``உணவு, உறைவிடம், அடையாள அட்டை!” - நாயாப் பொறந்தாலும் கியூபால பொறக்கணும் | Do you need ID proof for pets! Go to Cuba

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (20/07/2018)

கடைசி தொடர்பு:12:15 (20/07/2018)

``உணவு, உறைவிடம், அடையாள அட்டை!” - நாயாப் பொறந்தாலும் கியூபால பொறக்கணும்

உலகளவில் 60 கோடி நாய்கள் பராமரிப்பின்றித் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. அவை உணவுக்கும் உறைவிடத்துக்கும் உதவியின்றியும் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகியும்

``உணவு, உறைவிடம், அடையாள அட்டை!” - நாயாப் பொறந்தாலும் கியூபால பொறக்கணும்

உலோகப் பொருள்களுக்கான ஹவான்னா அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்ச்சி. அங்கு கூடியிருந்தவர்களுக்கு வழக்கமான, சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால், அந்த அருங்காட்சியகத்தின் காவலாளி மற்றும் விளாடிமிர் இருவருக்குமே அந்த நாள் சிறப்பானதுதான். ஏனென்றால் அன்றுதான் விளாமிடிர் செய்த தீரச் செயலைப் பாராட்டுவதோடு அவளுக்கு அடையாள அட்டையும் வழங்கப் போகிறார்கள். அருங்காட்சியகத்தின் ஆ.சி.யைத் திருட முயன்றவனைப் பிடித்ததற்காக அன்று விளாடிமிரைப் பாராட்டினார்கள்.

பிராணிகள்

Photo Courtesy: Nick Swyter

விளாமிடிரின் நண்பர்களான மற்ற ஐவரும் அவளைப் போலவே அந்த அருங்காட்சியகத்தால் தத்தெடுக்கப்பட்டவர்கள்தாம். அவளைப் போன்ற நாய்கள் மற்ற நாடுகளில் வாழும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயமாக விளாடிமிர் அருமையான வாழ்வையே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவளை அடையாளம் காட்டும் அரசாங்க அடையாள அட்டை, அத்தோடு அருங்காட்சியக அடையாள அட்டை, அரசாங்க அடையாள அட்டையில் அவளது உடல்நிலை குறித்த தகவல்கள், தங்குவதற்கான இடம், உணவுக்குத் தட்டுபாடில்லாத வாழ்க்கை. இப்படியொரு நிம்மதியான வாழ்க்கையை உலகின் எந்தவொரு நாட்டில் வாழும் எந்தவொரு தெரு நாயும் அனுபவித்திருக்காது. ஆனால், கியூபாவின் தெருக்களில் சுற்றித்திரியும் ஒவ்வொரு நாயும் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

உலகளவில் 60கோடி நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. அவற்றைத் துன்புறுத்துவதில் இன்பம் காணும் கொடூர நெஞ்சம் படைத்தவர்களால் அந்த வாயில்லா ஜீவன்களும் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கின்றன. அறியாமல் அவை செய்யும் தொந்தரவுகளுக்கும் மிகக் கடுமையாகத் தாக்கும் நமக்கு அவற்றின் நன்றியுணர்வைப் புரிந்துகொள்ள நேரமிருப்பதில்லை. அந்த 60கோடி தெருநாய்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நாய்களைக் கொலைக் களங்களுக்கும் (Kill Shelters) தொற்றுகளுக்கு ஆளான நாய்களைக் கருணைக் கொலைகளுக்கும் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர். கருணைக் கொலைக்கு ஆளாவதைவிட, கொலைக்களத்தில் கொடூரமாக உயிரை விடுவதை கொடுமையான வேதனையென்று அவை நினைப்பது எதைத் தெரியுமா?

