"ஜெயாவை இப்போ தூக்கிக் கொஞ்ச முடியலை!" - வண்டலூர் சிங்கத்தின் 'அம்மா' | Vandaloor zoo worker talks about lion cub Jaya

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (25/07/2018)

கடைசி தொடர்பு:14:03 (25/07/2018)

"ஜெயாவை இப்போ தூக்கிக் கொஞ்ச முடியலை!" - வண்டலூர் சிங்கத்தின் 'அம்மா'

``ஜெயாக்குட்டி, சேட்டைக்காரி கிடையாது. சமர்த்தா குளிப்பா, சாப்பிடுவா.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து 6 மாதமே ஆன பெண் சிங்கக்குட்டி ஒன்றுக்கு, நேற்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `ஜெயா' எனப் பெயர் சூட்டினார் அல்லவா? அதன் அம்மாவை நான் வண்டலூரில் இரண்டு தடவை நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது குட்டியை வயிற்றில் சுமந்த கர்வத்தோடு வலம் வந்துகொண்டிருந்தது.

அந்த உயிரியல் பூங்காவில் புலிகளைப் பராமரிக்கும் நாகம்மாள் மற்றும் சிங்கங்களைப் பராமரிக்கும் தேவகி ஆகியோருக்கு `அவள் விகடன் விருது' வழங்குவது தொடர்பாக நேரில் சந்திக்கச் சென்றிருந்தபோதுதான், நீலாவின் வயிற்றில் கருவாக இருந்தாள் ஜெயா. இந்தத் தகவலை கேள்விப்பட்டதும் உரிய அனுமதி பெற்று கூண்டு அருகில் சென்று பார்த்தபோது, நிறைமாத கர்ப்பிணியாகக் களைப்புடன் படுத்திருந்தாள் நீலா. ``நீலா... இடுப்பு நோவுதாடி'' எனப் பராமரிப்பாளார் தேவகி கேட்டதற்கு, `உம்' கொட்டலுடன் தலையை நிமிர்த்திப் பார்த்தது. அருகில் ஒரு புது நபரைப் பார்க்கும் கோபமோ, கர்ஜனையோ இல்லை.

ஜெயா - பெயர் சூட்டியபோது

சில வாரங்கள் கழித்து, `அவள் விகடன் விருது' விழாவுக்கான அழைப்பிதழுடன் சென்றிருந்தேன். அப்போது நீலா, நல்லபடியாகப் பெண் குட்டியை ஈன்றிருந்தாள். அந்தக் குட்டி, தாயிடம் முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது. பிள்ளைப் பெற்ற களைப்பிலிருந்து முழுவதும் மீளாமல் படுத்திருந்த நீலாவிடம், ``என்ன நீலா, புள்ளைக்குப் பால் கொடுக்கிறியோ'' எனப் பராமரிப்பாளர் கேட்டதற்கு, லைட்டாக  ஒரு கர்ஜனையை பதிலாக அளித்தாள் நீலா. பிள்ளை பெற்ற நீலாவையோ, அந்தக் குட்டியையோ அருகில் சென்று பார்க்க அப்போது எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காரணம், குட்டி ஈன்ற பெண் சிங்கத்தின் கண்களில், அந்நியர் யாராவது தென்பட்டால், தன் குட்டிக்கு ஆபத்து வரும் என நினைக்குமாம். அதற்கு, தானே தன் குட்டியைக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்துவிடுமாம். அதனால், நீலாவின் அறையில் வைக்கப்பட்டிருந்த கேமரா வழியாக கம்ப்யூட்டர் மானிட்டரில் குட்டியை ரசித்துவிட்டு வந்தேன். அந்தக் குட்டிக்குத்தான் `ஜெயா' என்று தமிழக முதல்வர் தற்போது பெயர் சூட்டியிருக்கிறார். 

``ஜெயா குட்டி எப்படி இருக்கிறாள்?'' என்று பராமரிப்பாளர் தேவகியிடம் கேட்டேன்.

பராமரிப்பாளார் தேவகி

``முதல்வர் பெயர் வைக்கிறதுக்கு முன்னாடி, இங்கிருக்கும் நாங்க எல்லம் அவளை `குட்டிம்மா'னு செல்லமாக் கூப்பிட்டுட்டு இருந்தோம். நல்லா தாய்ப்பால் குடிச்சு ஆரோக்கியமா வளர்ந்திருக்கா. பொறந்த ரெண்டாவது மாசத்திலிருந்து வேக வைத்த சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் கொடுத்துச் சாப்பிடப் பழக்கினோம். இப்போ, நல்லா வளர்ந்துட்டதால் கறியை அப்படியே சாப்பிடுவா. சிக்கனை ரத்தத்தோட சாப்பிடுறதுனால ஜெயா மேல வர்ற ரத்த வாடை காரணமா எறும்புகள் வந்து அதைக் கடிக்க வரலாம். அதனால், தினமும் வராண்டாவில் வெச்சு சுத்தமா அவளைக் குளிப்பாட்டுவோம். ஜெயாக்குட்டி, அவளுடைய அப்பா, தாய், மாமா மாதிரி சேட்டை கிடையாது. சமர்த்தா குளிச்சுச் சாப்பிடுவா. ரெண்டு, மூணு மாசம் வரைதான் அவளை ஈஸியா தூக்கிக் கொஞ்ச முடிஞ்சது. இப்போ வெயிட் போட்டுடதால் தூக்க முடியலை. `குட்டிம்மா' எனக் கூப்பிட்டதும் ஓடிவந்து நிற்பாள். `அம்மா நீலா எங்கேடி?'னு கேட்டால், கழுத்தைத் திருப்பி, தன்  அம்மாவைத் தேடுவாள். ஜெயாவுக்கு அடுத்து நீலா அடுத்த குட்டியைப் பெற ரெடியாகிட்டா. அதனால், ஜெயாவைப் பிரிச்சு, அவ அம்மா நீலா கண் எதிரிலேயே இருக்கிற இன்னொரு கூண்டுல விட்டிருக்கோம். ஏன்னா, தாய் சிங்கம் கர்ப்பமா இருக்கிற நேரத்துல குட்டியைப் பக்கத்தில் விட்டால், கோபத்துல ஓங்கி அறைஞ்சுடும். அதனால் பிரிச்சுவெச்சிருக்கோம். ஆனால், குட்டிம்மான்னு எப்போ நாங்க குரல் கொடுத்தாலும், உடனே அம்மா சிங்கம் எழுந்து கூண்டுக்குப் பக்கத்துல வந்து நின்னு கொஞ்ச நேரம் தன் மகளைக் கொஞ்சிக் குலாவிட்டுப் போகும்'' என வாஞ்சையுடன் சிரிக்கிறார் தேவகி. 

 


டிரெண்டிங் @ விகடன்