வெளியிடப்பட்ட நேரம்: 07:03 (26/07/2018)

கடைசி தொடர்பு:08:38 (26/07/2018)

உடலில் மிக முக்கியமான உறுப்பு எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு

உடலில் மிக முக்கியமான உறுப்பு எது? - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

நெகிழ்ச்சிக் கதை

`துயரத்தை வெளிப்படுத்தும் மௌன மொழிதான் கண்ணீர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஃபிரெஞ்ச் தத்துவவியலாளர் வோல்டேர் (Voltaire). பிறரின் துன்பத்தையோ, துயரத்தையோ களைய முயல வேண்டாம்... காது கொடுத்துக் கேட்கக்கூட நம்மில் பலருக்கு அவகாசமில்லை. வாழ்க்கை நமக்குக் கொடுத்திருக்கும் தினசரி சவால்களை எதிர்கொள்ளவே நேரம் போதவில்லை என்பது உண்மையே. அதற்காக மனிதர்களின் அடிப்படை குணமான இரக்கத்தையே தொலைத்துவிடக் கூடாதல்லவா? ஒரு மனிதன் துன்பப்படும்போது உதவ நீளவேண்டிய கரங்களின் அவசியம் குறித்துப் பேசவேண்டிய தருணம் இது. வாழ்க்கையில் எவை எவற்றையோ நாம் முக்கியம் எனக் கருதுகிறோம்... மிக மிக முக்கியமானதை மறந்துவிட்டு. அந்த உண்மையை எடுத்துச் சொல்லும் கதை ஒன்று... 

கதை

அமெரிக்காவிலிருக்கும் சிறு நகரங்களில் ஒன்றான சார்லஸ்டோனில் (Charleston) அந்தக் குடும்பம் இருந்தது. அம்மா, அப்பா, ஒரே மகன், ஓய்வு காலத்தில் வீட்டிலிருக்கும் தாத்தா என சின்னக் குடும்பம். அப்பா ஊருக்குள் சொந்தமாக ஒரு கார் ஷெட் வைத்திருந்தார். அதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இருந்தது. அம்மா மேரிக்கு, மகன் டேவிட்டை நன்றாக வளர்க்க வேண்டும் என்கிற பெருங்கனவு இருந்தது. அவனுடைய பள்ளிப் பாடங்கள் குறித்து அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. `அதற்குப் பள்ளி இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள், தனியாகப் பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன... வாழ்க்கைப் பாடம் அது மிக முக்கியம்’ என நினைத்தார் மேரி. அதற்காகவே டேவிட்டிடம் விடுகதைகள் போடுவார், கேள்விகள் கேட்பார், கதைகளைச் சொல்வார். 

பொதுவாகவே கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும், விடுகதைகளுக்கும், புதிர்களுக்கும் உடனுக்குடன் பதில் சொல்லிவிடுவார் மேரி. ஆனால், அவர் டேவிட்டிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு மட்டும் வருடக்கணக்கில் அவனுக்குப் பதில் சொல்லாமல் இருந்தார். அந்தக் கேள்வி... ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ என்பது. கடந்த மூன்று வருடங்களாக அந்தக் கேள்வியை அம்மாவிடம் கேட்டுவருகிறான் டேவிட். ஒவ்வொரு முறையும் அவனுக்கு எது சரி என்றுபடுகிறதோ அந்தப் பதிலைச் சொல்வான். ஒரு முறை அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டபோது, டேவிட்டுக்கு ஓசை என்பது மிக முக்கியம் என்று தோன்றியது. ஓசையை காதுகள் இல்லாமல் கேட்க முடியாதல்லவா? எனவே, ``காதுகள்’’ என்று பதில் சொன்னான். 

தாய் - மகன்

``இல்லடா என் செல்லம். உலகத்துல எத்தனைபேர் கேட்கும் திறன் இல்லாம இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன? இதுக்கான பதிலை யோசிச்சுக்கிட்டே இரு. திரும்பவும் கேட்கிறேன்..’’ என்றார் அம்மா. 

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அப்படி ஒரு கேள்வி அம்மா கேட்டதைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான் டேவிட். ஒரு நாள் திரும்பவும் கேட்டார் அம்மா. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்த முறை நன்கு யோசித்துவிட்டு பதில் சொன்னான்... ``அம்மா... நம்ம எல்லாருக்குமே பார்வை ரொம்ப முக்கியம். அதுனால நம்ம உடம்புல இருக்குறதுலயே கண்ணுதான் ரொம்ப முக்கியமான உறுப்புனு நினைக்கிறேன்...’’ 

