வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (20/07/2018)

கடைசி தொடர்பு:16:06 (20/07/2018)

பறவை முட்டையை மிதித்ததற்காக 5 வயதுக் குழந்தையை வீட்டுக்குள் விட மறுத்த பஞ்சாயத்து!

தன் வீட்டு வாசலில் இரவுகளில் அழுதபடியே தனியாகத் தூங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தது, ராஜஸ்தான் அருகில் சிறிய கிராமம் ஒன்றில். அப்படியென்ன தவறு செய்துவிட்டாள் அந்தக் குழந்தை?

ன்றாம் வகுப்பு படிக்கும் 5 வயதுப் பெண் குழந்தை அது. பஞ்சாயத்துத் தீர்ப்பு காரணமாக 10 நாள்களாக இரவும் பகலும் சொந்த வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தன் வீட்டு வாசலில் இரவுகளில் அழுதபடியே தனியாகத் தூங்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தது, ராஜஸ்தான் அருகில் சிறிய கிராமம் ஒன்றில். அப்படியென்ன தவறு செய்துவிட்டாள் அந்தக் குழந்தை? ஒரு முட்டையை உடைத்துவிட்டாள். ஆம்! ஒரு மூடநம்பிக்கை வலிமையாக இருக்கும் அங்கே, ஒரு முட்டைக்காக இப்படி நடந்தது.

பஞ்சாயத்து

PC: http://newsbuzzinfo.com

கழுதைக் கத்துவது நல்ல சகுனம், நரி முகத்தில் விழித்தால் நினைக்கும் காரியம் நடக்கும், வானத்தில் பருந்து தென்பட்டால் கன்னத்தில் போட்டுக்கொள்வது என விலங்குகள் மற்றும் பறவைகள் சார்ந்த மூடநம்பிக்கைகள் நம் மண்ணில் ஏராளம். அப்படியொரு நம்பிக்கை, ராஜஸ்தானின் பண்டி ( Bundi) மாவட்டத்தில் உள்ள ஹரிபுரா கிராமத்திலும் இருக்கிறது.  

டிட்ஹாரி ( Titihari) என்ற நீண்ட கால்கள்கொண்ட பறவை ஒன்று ராஜஸ்தானில் வாழ்கிறது. இந்தப் பறவை, இந்த வருடம் மழை அதிகம் பெய்யும் அல்லது குறைவாகப் பெய்யும் என்பதை முன்கூட்டியே கண்டுபிடித்துவிடுமாம். புயல் மழை வரப்போகிறது என்றால், அடிமரக் கிளைகளில் கூடு கட்டி முட்டை இடுமாம். இந்தப் பறவையின் செய்கையைப் பார்த்தே மழை பற்றி விவசாயிகள் கணிப்பார்களாம். அதனால், ஹரிபுரா கிராமத்தில் இந்தப் பறவையையும் அதன் முட்டையையும் புனிதமாகக் கருதுகிறார்கள். இந்தப் பறவையின் முட்டையைத் தெரியாமல் மிதித்து உடைத்துவிட்டதற்குத்தான், 5 வயதுப் பெண் குழந்தைக்குக் கொடுமையான தண்டனையை ஊர் பஞ்சாயத்துக் கொடுத்திருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று, அந்தச் சிறுமி படிக்கும் பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் பால் வழங்கியிருக்கிறார்கள். தனக்கான ஒரு டம்ளர் பாலை வாங்க நீண்ட வரிசையில் தோழிகளுடன் சிரித்துப் பேசியபடி சென்றபோதுதான், டிட்ஹாரி பறவையின் முட்டையை மிதித்துவிட்டாள். அவ்வளவுதான்... பள்ளியே பரபரப்பாகிவிட்டது. விஷயம் பஞ்சாயத்துக்குப் போயிருக்கிறது. வழக்கை விசாரித்த பெரிய மனிதர்கள், `புனிதமான பறவையின் முட்டையை மிதித்துவிட்டதால், இந்த வருடம் நம் ஊரில் மழை பெய்யாது. அதனால், சிறுமியை 10 நாள்கள் சொந்த வீட்டிலிருந்து தள்ளிவைக்கிறோம். இரவு, பகல் முழு நேரமும் வீட்டுக்கு வெளியேதான் இருக்க வேண்டும். நடந்த சம்பவத்தின் பாவம் நீங்க, பஞ்சாயத்தில் அபராதத் தொகையும், ஒரு பாட்டில் நாட்டுச் சரக்கும் வாங்கித்தர வேண்டும்' என்ற தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதன்பிறகு நடந்தவைதாம், கல் மனதையும் கரைக்கும் கொடுமை.

பஞ்சாயத்து சொன்னதை மீறமுடியாத அந்த ஏழைப் பெற்றோர், தங்கள் குழந்தையை வீட்டுக்கு வெளியில் ஒரு கூரைப் போட்டு அதிலேயே தங்கவைத்திருக்கிறார்கள். தனக்கு நடக்கும் அநீதி தெரியாத அந்தக் குழந்தை, பகலில் அந்தக் கூரையின் நிழலில் விளையாடியிருக்கிறாள். ஆனால், இரவிலும் வீட்டுக்கு வெளியில்தான் தூங்க வேண்டும் எனச் சொல்லி தனியே விட்டு, பெற்றோர் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொண்டனர். குழந்தை பயந்துபோய் இரவு முழுக்க அழுதிருக்கிறாள். பெற்றோரும் வீட்டுக்குள்ளே அழுதபடியே கிடக்க, பொழுது விடிந்திருக்கிறது. இப்படியே சில நாள்கள் கடந்திருக்கின்றன. ஒருகட்டத்தில் மகளை தனியேவிட மனது வராத பெற்றோர், வீட்டு வாசலிலேயே படுத்து உறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்தச் சம்பவம் வெளியில் கசிந்து, ராஜஸ்தானில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்குச் சென்றுவிட்டது. ராஜஸ்தான் காவல்துறை மற்றும் அந்த மாநிலத்தின் குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் இரண்டும் சம்பவம் நடந்த கிராமத்துக்குச் சென்றுள்ளது. இவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் (புதன் கிழமை), அந்தச் சிறுமி தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்திருக்கிறாள். பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்னவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 

சிறுமி விஷயத்தில் தீர்ப்பு சொன்னவர்கள், ``நாங்கள் சிறுமியை வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லவில்லை. சிறுமியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி, சில சடங்குகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டோம். அப்போதுதான் புனிதமான பறவையின் முட்டையை உடைத்த பாவத்திலிருந்து அந்தச் சிறுமி மீண்டு வர முடியும் என்பதற்காகத்தான் அதையும் சொன்னோம். அந்தப் பஞ்சாயத்தைக் கூட்டும்போது, சிறுமியின் தந்தை குடித்துவிட்டுத்தான் வந்திருந்தார்'' என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தங்கள் மூடநம்பிக்கையால், அந்த தெய்வத்துக்கே தீங்கு இழைத்தவர்களை என்னவென்று சொல்ல!

 


டிரெண்டிங் @ விகடன்