'பெரிய கனவுகள் நிறைவேற சின்ன வயதில் விதைக்க வேண்டும்!' அறிவியல் பரப்பும் ஆசிரியர் #CelebrateGovtSchool

ஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் பணிபுரிபவர்தான் கண்ணபிரான். அறிவியல் விஷயங்கள் தவிர்த்து அவருடன் பேசுவது சிரமம். அந்தளவுக்கு அறிவியலை நேசிப்பவர். தன் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை அவர் அறிமுகப்படுத்தும் விதம் பற்றிச் சொல்கிறார்.

'பெரிய கனவுகள் நிறைவேற சின்ன வயதில் விதைக்க வேண்டும்!' அறிவியல் பரப்பும் ஆசிரியர் #CelebrateGovtSchool

'அறிவியல், இயற்கையை நகலெடுப்பதில்லை. மாறாக, மறுஉருவாக்கம் செய்கிறது' என்பார் ஓர் ஆங்கில எழுத்தாளர். ஆங்கிலத்துக்கு அடுத்து மாணவர்கள் அதிகம் அஞ்சுவது, அறிவியல் பாடத்துக்குத்தான். ஏனெனில், கணக்குச் சூத்திரங்களும் இதில் அடங்கியிருக்கும். ஆனால், அறிவியலை நம் வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொண்டு படித்தால், விருப்பத்துக்குரிய பாடமாக மாறிவிடும். அதற்கு, அறிவியல் ஆர்வத்தைத் தொடக்கப்பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் சேர்க்க வேண்டும். அந்தச் சிறப்பான பணியைச் செய்துவருகிறார், ஆசிரியர் கண்ணபிரான்.

ஆசிரியர்

உடுமலைப்பேட்டை நகரிலிருந்து பொள்ளாச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம், ராகல்பாவி. அங்குள்ள ஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் பணிபுரிபவர்தான் கண்ணபிரான். அறிவியல் விஷயங்கள் தவிர்த்து அவருடன் பேசுவது சிரமம். அந்தளவுக்கு அறிவியலை நேசிப்பவர். தன் பள்ளி மாணவர்களுக்கு அறிவியலை அவர் அறிமுகப்படுத்தும் விதம் பற்றிச் சொல்கிறார்.

கண்ணபிரான் "இந்தப் பள்ளியில் 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். பாடத்திட்டத்தில் உள்ளவற்றையே நடத்திக்கொண்டிருந்த எனக்கு, விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்துடன் தொடர்பு கிடைத்தது. அங்கு அளிக்கப்பட்ட பயிற்சியே எனக்கு அறிவியல்மீது பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களில் உள்ள அறிவியல் விளங்கங்களை, அதிக செலவில்லாமல் கற்றுக்கொண்டேன். அதை அப்படியே  மாணவர்களுக்குக் கற்றலாக நடத்திவருகிறேன்.

விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், டெலஸ்கோப் உருவாக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தியது. அதற்கு, பள்ளியில் சிறப்பாக அறிவியலைப் பரப்பும் ஆசிரியர்களுக்கு அழைப்புவிடுத்தது. அதில் நானும் ஒருவன். 2015-ம் ஆண்டு குஜராத்திலும், 2017-ம் ஆண்டு கோவையிலும் நடந்த வகுப்புகளில் பங்கேற்று மூன்று டெலஸ்கோப்புகளை நானே உருவாக்கினேன். அது எனக்குத் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.  கற்றுக்கொண்டதை இன்னும் எளிமையான பொருள்களோடு மாணவர்களைச் செய்யவைத்தேன். என்னைவிடப் பல மடங்கு மகிழ்ச்சியில் திளைத்தனர் மாணவர்கள். விஞ்ஞானிகளின் பிறந்தநாள்களைச் சடங்குபோல  கொண்டாடுவதைவிட, அந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளைச் செய்முறைகளாகச் செய்துபார்க்க முயன்றோம்'' எனத் தனது அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பகிர்கிறார்.

ஆசிரியர் கண்ணபிரான்

''இப்போது, எங்கள் மாணவர்கள் சூரிய ஒளியை வைத்தே சுமார் 25 சோதனைகளைச் செய்வார்கள். உதாரணமாக, சூரிய ஒளியில் சிறு கம்பை நட்டுவைத்து, அதன் நிழலை அளவிட்டே சூரியனின் சுழலும் கோணத்தைக் கண்டறிவோம். பால் மிரர் (ball mirror) மூலம் சூரிய கரும்புள்ளிகள் பற்றித் தெரிந்துகொள்வோம். இப்படி ஏராளமான அறிவியல் சோதனைகளைச் செய்யச் செய்ய, பள்ளிக்கு வந்ததுமே, 'இன்னிக்கு என்ன அறிவியல் சோதனை செய்யப்போறோம் சார்?' என மாணவர்கள் ஆர்வமாகக் கேட்கின்றனர். மாணவர்களே விரும்பி அறிவியலை நோக்கி வர வேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேறி வருவதில் சந்தோஷம். பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி, 'தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இவையெல்லாம் தேவையா?' என்பதுதான். நான் உறுதியாக நம்புகிறேன். நம் பிள்ளைகளின் பெரிய கனவுகள் நிறைவேற வேண்டும் எனில், அவற்றுக்கான விதைகளைச் சின்ன வயதிலேயே விதைக்க வேண்டும். என்னுடைய முயற்சிக்குத் தலைமை ஆசிரியை சாவித்திரியின் ஒத்துழைப்பு அளப்பரியது. 

மாணவர்களை சின்னாறு எனும் பகுதிக்கு அழைத்துச்சென்று, இயற்கையைப் பார்வையிடச் செய்தவாறே சுத்தம் செய்யவைப்போம். மரம், செடி, கொடி ஆகியவற்றை அறிவியல் பார்வையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதையும் கற்பிப்போம். உதாணரமாக, ஒளிச்சேர்க்கையைப் பற்றி அங்கே விளக்குவோம். மாணவர்கள், புதிய சூழலில் கண்ணுக்கு எதிரே பாடத்துக்குரிய பொருள்களைப் பார்த்ததும் விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள். இந்தக் கிராம மக்களின் உதவியையும் மறக்காமல் சொல்ல வேண்டும். பல அறிவியல் விஷயங்களை விளக்குவதற்கு கணினியும் புரஜெக்டரும் அவசியம். இரண்டையும் வாங்கித்தந்தது, ஊர் மக்கள்தான்" என நிறைவாகப் புன்னகைக்கிறார் கண்ணபிரான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!