கியூபா

மரபணு ரீதியாகவே மனிதனோடு ஒன்றி வாழவும், உதவுபவர்களுக்கு நன்றியோடும், சுற்றத்தில் நட்போடும் வாழப் பழகியவை நாய்கள். அத்தகைய ஜீவன்கள் மேற்கூறிய இரண்டு இறப்புகளை விடவும் கொடுமையானதாக அவை கருதும் ஒரு வேதனை அவற்றுக்கு உண்டு. அதுதான் அன்பு செலுத்த, ஆதரிக்க யாருமில்லாமல் அநாதையாக வாழ்ந்து இறுதிக்காலங்களில் அக்கறைக்கு ஆளில்லாமல் மரணமடைவது. ஆனால், கியூபாவின் கம்யூனிச அரசாங்கம் நாய்களுக்கும் மனிதர்களைப் போலவே சம உரிமை கொடுத்து வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அதேபோல் அந்த மாநிலத்தின் அனைத்து விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் மனிதர்களைப் போலவே சம உரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்புக்கான கியூபா அரசாங்கத்தின் அமைப்பு 1992-ம் ஆண்டு விலங்குகளுக்கான பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயன்றனர். அதற்கு மக்களின் ஆதரவும் அதிகமாகவே இருந்தது. அதன் விளைவாக கியூபத் தெருக்களில் சுற்றித் திரியும் அனைத்து நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் அவை தங்குவதற்கும், உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஏற்றவாறு அவை வாழும் பகுதிக்கு அருகிலேயே இருக்கும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகளால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படுகிறது. தங்கள் ஆசைகளுக்குத் தகுந்தவகையில் சிறப்பாகத் தங்கள் நாய்களைப் பராமரிக்க முடியாவிட்டாலும் ஒவ்வொரு கியூபரும் தங்களால் இயன்றவரையிலும் குறைந்தபட்சம் உணவும் உறைவிடமுமாவது வழங்குகிறார்கள்.

அடையாள அட்டை

ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் தனது ஆட்சியைத் திடப்பட்டுத்திய பிறகு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அங்கு முன்னர் வாழ்ந்த பெரு முதலாளிகள் காஸ்ட்ரோவின் ஆட்சியில் தங்கள் நாட்டுக்கே திரும்பிச் சென்றனர். அதனால், அவர்களின் பணியாளர்களே தங்கள் முன்னாள் எஜமானர்களின் வீடுகளில் வாழ்ந்துகொள்ளலாம். ஆனால், அவ்வளவு பெரிய வீடுகளுக்கான வாடைகையை கியூபாவின் சராசரி வருமானமான 1195 ரூபாயில் செலுத்தமுடியாது. அதனால், அவர்கள் அந்தக் கட்டடங்களின் சிறிய பகுதியில் வாழ்ந்துகொண்டு மீதியை வாடகைக்கு விடத் தொடங்கினர். அரசாங்கம் அதை மருத்துவமனைகளாகப் பயன்படுத்திக் கொண்டன. அத்தகைய ஒரு கட்டடத்தில் ஒரு பகுதியை விலங்குநல மருத்துவமனைக்கு விட்டிருந்த பெண்மணி அவர். தனது வீட்டில் நான்கு தெருநாய்கள் வாழ இடமளித்துள்ளார்.

கியூபாவில் 20 லட்சம் நாய்களும் 50,000 பூனைகளும் இருக்கின்றன. கியூபாவில் ஒரு நாய்க்குத் தேவையான உணவு, உறைவிடம் மற்றும் அன்பினையும் அக்கறையையும் குறைந்தபட்சம் இருவராவது வழங்கிக் கொண்டிருப்பார்கள். கியூபாவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்ற இஸ்ரேலியப் புகைப்படக்காரரான அலெக்ஸ் லெவாக் (Alex Levax) மக்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே அங்கிருந்த அன்னியோன்னியத்தைப் புகைப்படங்களாலும் விவரித்துள்ளார்.

``ஒரு வாரம் முழுவதும் நான் ஹவான்னாவின் வீதிகளில் சுற்றினேன். அந்த நகரத்தின் நிலையை அங்கிருந்த தெரு நாய்களே சொல்லின. கியூபாவில் ஏழ்மை இருந்தாலும் அங்கிருந்த மக்களின் கண்களில் தெரிந்த அன்பும் புன்சிரிப்பும் அவர்களின் வாழ்க்கையைப் புரியவைத்தன. அந்தப் பொதுவுடைமை நாட்டில் வாழும் நான்கு கால் நண்பர்களுக்குக்கூட அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் கொள்கைப்படி அனைவரும் அங்கே சமம்தான். அதிலும் ஒருசிலர் அதைவிடச் சமமானவர்கள். அந்தப் பட்டியலில் இவர்களின் நான்கு நண்பர்களும் அடக்கம்."


டிரெண்டிங் @ விகடன்