வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (21/07/2018)

கடைசி தொடர்பு:12:02 (23/07/2018)

’கபாலி' சிக்கன் தோசை, 'பாகுபலி' குடல் தோசை! - ’அட்றா சக்க’ கோவை கையேந்தி பவன்

தோசையைப் பிரித்தால் கேரட், வெங்காயம், கொத்தமல்லி என மசாலா காம்போவோடு ஒரு சிக்கன் லெக் பீஸ் உள்ளே படுத்துக்கிடந்தது. ``ஓ..! இதான் `கபாலி தோசையா!' என நினைத்துக்கொண்டே ஒரு வெட்டு வெட்டினோம். எந்த தோசையின் விலையும் 50 ரூபாயைத் தாண்டவில்லை.

’கபாலி' சிக்கன் தோசை, 'பாகுபலி' குடல் தோசை! - ’அட்றா சக்க’ கோவை கையேந்தி பவன்

இரவு 10:30 மணி இருக்கும். கோவை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தோம். பசி வயிற்றைக் கிள்ள, `ஏதாவது ஹோட்டல் இருக்காதா!' என மனம் அலைபாய்ந்தது. அப்போது எங்களைக் கடந்து சென்ற ஒருவர் ``என்னப்பா சாப்பிட கடையத் தேடுறீங்களா, தோசை கடைக்குப் போங்க" என்று கூறிச் சென்றார்.

தோசைக்கடை

`தோசைக் கடையா... அதென்ன?' என விசாரித்து லஷ்மி மில்ஸில் ஒரு குட்டிச் சந்தில், சிறிய தள்ளுவண்டியில் ஒளிந்திருந்த `கபாலி தோசைக் கடை'க்குச் சென்றோம். அந்த இரவு நேரத்திலும் ஆவி பறக்க சூடாக வியாபாரம்! `சரி, நாமும் ஒரு தோசையைச் சொல்வோம்!' என நினைப்பதற்குள் கையில் மெனுகார்டு திணிக்கப்பட்டது. `இதென்ன தள்ளுவண்டிக் கடையில மெனுகார்டு!' எனச் சிரித்துக்கொண்டே மெனுகார்டைப் பார்த்த நமக்கு, தலை கிர்ர்ரென்றது. உண்மையில், தள்ளுவண்டிக் கடைக்குத்தான் வந்திருக்கிறோமா என ஒரு நிமிடம் உறுதி செய்துகொண்டோம். சுமார் 20-க்கும் மேற்பட்ட தோசைகள், 5-க்கும் மேற்பட்ட சப்பாத்திகள் எனப் பட்டியல் நீண்டது. 

தோசை

`ஜல்லிக்கட்டு' தோசை, `கபாலி' சிக்கன் தோசை, `பாகுபலி' குடல் தோசை, `பிக் பாஸ்' மட்டன் தோசை, `ஓவியா' வெஜ் தோசை... ப்பா! இன்னும் இருக்கிறது. `ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கீங்களே ஜி' என நினைத்துக்கொண்டு, பேர் மட்டும்தான் நல்லா இருக்கா... இல்ல தோசையும் நல்லா இருக்குமா என அறிந்துகொள்ளும் ஆவலில் ஒரு `கபாலி' சிக்கன் தோசையை ஆர்டர் செய்தோம். பத்தே நிமிடத்தில் தட்டை நீட்டினார் `சிப்பிக்குள் முத்து' (அட, கடை நடத்துறவர் பேருங்க). வாங்கியவுடன் ``என்ன குழம்புங்க வேணும், சிக்கன், மட்டன், மீன், நண்டு, இறால்..?" என அடுக்கிக்கொண்டே போனார். மறுபடியும் தலை கிர்ர்ரென, குழம்புலயும் இத்தனை வெரைட்டியா! ``சரி, சிக்கன் குழம்பை ஊத்துங்க" எனக் கூறிவிட்டு, தோசையைப் பிரித்தால் கேரட், வெங்காயம், கொத்தமல்லி என மசாலா காம்போவோடு ஒரு சிக்கன் லெக் பீஸ் உள்ளே படுத்துக்கிடந்தது. ``ஓ..! இதான் `கபாலி தோசையா!' என நினைத்துக்கொண்டே ஒரு வெட்டு வெட்டினோம். எந்த தோசையின் விலையும் 50 ரூபாயைத் தாண்டவில்லை.

சாப்பிட்டுவிட்டு திருப்தியாக `சிப்பிக்குள் முத்துவிடம்' பேசத் தொடங்கினோம். ஒரே நேரத்தில் 8 தோசைகளை கல்லில் ஊற்றியபடியே பேசத் தொடங்குகிறார்.

தோசைக்கடை

``இந்தக் கடைய 23 வருஷமா இதே லஷ்மி மில்ஸ்லதான் நடத்திட்டுவர்றேன். ஆரம்பிக்கும்போது தோசை 2 ரூபாய்க்குக் குடுத்தேன். விலைவாசி கொஞ்சம் கொஞ்சமா ஏறி, போன வருஷம் வரைக்கும் 20 ரூபாய்க்குக் குடுத்திட்டு வந்தேன். இப்பதான் பெட்ரோல் - டீசல் விலை தினமும் ஏறுதே, அதனால 30 ரூபாய்க்கு விற்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கேன். கம்மியான விலையில சுவையான உணவு தரணும்னு நினைக்கிறதுனால, விலை ஏத்துறது  வாடிக்கையாளர்களைவிட எனக்குத்தான் சங்கடமா இருக்கு. ஆனா, என் நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தர்ற அமோக ஆதரவுதான் என் வெற்றி. "

பேசி முடித்துத் திரும்பியபோது காரில் வந்த மூன்று இளைஞர்கள் அமைதியாக வந்து தோசையை வாங்கி ஹாயாக காரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்தபோது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. `இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சுச் சாப்பிட கிடைச்சது'. ருசி எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் தேடி வருவார்கள், அதற்கு சிப்பிக்குள் முத்து ஓர் உதாரணம்.

கையேந்தி பவன்

கோவையில் பல கையேந்தி பவன் இருந்தாலும், லஷ்மி மில்ஸ் ஏர்டெல் ஆபீஸ் பின்புறம் உள்ள இந்தக் கடைக்கு என ஒரு தனி சுவையுள்ளது. கோவை மக்கள் மட்டுமல்ல, கோவைக்குப் போகும் எல்லோரும் சிப்பிக்குள் முத்து சுட்டு சுவைக்கத் தரும் எல்லாவிதமான தோசைகளையும் டேஸ்ட் செய்யலாம்!


டிரெண்டிங் @ விகடன்