``நீ சிங்கமாவே இரு... ஆனா சிங்கிளா வந்தா செத்த!" - கெத்து காட்டும் கழுதைப்புலிகள் | hyenas can stand against lion when it comes alone

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (25/07/2018)

கடைசி தொடர்பு:09:56 (30/07/2018)

``நீ சிங்கமாவே இரு... ஆனா சிங்கிளா வந்தா செத்த!" - கெத்து காட்டும் கழுதைப்புலிகள்

``கழுதைப்புலிகளிடம் சிக்கி உயிரை விட்ட சிங்கம்” என்கிற அவப் பெயரை சுமக்க சிங்கங்கள் தயாராக இல்லை. துரத்திப் பிடித்து வேட்டையாடிய இரையை வேறு வழியில்லாமல் கழுதைப்புலிகளிடம் விட்டு விட்டுச் சென்று விடுகின்றன.

``நீ சிங்கமாவே இரு... ஆனா சிங்கிளா வந்தா செத்த!

நீ சிங்கமாவே இரு! ஆனா சிங்கிளா வந்தா செத்த! கெத்து காட்டும் கழுதைப்புலிகள் 

“உன் பார்வையில் நான் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறேன். என்னுடைய பார்வையில் நீ என் எதிரி அவ்வளவே. உன் அடுத்த தலைமுறையும் என் இனத்தை  அழிக்கவே துணியுமென்றால்  இப்போதே உன் அடுத்த தலைமுறையையும் கொல்வேன்.  என்னையும் என் இனத்தையும் பாதுகாக்க உன் பிள்ளைகளை  மட்டுமல்ல உன்னையும் கொல்வேன்” மேற் கூறியது போல காட்டில் வாழும் இரண்டு உயிரினங்களின் முக்கிய அஜெண்டாவே ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிப்பதில்தான் இருக்கிறது.ஒன்று சிங்கம், இன்னொன்று கழுதைப்புலி.  சிங்கங்களை எதிர்த்து நிற்கிற பெண் கழுதைப்புலிகள் பற்றிய ஒரு திகில் அறிமுகம். 

கழுதைப்புலி

பெண் கழுதைப்புலிகள் ஆக்ரோஷமான உயிரினம். அந்தக் குழுவில் ஆண்கள் பெண்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கும். இனப்பெருக்கத்துக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆண் கழுதைப்புலிகளுக்கும் பெண் கழுதைப்புலிகளுக்கும் உடலளவில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. ஆண் கழுதைப்புலிகளுக்கு இருப்பதைப் போன்ற ஆண் குறி பெண் கழுதைப்புலிகளுக்கும் உண்டு. இதற்குப் போலி ஆண் குறி என்று பெயர். பெண் கழுதைப்புலிகள் சிறுநீர் கழிப்பது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது வரை எல்லாமே அந்தப் போலி ஆண்குறி மூலமாகத்தான். உடலோடு ஒட்டியிருக்க வேண்டிய பெண்குறி, ஹார்மோன் கோளாறால், சில இன்ச் நீளத்துக்கு வெளியே நீண்டு காட்சி தருகிறது. இதைத்தான் போலி ஆண்குறி என்கிறார்கள். இந்தப் போலி ஆண் குறியின்  சிறிய துளை வழியாகக் குட்டிகள் வெளிவரும் பொழுது குட்டிகள் மட்டுமல்லாது தாயும்  மிகப்பெரிய மூச்சுத் திணறல்களுக்கு உள்ளாகின்றது. இதனால் குட்டிகளில் 60 சதவிகிதம் இறந்தே பிறக்கின்றன. சில நேரங்களில் காயம் ஏற்படுகின்றன. இனப்பெருக்க நேரத்தில் மூன்றிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டிகள் ஈன்ற நாளிலிருந்து நான்கு வாரங்கள் வரை அவை மண்ணுக்குள் வளைத் தோண்டி வசிக்கின்றன. வேறு யாரையும் அங்கு அவை அனுமதிப்பதில்லை. யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுடனேயே போராட வேண்டிய நிலை ஒவ்வொரு உயிரினத்துக்கும் வரும், அதில் கழுதைப்புலிகளும் விதிவிலக்கல்ல. குட்டிகளில் யார் பெரியவன் என்கிற சண்டை சிறு வயதிலேயே கழுதைப்புலிகளுக்குள் வந்து விடும். தாய் கழுதைப்புலிகளுக்கு இயற்கையில் குட்டிகளுக்கு பாலூட்ட இரண்டு முலைக் காம்புகள் மட்டுமே இருக்கும். இரண்டு காம்புகளில், இருக்கிற நான்கு குட்டிகளில் யார் முதலில் பால் அருந்துவது என்கிற சண்டை குட்டிகளுக்குள் நடக்கும்.  இதில் பலம் பொருந்திய பெண் குட்டிகள் ஆண் குட்டிகளுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றுவிடுகின்றன. சில நேரங்களில் சண்டையின் முடிவில் ஆண் குட்டிகளைப் பெண் குட்டிகள் கொன்றுவிடுகின்றன. தப்பிப் பிழைக்கும் ஆண் குட்டிகள் பருவம் அடைகிற வரை தாயுடன் இருக்கின்றன. பருவம் வந்ததும் குழுவில் இருந்து பிரிந்து வேறு குழுவுடன் இணைந்து கொள்கின்றன. 