மேரி, மகனை உற்றுப் பார்த்தார். ``நீ ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டு வர்றே... நிறைய கத்துக்கவும் செய்யறே. ஆனா, நீ சொன்ன பதில் தப்பு. இங்கே பார்வையில்லாம எத்தனை பேர் இருக்காங்க... அவங்கள்லாம் வாழலையா என்ன?’’ 

அதற்கும் பிறகு மேலும் ஏழு மாதங்கள் கடந்தன. திரும்ப அம்மா அந்தக் கேள்வியைக் கேட்டார். டேவிட் ஏதோ பதில் சொன்னான். அதையும் இல்லையென்று ஆணித்தரமாக மறுத்தார் மேரி. ஆனால், ``நீ புத்திசாலியா வளர்ந்துக்கிட்டே இருக்கே டேவிட்’’ என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறவே இல்லை. 

அந்த வருடம் வீட்டில் ஒரு சோகம்... டேவிட்டின் தாத்தா இறந்து போனார். வீட்டிலிருந்த எல்லாருமே உடைந்து போனார்கள். எல்லோருமே கலங்கி அழுதார்கள். அப்பா, அழுது பார்த்தேயிராத டேவிட், அவர் அழுததை முதன்முறையாகப் பார்த்தான். தாத்தாவுக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு எல்லோரும் வீடு திரும்பினார்கள். அன்று இரவு, டேவிட்டின் அறைக்கு வந்து அவன் தலையை மென்மையாக வருடியபடி அம்மா கேட்டார்.. ``நம் உடலில் இருப்பதிலேயே மிக முக்கியமான உறுப்பு எது?’’ இந்தக் கேள்வியைக் கேட்டு டேவிட் அதிர்ந்து போனான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதுவரை வழக்கமாக அம்மா கேட்கும் கேள்விகளில் ஒன்று என்றுதான் அவன் நினைத்திருந்தான். பதில் சொல்லாமல் அம்மாவையே பார்த்தான். 

``இந்தக் கேள்வி ரொம்ப முக்கியமானதுடா செல்லம். நான் ஒவ்வொரு தடவை இந்தக் கேள்வியை கேட்குறப்பவும் நீ ஒரு பதில் சொல்வே. அது தப்புங்கிறதையும், ஏன் தப்புங்கிறதையும் நான் உனக்குச் சொல்வேன். ஆனா, அந்த முக்கியமான பாடத்தை நீ இன்னிக்கு கத்துக்கிட்டே ஆகணும்...’’ சொல்லிவிட்டு மேரி, டேவிட்டை கருணை பொங்கப் பார்த்தார். அவர் கண்களில் நீர் நிறைந்திருந்தது. பிறகு சொன்னார்... ``மகனே... நம் உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்பு எது தெரியுமா? தோள்கள்...’’ 

நெகிழ்ச்சிக் கதை

``ஏம்மா, நம்ம தலையைத் தாங்கிக்கிட்டு இருக்குறதாலயா?’’ 

``இல்லை கண்ணு... நமக்கு வேண்டியவங்களோ, உறவினர்களோ, நண்பர்களோ துன்பத்துல கண்ணீர் விடும்போது, அவங்களை நம்ம தோள்ல சாய்ச்சுக்கலாம்... அது தாங்கிக்கும். வாழ்க்கையில ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல துன்பம் வரும்போது நம்ம எல்லாருக்குமே சாய்ஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படும். உனக்கு நிறைய நண்பர்களும், உன் மேல அன்பு செலுத்துறவங்களும் இருப்பாங்கனு நான் நம்புறேன். அதாவது உனக்கு ஒரு துன்பம்னா, அதுனால நீ அழுதேன்னா உனக்குத் தோள் கொடுக்க நிச்சயம் சில பேர் வருவாங்கனு நம்புறேன். தோள்கள் அவ்வளவு முக்கியம் டேவிட்...’’ அம்மா, செல்லமாக டேவிட்டின் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே போனார். 

டேவிட் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தான். அதுவரை மூடியிருந்த மேகங்கள் விலக, நிலவு பளிச்சென்று தெரிந்தது.  

*** 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்