வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (18/07/2018)

கடைசி தொடர்பு:11:02 (18/07/2018)

உங்கள் குழந்தையின் அறையில் இவையெல்லாம் இருக்கின்றனவா? பெற்றோர் கவனத்துக்கு

சின்ன நூலகம், போதுமான வெளிச்சம், மருந்துப் பொருள்களுக்கு எனத் தனி இடம் வடிவமைப்பது அவசியம். தரையைப் பொறுத்தவரை, எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருப்பது முக்கியம்

உங்கள் குழந்தையின் அறையில் இவையெல்லாம் இருக்கின்றனவா? பெற்றோர் கவனத்துக்கு

சொந்த வீடு கனவு சிலருக்கு நிறைவேறியிருக்கலாம். பலருக்கு அது அன்றும் இன்றும் என்றும் கனவுதான். வீடு வாங்கியவர்களுக்கோ வீடு மீதான அடுத்தகட்ட ஆசைகள் தோன்ற ஆரம்பிக்கும். சுவரில் என்ன செய்யலாம், நமக்குப் பிடித்த கிச்சனை எப்படி அலங்கரிக்கலாம், உயிருக்கு உயிரான குழந்தையின் அறையை அவள் விரும்பியபடி அலங்கரிக்கலாமா.... இப்ப எண்ணற்ற ஆசைகள் தோன்றும். அதையெல்லாம் நிறைவேற்றும் வேலையைச் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டிரீயர் டிசைனர், ஶ்ரீராம். 

ஶ்ரீ ராம்

 குழந்தைகளுக்குத் தனி அறை ஒதுக்கும் பெற்றோர், அந்த அறை அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் அமைக்க வேண்டும். அதன்மூலம், வீட்டுச் செல்லங்களை எப்போதும் குதூகலமாக்க வைத்திருக்க முடியும்.

அறை அமைப்பு:

குழந்தைகளுக்கான அறை, பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருப்பது நல்லது. காலையில் எழும்போதே சூரிய உதயத்தைப் பார்த்துக்கொண்டே எழலாம். இதனால், அவர்களுக்குப் புத்துணர்வு கிடைக்கும். சூரிய ஒளியில் உள்ள வைட்டமின்  D-3 சத்துகளும் கிடைக்கும். மேலும், குழந்தைகளின் அறை காற்றோட்டம் நிறைந்ததாக இருக்க வேண்டும். எனவே, அறையில் குறைந்தது இரண்டு ஜன்னல்களாவது இருப்பது முக்கியம். பெற்றோரின் அறைக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டும். அல்லது, பெற்றோரின் அறையிலிருந்தே குழந்தைகளின் அறைக்குச் செல்வது போன்று வடிவமைப்பது சிறப்பு. இது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு, ஏதேனும் தவறுகள் நிகழ்வதையும் தடுக்க முடியும்.

பெற்றோர்

வண்ணங்கள்:

குழந்தைகளின் அறையைப் பொறுத்தவரை, பளிச் நிறங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் வடிவங்களை, சுவரோவியமாக வரைந்து வைக்கலாம். உங்களின் இரண்டு குழந்தைகளும் ஒரே அறையில் தங்குவதாக இருந்தால், ஒரு பக்கத்துச் சுவரை ஒரு குழந்தையின் ரசனைக்கு ஏற்பவும், மற்றொரு பக்கத்தை இன்னொரு குழந்தைக்குத் தகுந்த நிறம் மற்றும் ரசனையிலும் வடிவமைக்கலாம். இரு குழந்தைகள் ஒரே அறையில் தங்கும்பட்சத்தில், அவர்களுக்கான பொழுதுபோக்கு சாதனங்கள் மற்றோர்  அறையில் இருக்க வேண்டும். இல்லையெனில், ஒரு குழந்தையின் விளையாட்டு இன்னொரு குழந்தையின் படிப்பு சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும்.

ஃபர்னிச்சர்கள்:

பெற்றோர்

குழந்தைகளின் அறையில் பாடப்புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள், ஆடைகள் போன்றவற்றை வைப்பதற்கு தனித்தனி கப்போர்டுகள் இருப்பது போன்று வடிவமைப்பது நல்லது. இது, அவர்களுக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். நேர மேலாண்மையையும் கற்றுத்தரும். மேலும், அறைக்கான ஃபர்னிச்சர்கள் வாங்கும்போது, அவற்றின் முனைகள் அதிக கூர்மை இல்லாததாக இருக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகளுக்கு அடிபடலாம். குழந்தைகளுக்கான அலமாரிகள், அவர்கள் கையாளும் வகையில் 1 அடி முதல் 4 அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் நாற்காலிகளும் அவர்களின் உயரத்துக்கு ஏற்ப இருப்பது அவசியம். அவையும் அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கேரக்டர்களாகவோ, பொம்மைகளின் வடிவத்திலோ இருந்தால் சிறப்பு. உங்கள் குழந்தைக்கு எதில் அதிக ஆர்வமோ, அதன் அடிப்படையில் டேபிள், சேர் போன்றவற்றை வடிவமைக்கலாம். சில வீடுகளில் குழந்தைகளுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள் வாங்கித் தருகின்றனர். இது, ஆபத்தானது. குழந்தைகள் தவறி விழ வாய்ப்புள்ளது. குழந்தைகளின் அறை ஸ்க்ரீன்களையும் அடர் வண்ணங்களில் தேர்வுசெய்யவும்.

குழந்தைகள்

அடிப்படை வசதிகள்:

குழந்தைகளுக்கான அறையின் உட்புறத்திலேயே கழிப்பறை, குளியல் அறை இருப்பது நல்லது. வாஷ்பேசின் வழக்கத்தைவிடக் குறைவான உயரத்தில் இருக்க வேண்டும். குழந்தைகளின் அறையில் சின்ன நூலகம், போதுமான வெளிச்சம், மருந்துப் பொருள்களுக்கு எனத் தனி இடம் வடிவமைப்பது அவசியம். தரையைப் பொறுத்தவரை, எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருப்பது முக்கியம். அதிகம் வழுக்கும் தன்மையுள்ள டைஸ்களைத் தவிர்க்கவும். கடிகாரம், டார்ச்லைட், புத்தகங்கள், முதலுதவிப் பெட்டி.போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு இனி அவர்களின் அறை, உலகில் மிகவும் பிடித்த இடமாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்