கழுதைப்புலிகள் ஒரு குழுவாக வாழ்பவை. ஒரு குழுவில் 80 கழுதைப்புலிகள் வரை இருக்கும். அதன் தலைவராக பெண் கழுதைப்புலிகளே இருக்கின்றன. ஆண் கழுதைப்புலிகளைக் காட்டிலும் அளவிலும் ஆக்ரோசத்திலும் பெண் கழுதைப்புலிகள் வலுவானவையாக இருக்கின்றன. குழுவை ஒருங்கிணைப்பதிலும்  வேட்டையாடுவதிலும் பெண் கழுதைப்புலிகள் சிறப்பாக செயல்படுபவை.  குழுவுக்கென்று  தனி எல்லைகளைக் கழுதைப்புலிகள்  வரையறுத்து வைத்திருக்கின்றன. அதற்குள் சிங்கம்,  சிறுத்தை, இன்னொரு கழுதைப்புலி கூட்டம்  என்று எந்த உயிரினங்களும் வந்து விடவே  கூடாது. அதில் அவை உறுதியாகவும் இருக்கின்றன. தன்னுடைய உடலில் சுரக்கும் ஒருவித வெள்ளை திரவத்தைக் கொண்டு தங்களின் எல்லைகளைத் தீர்மானிக்கின்றன. அதற்குள் எந்த உயிரினத்தையும் அவ்வளவு எளிதில் அவை அனுமதிப்பதில்லை. பல சண்டைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் இதுவே ஆரம்ப காரணமாகவும் அமைந்து விடுகிறது. கழுதைப்புலிகளின் ஒவ்வொரு சத்தத்துக்கு ஒரு அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் எல்லைக்குள் ஏதேனும் உயிரினம் வந்துவிட்டால் ஒருவிதமான வித்தியாச ஒலியை எழுப்புகின்றன. ``எல்லைக்குள் புதிதாக ஒருவன் வந்திருக்கிறான் இறை காத்திருக்கிறது” என்று அர்த்தம். சிங்கமாக இருந்தாலும் சிறுத்தையாக இருந்தாலும் மொத்த கழுதைப்புலிகளும் ஒன்றாகச் சேர்ந்து  விரட்டி விடுகின்றன. பெண் கழுதைப்புலிகள் எதற்கும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும். சில நேரங்களில் மிகப் பெரிய சண்டைகளே நிகழும். கழுதைப்புலிகளின் எதிரிகளில் ஒன்று சிங்கம். ஆனால், சிங்கத்துக்கு இருக்கிற ஒரே எதிரி கழுதைப்புலி. 

