஆறு மாதங்கள் தனியாளாக முயன்று  தாசனடுடி-யில் முதல் குளத்தை வெட்டியுள்ளார். அதன்பிறகு தன்னார்வமிக்க சில உழைப்பாளர்களைச் சேர்த்துக்கொண்டு தனது பணியைத் தொடர்ந்துள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை குளம் வெட்டுவதற்காகவே செலவுசெய்துள்ளார். குளம் வெட்டுவதோடு நில்லாமல், வறண்டு கிடந்த அந்த மலைப்பகுதியைப் பசுமையாகவும் மாற்றியுள்ளார். தான் சம்பாதிக்கும் சொற்பப் பணத்தையும் குளம் வெட்டுவதில் செலவுசெய்த கேமெ கவுடாவை, அவரின் உறவினர்கள் திட்டித்தீர்த்துள்ளனர்.

இதைப் பற்றி அவர் கூறுகையில், ``நான் அதிகாலை 5 மணியிலிருந்து 9 மணி வரையிலும் குளத்தை வெட்டுவேன். நிலத்தைச் சீர்ப்படுத்துவேன். அதன் பிறகு இரவு 7 மணிவரை ஆடு மேய்க்கச் சென்றுவிடுவேன். இப்படியாக 40 ஆண்டுகள் கழிந்துவிட்டன. நான் இதற்காக நேரம் செலவழிப்பதைப் பார்த்த என்  உறவினர்கள், என்னை `பைத்தியக்காரன்' என அழைத்தனர். `அரசு நிலத்தில் இப்படியெல்லாம் செய்யக் கூடாது' என்றனர். ஆனால், நான் குளம் வெட்டுவதிலேயே என் கவனத்தைச் செலுத்தினேன். எனது எண்ணமெல்லாம் பறவைகளும் விலங்குகளும் நீரின்றி தவிக்கக் கூடாது என்பதுதான். பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் மதுப்பழக்கத்துக்காகச் செலவுசெய்வர். அவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதைப்போல நான் குளம் வெட்டுவதில் அடிமையாக உள்ளேன். இப்போது எனக்கு உறவினர்கள் எல்லாம் அந்தப் பறவைகளும் விலங்குகளும்தாம்" என்கிறார் வெள்ளந்தியாக.

இதுவரையிலும் 10 முதல் 15 லட்சம் வரை மலையைப் பசுமையாக்கவும் குளம் வெட்டவும் செலவுசெய்துள்ளார். 2017-ம் ஆண்டுக்கான பஷவாஶ்ரீ (Basavashree) விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. அதற்குக் கிடைத்த பரிசுத்தொகையையும் தனது லட்சியத்துக்கே செலவுசெய்துள்ளார். அதற்கு முன்பாகவும் அவருக்குக் கிடைத்த பல  உதவித்தொகைகளையும் பணப்பரிசுகளையும் இவர் குளம் வெட்டுவதற்காகவே செலவழித்துள்ளார். 

40 ஆண்டுகால அசராத உழைப்பின் பயனாக, இன்று குந்தினிபெட்டா மலைப்பகுதியைச் சுற்றி 14 குளங்களை வெட்டியுள்ளார். அந்த மலைப்பகுதியைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள் அனைத்தும் அந்தக் குளத்தில் இன்று நீர் அருந்துகின்றன. அதைப் பார்த்து புன்னகையுடன் கடந்து செல்கிறார் கேமெ கவுடா. 

குளங்கள்

உலகமெங்கும் நீர் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துக்கொண்டிருக்கும் காலம் இது.  நீர் ஆதாரங்கள் எல்லாம் அழிந்துவிட்ட, அழிந்துகொண்டிருக்கிற இக்கட்டான காலகட்டத்தில் நாம் வசித்துவருகிறோம். ஒருபுறம் பெருமழை பெய்து சேதம் விளைவித்துக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் தண்ணீருக்காக நாம் செலவுசெய்யும் பணமோ அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முறையான நீர் மேலாண்மை இல்லாததே இதற்குக் காரணம் என அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர். அதை கேமெ கவுடாக்கள் நம் எல்லோருக்காகவும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்


டிரெண்டிங் @ விகடன்