வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (20/07/2018)

கடைசி தொடர்பு:12:11 (20/07/2018)

இளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்!

ஒருவர் 3 கிலோ டபுள் எஞ்சின் (மண்ணுளி) இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் தகவலை வனத்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.

இளைய தளபதி விஜய் ரீ-என்ட்ரி... 3 கிலோ மண்ணுளியார் 50 லட்சமாம்!

சதுரங்க வேட்டைத் திரைப்படத்தில் அஜித் விஜய்யாக நடித்திருப்பார்களே... அவர்களின் ஆல் டைம்  கோர்ட் வேர்ட் ``டபுள் எஞ்சின்”. இருதலைப் பாம்பு, மண்ணுளிப்பாம்பு இன்னும் சில பெயர்களும் இருக்கின்றன. தேடித் தேடி வேட்டையாடுகிற உயிரினங்களின் பட்டியலில் இப்போதும் டிமாண்டில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். கடந்த மாதம் கூட 3 மண்ணுளிப்பாம்புகளுடன் பத்துப் பேர் கைதாகி இருக்கிறார்கள். எவ்வளவு விழிப்புஉணர்வுகள் வந்தாலும் மண்ணுளிப் பாம்புகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதானிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்றாலும் அதைத்  தாண்டிய சில காரணங்களும் இருக்கின்றன. 

மண்ணுளிப்பாம்பு

மண்ணுளிப் பாம்புகளை எதற்குக் கடத்துகிறார்கள் என்கிற உண்மை தெரியாமலே பலரும் காடு காடாய் மண்ணுளிப் பாம்பைத் தேடி இப்போதும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் பிடித்து வைத்திருக்கும் பாம்பை யாரிடம் கொடுத்து காசு பார்ப்பது எனத் தெரியாமல் இன்னமும் ஏஜெண்டுகள் எண்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாதம் 27-ம் தேதி போபால், Bagmugaliya என்கிற இடத்தில் செயல்படும் ஆஷிமா மாலில் கடத்தல் பொருள் கைமாற இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைக்கிறது. எந்தப் பொருளை கடத்துகிறார்கள் என்பது தெரியாது என்பதால் சந்தேகப்படும்படியாக ஏதேனும் நடக்கிறதா என்று காவல்துறை கவனித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு 20 நிமிடங்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில் ``டபுள் எஞ்சின்” கடத்துவது தெரியவந்தது. சற்று நேரத்தில் கையில் பெரிய பையுடன் அங்கு வந்த இருவரை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பையில் 3 மண்ணுளிப்பாம்புகள் இருந்தது தெரிய வந்தது. பாம்புகளைப் பறிமுதல் செய்து 10 பேரைக் காவல்துறை கைது செய்தது. ஆனால் யாருக்கு, எங்கே கடத்தினார்கள் என்கிற எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. ஏனெனில் இணையத்தில் மண்ணுளிப்பாம்புகள் வேண்டும் என்றிருக்கிற விளம்பரங்களைப் பார்த்து மண்ணுளிப் பாம்பைப் பிடித்திருக்கிறார்கள். விளம்பரத்தில் இருந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசி பாம்பு பிடிப்பது குறித்த தகவல்களை  வாங்கியிருக்கிறார்கள். 3 கிலோ எடை கொண்ட ஒரு மண்ணுளிப்பாம்பின் விலை 5 லட்சம் எனச் சொல்லி பாம்பைப் பிடித்து வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கடத்தி வரச் சொன்னவர்கள் கொடுத்த எண் மற்றும் முகவரிகள் தவறானவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

பாம்பை வைத்து என்ன செய்வார்கள், எதற்குக் கடத்துகிறோம் என்கிற எந்த அடிப்படைக் காரணமும் தெரியாமலே கடத்திவந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது பத்துப் பேரும் `உள்ளே' இருக்கிறார்கள். மே மாதம் 15 தேதி வாதோராவில் 60 லட்சத்துக்கு 3.5 கிலோ எடை கொண்ட மண்ணுளிப்பாம்பை விற்பனை செய்ய இருந்தவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில் `மண்ணுளிப் பாம்பைப் பிடித்துக்கொடுத்தால் 60 லட்ச ரூபாய் தருவதாக ஏஜெண்டுகள் சொன்னதால் கடத்திவந்தேன்' எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது வரை எந்த ஏஜெண்டும் சிக்கவில்லை. பாம்பை விலைக்கு வாங்குபவர்கள் நிழல் உலகத்தில் இருப்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டுக் கடத்துகிற மக்கள் சட்டத்திடம் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தியாவில் 5 லட்சத்திலிருந்து 60 லட்சம் வரை விலை போகிற மண்ணுளிப்பாம்புகள் மலேசியா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சர்வதேச சந்தையில் 1.50 கோடி ரூபாய் வரை விலை போகிறது. மண்ணுளிப்பாம்பினால் மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லையென்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் பாம்புகளை எதற்குக் கடத்துகிறார்கள்? ஒரே காரணம் ஆண்மைக் குறைவு. 

டபுள் எஞ்சின்

ஹைதராபாத் வனத்துறை மண்ணுளிப்பாம்புகளைக் கடத்துபவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதமும் 3 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஆனாலும் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 4 பேர் மண்ணுளிப்பாம்புகளைக் கடத்தி கைதாகியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தன்னிடம் 3 கிலோ டபுள் எஞ்சின் இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தைப் பார்த்த வன விலங்குகள் ஆர்வலர் ஒருவர் தெலங்கானா வனத்துறையிடம் தெரிவித்திருக்கிறார். வனத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர் போல நடித்துச் சம்பந்தப்பட்டவரை கைதுசெய்திருக்கிறார்கள். எந்த இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டது என்பதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தகவல் தொழிநுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலகட்டத்தில் விலங்குகள் கடத்தல் எளிதான விஷயமாகிவிட்டது. இதில் யார் தலைவனாக இருந்து செயல்படுகிறார், எங்கிருந்து எங்குக் கடத்துகிறார்கள் என்கிற எந்தத் தகவல்களையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதைக் கடத்தல்காரர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

தொழில் அதிபர்கள், பிரபலங்கள், ஜோதிடர்கள் போன்றவர்கள்  மண்ணுளிப் பாம்பு தங்களின் வீடுகளில் இருந்தால் அதிர்ஷ்டம் தங்களை தேடி வருவதாகவும் நம்புகிறார்கள். அதனால் எவ்வளவு விலை கொடுத்தேனும் மண்ணுளிப்பாம்பை வாங்கி வீடுகளில் வளர்க்கிறார்கள். மண்ணுளிப்பாம்புகள் இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972, கீழ் பாதுகாக்கப்படுகிறது. அழிந்து வரும் உயிரினங்களின் நான்காவது பட்டியலில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 300 க்கும் மேலான பாம்புகள் கடத்தப்படுகின்றன என விலங்குகள் நல  வாரியம் தெரிவித்துள்ளது. 

பிடிபடுகிற கடத்தல் விஷயங்கள் மட்டுமே உலகுக்குத் தெரிய வருகிறது. பிடிபடாமல் கடத்துபவர்கள் கடத்திக் கொண்டேதானிருக்கிறார்கள். விஜய் அஜித்தை விட்டுடுங்கப்பா ப்ளீஸ்...


 


டிரெண்டிங் @ விகடன்