கழுதைப்புலிகள்

PHOTO : in Etosha National Park by NingYu Pao

சிங்கம் வேட்டையாடுவதற்கென்று தனி அடையாளத்தை வைத்திருக்கின்றன. ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்கும். இந்த நேரத்தில் கழுதைப்புலிகளின் வேலையே சிங்கத்தை வேவு பார்ப்பதுதான். சிங்கம் இரையைத் துரத்துவதில் இருந்து, அதை வேட்டையாடுவதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டேயிருக்கும். சிங்கம் இரையை வேட்டையாடியதும் கழுதைப்புலிகளின் வேலை ஆரம்பமாகும். அப்போது வரை சிங்கத்தைப் பின் தொடர்கிற கழுதைப்புலிகள் சிங்கம் இரையை வேட்டையாடியதும், தன்னுடைய மொத்த குழுவையும் சத்தம் எழுப்பி வரவழைக்கும். சிங்கத்துக்குக் கொடுக்கிற முதல் எச்சரிக்கை ஒலி அதுதான். அந்த ஒலியைக் கேட்கிற மொத்த கழுதைப்புலிகளும் சிங்கம் இருக்கிற பகுதிக்கு வந்து விடுகின்றன. சிங்கம் பொதுவாக தனியாக வேட்டையாடும், வேட்டையை முடித்ததும் அந்த இடத்திலேயே இரையை உண்ண  ஆரம்பிக்கும். வேட்டைச் சிக்கியதும் அதை உண்பதில் சிங்கம் கவனம் செலுத்தும். அந்த நேரத்தில் மொத்த கழுத்தைப்புலிகளும் சிங்கத்தைச் `சுற்று' போட்டு விடுகின்றன. என்னதான் சிங்கம் காட்டு ராஜாவாக இருந்தாலும் 80 கழுதைப்புலிகளிடம் சிக்கினால் பீதியாகத்தான் செய்யும். சிங்கம் முடிந்த வரை தன்னுடைய எதிர்ப்பைக் காட்டலாம், ஆனால், அவற்றுடன் சண்டை போட முடியாது. `கழுதைப்புலிகளிடம் சிக்கி உயிரை விட்ட சிங்கம்' என்கிற அவப் பெயரை சுமக்க அவை தயாராக இல்லை. துரத்திப் பிடித்து வேட்டையாடிய இரையை வேறு வழியில்லாமல் கழுதைப்புலிகளிடம் விட்டு விட்டுச் சென்று விடுகின்றன. கடைசியில் கழுதைப்புலிகளின் சூழ்ச்சி வென்றுவிடுகிறது. இங்கிருந்துதான் சிங்கங்களுக்கு கழுதைப்புலிகளுக்கும் இடையேயான போர் தொடங்குகிறது. இதனுடைய பிரதிபலிப்பு வேறு விதமாக இருக்கும். இரையைப் பறிகொடுத்த சிங்கங்கள் தனியாக இருக்கிற கழுதைப்புலிகளை வேட்டையாடிக் கொன்று விடுகின்றன. நேரடியாகச் சிங்கத்தை எதிர்த்து நிற்க முடியாத கழுதைப்புலிகள் தனியாக இருக்கும் சிங்கங்களின் குட்டிகளை வேட்டையாடிக் கொன்று விடுகின்றன. இதே நிலைதான் சிறுத்தைகளுக்கும். எவ்வளவுதான் பலவீனமான விலங்காகக் கழுதைப்புலி இருந்தாலும்  கூட்டமாய் சேரும்பொழுது அசுர பலத்தைப் பெற்று விடுகின்றன. சிறுத்தைகளும் சிங்கங்களும் இன்றளவுக்குப் பயப்படுகிற என்றால் அவை கழுதைப்புலிகளுக்கு மட்டும்தான். 

 

 

கழுதைப்புலிகளாக இருப்பது சுலபம், இங்கே சிங்கமாய் இருப்பதுதான் பிரச்னையே!! 


டிரெண்டிங் @ விகடன்