வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (25/07/2018)

கடைசி தொடர்பு:13:02 (25/07/2018)

3 கோடி இருந்தால் நீங்களும் அயர்ன்மேனாக மாறி பறக்கலாம்... ரெடியா?

இந்தக் கவசத்தில் 3D பிரின்ட் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 12,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

3 கோடி இருந்தால் நீங்களும் அயர்ன்மேனாக மாறி பறக்கலாம்... ரெடியா?

வானில் பறந்து திரியும் பறவைகளைப் பார்த்து அதைப் போலவே தானும் பறக்க வேண்டும் என்ற ஆசை மனிதனுக்குப் பல காலமாகவே இருந்தது. விமானம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதில் பாதி நிறைவேறிவிட்டது. ஆனால், அதில் சிலருக்கு திருப்தியில்லை, என்னதான் விமானத்தில் ஏறிப் பறந்தாலும் ஒரு பறவை பறப்பது போல சுதந்திரமாகப் பறக்க முடியாதே?. அதற்குப் பதிலாக உடலில் ஏதாவது உபகரணத்தை மட்டும் பொருத்திக்கொண்டு பறக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பல வருடங்களாகவே நடைபெறாமல் இல்லை.

நாமும் பறக்கலாம் அயர்ன்மேன்

அப்படி ஒரு கருவியை நினைத்துப் பார்க்கும் பலருக்கும் ஹாலிவுட் படமான அயர்ன் மேன் ஞாபகத்துக்கு வரக்கூடும். அந்தப் படத்தில் கதாநாயகன் தனது பறக்கும் திறன் கொண்ட கவசத்தால் எதிரிகளை `வெச்சு’ செய்வார். கற்பனையாக இருந்தாலும் கூட பலருக்கு அது பிடித்திருந்தது. ஆனால், அப்படி ஒன்றை நிஜத்தில் உருவாக்குவது கடினமான விஷயம்தான் என்றாலும் கிட்டத்தட்ட அதைப் போலவே ஒரு கவசத்தை உருவாக்கியது மட்டுமன்றி அதை விற்பனைக்கும் கொண்டு வந்திருக்கிறார்.

மூன்று கோடி இருந்தால் நீங்களும் அயர்மேன்தான்:

ரிச்சர்ட் பிரவுனிங்

பார்ப்பவர்களை எல்லாம் வியக்க வைக்கும் இந்தக் கவசத்தை உருவாக்கியவர் ரிச்சர்ட் பிரவுனிங்( Richard Browning). பிரிட்டனைச் சேர்ந்த இவர் ராயல் மரைன்ஸ் என்ற ராணுவப் பிரிவில் சில காலம் பணியாற்றியவர் அதன் பிறகு எண்ணெய் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார். பின்னர் இது போல ஒரு பறக்கும் கவசத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றவே வேலையை விட்டு விட்டு அதைச் செய்தும் காட்டியிருக்கிறார். 

ரிச்சர்ட்டுக்கு இப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் அவரது குடும்பப் பின்னணி அப்படி. அவரது தந்தை ஒரு ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயர், தாத்தா ஒரு விமான பைலட் மற்றும் போர் விமானியும் கூட, தாய்வழி தாத்தா ஹெலிகாப்டர் உற்பத்தியாளராக இருந்தவர். இப்படி அவரது குடும்பமே ஏதோ ஒரு வகையில் வானில் பறப்பதில் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். இதை உருவாக்குவதற்கான முயற்சியில் கடந்த 2017-ம் ஆண்டில்தான் கிராவிட்டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

பறக்கும் கவசம்

கடந்த வருடம் இதன் மாதிரியை உருவாக்கி இதைப் பரிசோதிக்கத் தொடங்கியிருந்தார். அப்பொழுதே இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. தீவிர பரிசோதனைக்குப் பிறகு தற்பொழுது கவசத்தின் வடிவத்தை இறுதிப்படுத்தியிருக்கிறார். இது போன்ற கவசங்களை வடிவமைப்பது சற்று கடினமான விஷயம். முதலில் அது எடை குறைவாக இருக்க வேண்டும், மனிதனின் எடையைச் சுமக்க வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் எரிபொருளால் விபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது எனப் பல்வேறு சவால்கள் இது போன்ற கவசத்தை உருவாக்குவதில் இருக்கின்றன.

 

 

முதுகுக்குப் பின்னால் ஒன்றும், ஒவ்வொரு கைகளிலும் இரண்டுமாக இந்தக் கவசத்தில் மொத்தம் ஐந்து ஜெட் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் மொத்தமாகச் சேர்ந்து 1,050-hp திறனை அளிக்கும். இது தரையிலிருந்து மேலெழும்பிப் பறப்பதற்கு போதுமானதாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்துவதற்கான கன்ட்ரோல்களும், திசை மாற்றுவதற்கான அமைப்பும் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3D பிரின்ட் பாகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 12,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

 

பறக்கும் கவசம்

இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதன் பறக்கும் நேரம் மிகவும் குறைவு தற்பொழுது இதன் மூலமாக மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மட்டுமே பறக்க முடியும். மற்றொன்று இதன் பாதுகாப்பு, வானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென செயலிழந்தால் நிலைமை மோசமாகும் வாய்ப்புகள் அதிகம். லண்டனில் உள்ள ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தற்பொழுது இந்தக் கவசம் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை £ 3,40,000 பவுண்டுகள் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

இந்தக் கவசத்தை ராணுவத்திலும், மீட்புப்பணிகளின் போதும் பயன்படுத்த முடியும் என ரிச்சர்ட் பிரவுனிங் தெரிவித்திருக்கிறார். இது போன்று இதற்கு முன்பே பறக்கும் கவசங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அவற்றில் சிலவை மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றன. அவையும் இது போலவே மிகக் குறைவான நேரமே பறக்கும் திறன் கொண்டவை. இருந்தாலும் இதுபோன்ற முயற்சிகளை ஒரு தொடக்கப்புள்ளியாகப் பார்க்கலாம். வரும் காலங்களில் இதை அடிப்படையாக வைத்து அதிக திறன் கொண்ட மேம்பட்ட கவசம் கண்டுபிடிக்கப்படலாம். அதன் பிறகு என்ன ஒவ்வொருவருமே அயர்ன் மேனாக மாறலாம்.


டிரெண்டிங் @ விகடன்