வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:20:30 (21/07/2018)

இணைய வசதிக்காக புதிய செயற்கைக்கோள்! ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி

அதேனா என்ற செயற்கைக்கோளைத் தயாரிக்கும் புதிய முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேஸ்புக்

சர்வதேச அளவில் பெரும்பாலானவர்களை அடிமையாக்கி வைத்துள்ளது ஃபேஸ்புக். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் 2004-ம் ஆண்டு இந்த சமூகவலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இதில், போட்டோ, வீடியோ, கருத்துகளைப் பதிவிடும் வசதி மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களை இணைக்கும் வசதிகள் உள்ளதால், ஃபேஸ்புக் அனைவரையும் எளிதில் ஈர்த்துள்ளது. இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரும் இதை விரும்பிப் பயன்படுத்திவரும் சூழல் உருவாகியுள்ளது. உலகில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது தங்களின் சேவையை அதிகப்படுத்தும் ஒரு புது முயற்சியாக ஃபேஸ்புக் நிறுவனம் அதேனா (Athena) செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள யுனைடெட் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனில் (Federal Communications Commission) இதற்கான திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் மூலம் உலகில் உள்ள பாதுகாப்பான மற்றும் இணைய வசதியில்லா பகுதிகளுக்கு எளிமையாகப் பிராட்பேண்ட் சேவையை வழங்க முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

ஃபேஸ்புக்

இது குறித்து பேசிய ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர், “இந்தத் திட்டம் பற்றிய முழுமையான கருத்தைத் தற்போது தெரிவிக்க முடியாது. செயற்கைக்கோள் மூலம் உருவாக்கப்படும் பிராட்பேண்ட் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முக்கியப் பயனாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இணைய வசதி குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் முற்றிலும் இணைய வசதி இல்லாத இடங்களில் இதன் மூலம் எளிதாகப் பிராட்பேண்ட் கொண்டு வரமுடியும்’’ எனத் தெரிவித்தார்.