வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (21/07/2018)

கடைசி தொடர்பு:19:59 (21/07/2018)

2030-ல் ஒரு கோடி ஆட்டோமேடிக் கார்கள்?

இந்தியாவில் 5% பேர் ஓட்டுநர் இல்லாத காருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது போன்ற காரினால் பல்வேறு விபத்துகள், எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். 

2030-ல் ஒரு கோடி ஆட்டோமேடிக் கார்கள்?

ளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் அனைத்துமே சாத்தியம் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்தான் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார். உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதைப் பரவலாக்கிவருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்துத் தரப்பினராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுவது இந்தத் தானியங்கி கார்கள்தாம். தானியங்கி கார்களா என்று கேட்டும் இதே வேலையில், தென்கிழக்கு லண்டன் சாலைகளில் வழியெங்கும் இந்த கார்கள் உணவு கொடுப்பதைப் பார்க்கலாம். பாரிஸ் மற்றும் ஃபின்லாந்து போன்ற நகரங்களில் தானியங்கிப் பேருந்துகளில் மக்கள் எளிதாகப் பயணம் செய்வதைப் பார்க்கலாம்.

Driver less Cars

கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள கொலொரேடோவில் 18 சக்கரங்களைக் கொண்ட டிரக்  ஒன்று 50,000 பியர் கேன்களை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலையில் 120 மைல் தூரத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் தானாகவே பயணம் செய்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது.

உலகின் முதல் பறக்கும் காரை ``பால்-வி லிபெர்டி" என்பவர் ஜெனிவாவில் அறிமுகப்படுத்தினார். கூகுள், மெர்சடிஸ் போன்ற மோட்டார் நிறுவங்கள் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் முனைப்பில் பல்வேறு வருடங்களாகவே முயன்று வருகின்றனர். உலகம் முழுவதும் இதுபோன்ற கார்களை நமது சாலைகளுக்குக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை செய்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முதலில் சிங்கப்பூரைச் சேர்ந்த நுயூடோனமி (nuTonomy) என்ற அமைப்பினர் தானியங்கி காரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த காரானது கேமராக்கள், ரேடார், GPS மற்றும் லேசர் சென்சார்கள் போன்றவற்றின் மூலமாக இயங்கும். 

கார்கள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நிசான் தொழில்நுட்ப உதவியோடு, தானியங்கி காரை உருவாக்கி சோதனை செய்துள்ளனர். பிரிட்டனில் அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளில் இந்த காரை சோதனை செய்வதற்கு போக்குவரத்து துறையும் அனுமதி வழங்கியுள்ளது. உலகெங்கிலும், இதுபோன்ற சோதனை ஓட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 

2030-ம் ஆண்டுக்குள் பல நாடுகளில் இந்த கார் வலம் வந்துகொண்டிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஓட்டுநர் இல்லாத காரை மக்கள் அனைவரும் எவ்வாறு விரும்புகின்றனர். அதைப் பயன்படுத்த தயாராக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள Ipsos `குளோபல் @ டிவிசோர் சார்பாக 28 நாடுகளில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயின்படி, உலகம் முழுவதும் 30% பேர் மட்டுமே தற்போது தானியங்கி காரை பயன்படுத்த விரும்புகின்றனர்.   

இந்த சர்வேயில், அதிகபட்சமாக 49% இந்திய மக்களுக்குத் தானியங்கி கார் மேல் ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தொழில்வளர்ச்சி அதிகம் உள்ள கனடா நாட்டில் 18% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளார்கள். தனியாகப் பயணம் செய்வதற்காக தானியங்கி காரை இந்தியாவில் 62% பேர் விரும்புகின்றனர். மேலும், பார்க்கிங் செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்பதால் 58% பேர் இதை விரும்புகின்றனர். 

கார்கள்

ஓட்டுநர் இல்லாத காரை விரும்புவதில் மலேசியா 48%, சீனா 46%, தென் கொரியா 38%, அர்ஜென்டினா 35%, சவுதி அரேபியா 35%, தென் ஆப்பிரிக்கா 34%, ஆஸ்திரேலியா 25%, அமெரிக்கா 22% ஜெர்மனி 19% பேர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முக்கியமாக ஓட்டுநர் இல்லா காரைப் பயன்படுத்துவதால், அதிக ஓய்வு கிடைக்கும் என்று 64% பேர் கூறுகிறார்கள். சுலபமாகப் பயணம் செய்யலாம் என 46% பேரும், சுற்றுச் சூழலுக்கு ஏற்றது என 57% பேரும் கூறுகின்றனர். மேலும், பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்று 73% அர்ஜென்டினா மக்களும், 67% இந்தியர்களும் விரும்புகின்றனர். 

ஆடி, பி.எம்.டபில்யூ, ஃபோர்டு, மெர்சிடிஸ் பென்ஸ், வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் கார்களை உற்பத்தி செய்யும் ஜெர்மன் நாட்டினர் தானியங்கி காரை 19% மட்டுமே வரவேற்கிறார்கள். இந்தியாவில் 5% பேர் ஓட்டுநர் இல்லாத காருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது போன்ற காரினால் பல்வேறு விபத்துகள், எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படும் என்று கூறுகின்றனர். 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் 2018 மார்ச் மாதம் தானியங்கி காரால் விபத்து ஏற்பட்டு சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் அதே மாதத்தில் ஏற்பட்ட தானியங்கி கார் விபத்தில் காரில் இருந்தவர் உயிரிழந்தார். தொடர்ந்து மே மாதம் அமெரிக்காவில் தெற்கு ஜோர்டான் பகுதியில் உள்ள உட்டா என்ற இடத்தில் டெஸ்லா நிறுவன தானியங்கி கார் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து உபேர் தானியங்கி காரின் சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் கார் பலத்த சேதமடைந்தது. மேலும், 2016-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் வசதி கொண்ட மாடல் S கார் டிரக்குடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதும் தற்போது ஆயிரங்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த கார்களின் விற்பனை 2030-ம் ஆண்டில் ஒரு கோடியைத் தொடும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

car

மனிதர்களால் இயக்கப்படும் கார்கள் மற்றும் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்கள் என்று இரண்டும் ஒரே பாதையில் பயணம் செய்யும் போது பல்வேறு சவால்களைச் சந்திக்கலாம். இனி வரும் காலங்களில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அறிந்து கொண்டதைப் போல விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வருகிறது  ஓட்டுநர் இல்லாத கார்கள். அதனை எதிர் கொள்ள தயாராவோம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்