வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (20/07/2018)

`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300!’ - கவாஸாகியின் அதிரடி

கவாஸாகியின் விலை குறைவான பெர்ஃபார்மென்ஸ் பைக்கான நின்ஜா 300 இப்போது இந்தியாவின் விலை குறைவான ட்வின் சிலிண்டர் பைக் எனும் பெயரை வாங்கிவிட்டது. இதுவரை CKD முறையில் மட்டுமே விற்பனையில் இருந்த நின்ஜா 300 பைக்கை தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்போகிறார்கள். இந்த இந்திய நின்ஜாவின் விலை 2.98 லட்சம் ரூபாய்.

கவாஸாகி

நின்ஜா 300 பைக் இந்தியாவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தும் இந்தப் பைக்கின் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் குறையவில்லை. போட்டிக்கு பெனல்லி TNT300, யமஹா YZF R3 போன்ற பைக்குகள் வந்த பிறகு, இதன் விற்பனை சரிய ஆரம்பித்துவிட்டது. இதனால், நின்ஜா 300 பைக்கை தள்ளுபடி விலையில் கொடுத்துவந்த கவாஸாகி விலையைக் குறைப்பதற்காகத் தற்போது இந்தியாவிலேயே இந்தப் பைக்கை உற்பத்தி செய்ய முடிவுசெய்துவிட்டது. தற்போது வந்திருக்கும் லோக்கல் நின்ஜாவுக்கும் பழைய CKD நின்ஜாவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ஏபிஎஸ். விலை குறைவது மட்டுமல்லாமல் புதிய நின்ஜா 300, டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன் வருகிறது. 

நின்ஜா 300

39 bhp பவர் மற்றும் 27 Nm டார்க் உருவாக்கக்கூடிய 296சிசி பேரலல் டிவின் இன்ஜின், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வரும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், டியூபுலார் ஸ்டீல் ஃபிரேம், 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் என முன்பு இருந்த அதே அம்சங்கள்தான். இந்தியாவில் உருவாவதால் புதிய நின்ஜாவில் MRF டயரும், என்ட்யூரன்ஸ் பிரேக்கும் வருகின்றன. சீட்டின் உயரம் 5 மில்லிமீட்டரும் எடை 7 கிலோவும் கூடிவிட்டது. இப்போது நின்ஜாவின் எடை 179 கிலோ. இதுவரை ஏபிஎஸ் இல்லை என்ற பெரும் குறை நின்ஜாவில் இருந்து. இப்போது அதுவும் தீர்ந்துவிட்டது. டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டான்டர்டாகவே வருகிறது. எல்லா அப்கிரேடுகளையும் சேர்த்து நின்ஜா 300 பைக்கின் விலையை ரூ.2.98 லட்சத்தில் அடக்கிவிட்டது கவாஸாகி. இதற்கு முன்பு நின்ஜா 300, 3.6 லட்ச ரூபாய்க்கு விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, நின்ஜாதான் தற்போது இந்தியாவில் விலை குறைவான ட்வின் சிலிண்டர் இன்ஜின். யமஹா R3 3.48 லட்ச ரூபாய்க்கும் பெனெல்லி 300 3.29 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது. கவாஸாகியின் நின்ஜா 400 ரூ.4.69 லட்சத்துக்கு கிடைக்கிறது. நின்ஜா 300 புதிதாக வெளிவந்த சிங்கில் சிலிண்டர் பிஎம்டபிள்யூ G310R பைக்கை விட1000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.