வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (26/07/2018)

கடைசி தொடர்பு:11:54 (26/07/2018)

பட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன செய்ய வேண்டும்

பதற்றத்தில், குழந்தையின் முதுகைத் தட்டுவது, வாய்க்குள் விரலைவிட்டு பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்வதெல்லாம் மிகவும் தவறு.

5 வயது ஜஸ்வந்த், தங்கச்சி பாப்பாவோடு விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கிருந்த பொம்மை செல்போனில் இருந்த பட்டன் பேட்டரியை, தங்கச்சி பாப்பா எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறாள். இதைக்  கவனித்துவிட்ட ஜஸ்வந்த் ஓடிச்சென்று அம்மாவிடம் சொல்கிறான். பதறியடித்து ஓடிவந்த அம்மா, பாப்பாவின் வாய்க்குள் விரல்விட்டு, கன்னத்தின் பக்கமாக அதக்கி வைத்திருந்த பேட்டரியை வெளியே எடுத்துவிடுகிறார். கொஞ்சம் தாமதித்து, அந்த பேட்டரியைக் குழந்தை விழுங்கியிருந்தால் என்ன ஆவது? நிம்மதி பெருமூச்சுப் பரவுகிறது.

பட்டன் பேட்டரி

இன்னொரு சம்பவம்... 3 வயது அர்னேஷ், பிளாஸ்டிக் பீப்பி ஒன்றை ஊதிக்கொண்டிருக்கிறான். வாயைக் குவித்து வெளிப்பக்கமாக காற்றை ஊதவேண்டியவன், உள்பக்கமாக இழுத்துவிடுகிறான். அந்தப் பீப்பியில் இருந்த சிறிய அளவு பிளாஸ்டிக் துண்டு, வாய்க்குள் சென்று, தொண்டைக்குள் நுழைந்துவிட்டது. ஒரு நிமிஷம், மூச்சுக்குத் தவித்த குழந்தை, குமட்டலுடன் உடனடியாக வாந்தி எடுத்துவிட்டான். நல்லவேளையாக அந்தச் சின்ன பிளாஸ்டிக் பீப்பி வெளியே வந்துவிட்டது.

மருத்துவர் தனசேகர்``மேலே சொன்ன இரண்டு சம்பவங்களிலும், நல்லவேளையாகப் பெரிய ஆபத்து நேரவில்லை. மற்றபடி, என் அனுபவத்தில் பட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையை அழுதபடியே தூக்கிக்கொண்டு ஓடிவரும் பல பெற்றோர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என வருத்தத்துடன் சொல்கிறார், குழந்தை நல மருத்துவர் தனசேகர் கேசவலு. 

பட்டன் பேட்டரி, சிறிய பிளாஸ்டிக் பொருள்களைக் குழந்தைகள் விழுங்கிவிட்டதைக் கண்டுபிடிப்பது எப்படி? அப்படிக் கண்டுபிடித்த உடனே செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன? விளக்கமாகச் சொல்கிறார். 

எப்படிக் கண்டுபிடிப்பது?

* குழந்தைகளின் மூச்சுக்குழாய் அவர்களின் சுண்டுவிரல் தடிமன் அளவில்தான் இருக்கும். அங்கே பட்டன் பேட்டரியோ, வேறு ஏதேனும் பொருளோ சிக்கிக்கொண்டால், மூச்சுவிடுவதே பெரும் சிரமம். குழந்தைகள் கஷ்டப்பட்டு வித்தியாசமான சத்தத்துடன் மூச்சுவிடுவார்கள். இதை வைத்தே எதையோ விழுங்கியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

* குழந்தைகளின் உணவுக்குழாய்க்குள் ஏதேனும் சிக்கிக்கொண்டிருந்தால், வாயில் வழக்கத்தைவிட அதிகமாக ஜொள்ளு வடியும். உணவை விழுங்கச் சிரமப்படுவார்கள். தொண்டை வலிக்கிறது என்பதை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துவார்கள்.

* பொதுவாக, குழந்தைகள் தங்கள் மூக்கினுள் பேப்பர், காய்கறித் துண்டுகள் அல்லது பட்டாணி போன்றவற்றையே போட்டுக்கொள்வார்கள். மூக்கினுள் போட்டுக்கொண்ட பொருள்கள் அளவில் பெரியதாக இருந்தால், மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். இதை வைத்து நீங்கள் கண்டுபிடித்து விடலாம். மூக்கினுள் போட்டுக் கொண்ட பொருள் சிறியதாக இருந்தால், அது உள்ளேயே தங்கி அழுகிவிடும். இதனால், குழந்தைகளின் சுவாசத்தில் திடீரென அழுகல் வாடை வரும். இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.''

பொம்மைகள்

செய்யவேண்டியவை... செய்யக்கூடாதவை...

``மேலே சொல்லியிருக்கும் மூன்று இக்கட்டான விஷயங்களிலும், உடனே மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று விடுங்கள். பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், போர்செப்ஸ் போன்ற உபகரணத்தைப் பயன்படுத்தியும் குழந்தை விழுங்கியப் பொருளை எடுத்துவிடுவார். இதை விடுத்து, பதற்றத்தில், குழந்தையின் முதுகைத் தட்டுவது, வாய்க்குள் விரலைவிட்டு பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்வதெல்லாம் மிகவும் தவறு. இப்படிச் செய்யும்போது, தொண்டையில் சிக்கிய பொருள் இன்னமும் உள்ளே போய்விடலாம். அப்படி உள்ளே போய்விட்டால் அதை வெளியில் எடுப்பது கடினமாகி விடும். அல்லது மூச்சுக் குழாயைக் கிழித்து விடலாம். இது சம்பந்தப்பட்ட குழந்தைக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்'' என எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் தனசேகர், 

 


டிரெண்டிங் @ விகடன்