மீயூரல் ஆர்ட் தரும் ஐம்பதாயிரம் வருமானம்... ஜெயராணியின் சக்சஸ் பிசினஸ்! | aruppukottai woman shares her successful business story of making mural paintings!

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (18/07/2018)

கடைசி தொடர்பு:14:37 (18/07/2018)

மீயூரல் ஆர்ட் தரும் ஐம்பதாயிரம் வருமானம்... ஜெயராணியின் சக்சஸ் பிசினஸ்!

வீட்டிலிருந்தே மாதம் 50,000 ரூபாய் வருமானம் அள்ளும் பிசினஸ் வுமன். தன்னுடைய மியூரல் ஆர்ட் பிசினஸ் பற்றி ஆர்வத்துடன் பகிர்கிறார்.

மீயூரல் ஆர்ட் தரும்  ஐம்பதாயிரம் வருமானம்... ஜெயராணியின் சக்சஸ் பிசினஸ்!

``திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போனால், குழந்தைகளைச் சரியாப் பார்த்துக்க முடியாது என்ற காரணத்தினாலே நிறைய பெண்கள் திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போறது குறையுது. அதனால், பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பம் சில சிக்கல்களைச் சந்திக்குது. அந்த மாதிரி சூழ்நிலை எனக்கும் ஏற்பட்டப்போ, நான் எடுத்த சிறிய முயற்சி, இப்போ எனக்கான அடையாளமாக மாறியிருக்கு'' என வெற்றிப் புன்னகையுடன் பேசுகிறார், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராணி. `கஜாஸ் கிரியேஷன்' என்ற ஆன்லைன் நிறுவனத்தின் உரிமையாளர். வீட்டிலிருந்தே மாதம் 50,000 ரூபாய் வருமானம் அள்ளும் பிசினஸ் வுமன். தன்னுடைய மியூரல் ஆர்ட் பிசினஸ் பற்றி ஆர்வத்துடன் பகிர்கிறார்.

ஜெயராணி

``சின்ன வயசிலிருந்தே கை வேலைப்பாடுகள் பண்றது ரொம்பப் பிடிக்கும். வீட்டில் இருக்கும் பயன்படாத பொருள்களை கலை நுட்பத்துடன்கூடிய புதிய பொருளாக மாற்றி வீட்டை அலங்கரிப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம் பொழுதுபோகாமல் பெயின்ட்டிங், டெரகோட்டா ஜூவல்லரி, சில்க் த்ரெட் ஜுவல்லரி என டிரெண்டுக்குத் தகுந்த நகைகள் செஞ்சு, ஆன்லைனில் அப்லோடு பண்ணுவேன். `உங்க கலெக்‌ஷன் யூனிக்கா இருக்கு'னு நிறைய பேர் பாராட்டுவாங்க. விலைக்கும் கேட்பாங்க. சரி, இதையே பிசினஸாகப் பண்ணலாம்னு, ஆன்லைனில் முகநூல் பக்கத்தின் மூலம் விற்க ஆரம்பிச்சேன். ஆர்டர்கள் நிறைய வரவே, இன்னும் புதுசு புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். மியூரல் பெயின்ட்டிங் டிரெண்டு தெரிஞ்சு பயிற்சி வகுப்புக்குப் போய் மியூரல் ஆர்ட் கத்துக்கிட்டேன். எங்கள் வீட்டையே மியூரல் ஆர்ட்டால் அலங்கரிச்சேன். முதல் பாராட்டு என் கணவர் கதிரேசனிடமிருந்து கிடைச்சது. அந்த ஊக்கத்தில் `கஜாஸ் கிரியேஷன்' என்ற ஆன்லைன் பக்கத்தை உருவாக்கி, மியூரல் பெயின்ட்டிங்கை விற்க ஆரம்பிச்சேன். எதிர்பார்த்ததுக்கும் மேலேயே ஆர்டர்கள் வந்துச்சு'' என வெற்றியின் பக்கத்தைத் தொடர்கிறார்.

மியூரல்

``பலரும் அவங்க வீடு முழுக்க இன்டீரியர் டிசைனிங் செய்ய கேட்டாங்க. அந்த ஏரியா எனக்குப் புதுசா இருந்தால் ஆன்லைன் மூலமாக நிறையக் கத்துக்கிட்டேன். குழந்தைகள் அறை, சமையல் அறை, பூஜை அறை என ஒவ்வொன்றுக்கும் என்ன மாதிரியான டிசைன் இருந்தா நல்லா இருக்கும்னு நிறைய புது மாடல்களை உருவாக்கினேன். வீட்டின் சுவரில் சிற்ப வேலைப்பாடுகள் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். சிலர், வீடு முழுவதும் ஒரே தீம்மில் இன்டீரியர் பண்றதுக்கும் கேட்பாங்க. வண்ணம், வடிவம்னு வித்தியாசம் காண்பிச்சு ஆச்சர்யப்படுத்துவேன். வீடுகளின் உட்புறம் வைக்கக்கூடிய ஃபவுண்டயின்களும் செஞ்சு கொடுக்கிறேன். ஒரு வேலையைச் செய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கிறோம், எவ்வளவு பணம் வாங்குகிறோம் என்பதைவிட, அதை எவ்வளவு திருப்தியாகச் செய்துமுடிச்சோம் என்றுதான் பார்ப்பேன். அதுதான் என்னுடைய வளர்ச்சிக்கும் காரணம்.

ஜெயராணி

இப்போ, நிறைய நிறுவனங்களிடமிருந்து இன்டீரியர் டெக்கரேட் செய்ய வாய்ப்புகள் வருது. மியூரல் ஆர்ட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். என்கிட்ட கத்துக்கிட்டவங்களுக்கு நானே ஆர்டர்களும் தர்றேன். அதிக அளவு முதலீடு இல்லாமலே மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வருது. என்னைப் பார்த்து, என் குழந்தைகளும் கை வேலைப்பாடுகள் செய்யக் கத்துக்கறாங்க. அவங்களுக்கான பயனுள்ள பொழுதுபோக்கு கிராஃப்ட்தான். எந்த ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாமல், வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டலாம். அதைவிட சந்தோஷம் என்ன இருக்கு'' என்பவரின் குரலில் அத்தனை புத்துணர்வு.

ஆர்வத்தின் மீதான திறமையை வளர்த்துக்கொண்டால், வீட்டிலிருந்தே லாபம் அள்ளலாம்!


டிரெண்டிங் @ விகடன்