திருமணத்துக்குத் தயாராக 5 நிதி ஆலோசனைகள்!

திருமணத்துக்குத் தயாராகிறவர்கள், அதற்கு முன்னர் தங்களது நிதி நிலைமையை இணக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்லும் நிதி ஆலோசகர்கள்...

`திருமணம் முடிந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தொடங்குபவர்களில் பெரும்பாலோருக்கு பிரச்னை எழுவதே நிதிப் பற்றாக்குறையின்போதுதான். எனவே, திருமணத்துக்குத் தயாராகிறவர்கள், அதற்கு முன்னரே தங்களது நிதி நிலைமையை ஸ்திரத்தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்' எனச் சொல்லும் நிதி ஆலோசகர்கள், திருமணத்துக்குப் பின்னரும் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றினால் நிதிச் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டுசெல்லலாம் என்பது குறித்தும் விளக்கி உள்ளனர்.

திருமணம் நிதி ஆலோசனை

1. கடன் பிரச்னை

கடன் பிரச்னைகள் இருந்தால், அவை வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளுக்கு அல்லது மருத்துவம் உள்ளிட்ட இதர முக்கியச் செலவுகளைக்கூட யோசித்து செலவு செய்யவைக்கும் நிலைமைக்குக் கொண்டுசென்றுவிடும். எனவே, திருமணத்துக்கு முன்னர், பர்சனல் லோன் அல்லது கிரெடிட் கார்டு பில் பாக்கி போன்றவை இருந்தால், அவற்றை முழுவதுமாகத் தீர்த்துவிடுங்கள்.

திருமணத்துக்காகப் பர்சனல் லோன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். கடன் பிரச்னை உள்ளவரின் நிலைமையை `சிபில் ஸ்கோர்' காட்டிக்கொடுத்துவிடும் என்பதால், அந்த நபரின் கடன் மதிப்பும், கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் குறைந்துவிடும். இதன் காரணமாக, இவருக்கு இவ்வளவு கடன் கொடுத்தால் இவரால் திருப்பிக் கட்ட முடியுமா என நிதி நிறுவனங்களை யோசிக்க வைத்துவிடும். ஒருவேளை கடன்தொகை மிக அதிகமாக இருந்தால், அது சம்பந்தப்பட்ட நபரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பாதித்துவிடும். மேலும், புதிதாகக் கடன் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுவிடும். இதை, ஒருவர், தன் உறவினர் அல்லது நண்பர்களிடமே, அவர்களது கடனைத் திருப்பித் தரும் பழக்கம் எப்படி உள்ளது என்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதிகமாக கிரெடிட் கார்டுகளைப் பெற்று, எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அதையே பயன்படுத்தும் பழக்கமும் சம்பந்தப்பட்ட நபரை, பெரிய சிக்கலில் மாட்ட வைத்துவிடும்.

பெண்களைப் பொறுத்தவரை, திருமணத்துக்குப் பிறகு இனிஷியல், முகவரி போன்றவை மாறும் என்பதால், வங்கிகள் மற்றும் முதலீடுகளில் கொடுக்கப்பட்ட கே.ஒய்.சி ஆவணங்களில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும். அதேபோன்று `நாமினி' (Nominee) விஷயத்திலும் மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும்.

2. குடும்பத்தினரின் எண்ணிக்கை

பணவீக்கம் அதிகமிருக்கும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தால், அதனால் வருகிற நிதிப் பிரச்னைகளும் அதிகமாகவே இருக்கும். குடும்பம் பெரிதாக இருந்தால், செலவுகளும் அதிகமாகவே இருக்கும். அதேசமயம் குடும்பத்தினரையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதுபோன்ற நிலை இருந்தால், திருமணம் செய்துகொள்ள இருப்பவர் திருமணத்துக்கு முன்னரே தன் வருங்கால வாழ்க்கைத்துணையுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து, அதற்கேற்ற நிதித் திட்டத்தைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். சில திடீர் செலவுகளையெல்லாம் தவிர்க்கவே முடியாது. எனவே, அப்படியான செலவுகளை எதிர்கொள்ள, முன்கூட்டியே அதற்கான திட்டமிடலை வகுத்துக்கொள்ள வேண்டும்.

சேமிப்பு

3. நிதி ஒழுக்கம்

நிதி விவகாரத்தில் ஒழுக்கமான ஒரு நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். இஷ்டத்துக்குச் செலவுசெய்கிற பழக்கம் கூடாது. அதிகமாகச் செலவு செய்வதால் சேமிப்புக்கு பாதகம் ஏற்படுவது மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட நபர் கடன் சிக்கலில் சிக்கிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. அத்தகைய நிலையில், வீண்செலவுகள் செய்து மனம் வருந்தும்போது நிலைமை கைமீறிப்போயிருக்கும். எனவே, திருமணத்துக்கு முன்னரே செலவுசெய்வதில் ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதோடு, அதை வாழ்க்கைத்துணையாக வருபவரிடமும் எடுத்துச் சொல்லி, அவரையும் தயார்ப்படுத்த வேண்டும். விலை உயர்ந்த ஆடைகள், பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக டிவி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை அளவில் பெரிதாக வாங்குவது, சினிமா தியேட்டர், மால்களில் ஷாப்பிங் எனப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகம் செலவிடுவது போன்றவற்றைத் தவிர்ப்பதோடு, வாழ்க்கைத்துணையிடமும் இதை வலியுறுத்த வேண்டும்.

4. வருவாய் ஆதாரம்

மற்ற எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது வருவாய் ஆதாரம். அதாவது, ஒரு பெண்ணுக்கு மணமகன் தேடும் பெற்றோர், அந்த நபர் நிலையான வருமானம் ஈட்டும் பணியில் இருக்கிறாரா எனப் பார்ப்பார்கள். எனவே, திருமணத்துக்கு முன்னர், நிலையான வேலையில் இருப்பது அவசியமான ஒன்று. மனைவி வேலைக்குச் செல்லாதவராக இருந்தால், சில நேரத்தில் கூடுதல் வருமானத்துக்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைக்குச் செல்பவராக இருந்தால் திருமணத்துக்குப் பிறகு, வேலைக்குச் செல்ல விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை சொந்த தொழில் அல்லது பிசினஸ் செய்துவந்தால், தற்போதைய நிலையில் அது எந்த நிலையில் சென்றுகொண்டிருக்கிறது, திருமணத்துக்குப் பிறகு, குடும்பத்தை நடத்திச் செல்லக்கூடிய வருவாய் தொடர்ந்து கிடைக்குமா போன்றவற்றையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

5. நிதி பின்புலம்

திருமணம் செய்துகொள்ளப் போகிறவருக்கு, கணிசமான பேங்க் பேலன்ஸ், நிலம், வயல் அல்லது கூடுதலான வீடு போன்ற சொத்துகள் இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். அப்படி இருந்தால், அது வாழ்க்கையை சுமுகமாக நடத்திச் செல்ல உதவும். எனவே, திருமணத்துக்குப் பிறகான தேவைகள் மற்றும் செலவுகளுக்கு, திருமணத்துக்கு முன்னரே குறிப்பிட்ட பணம் அல்லது சொத்து போன்றவற்றைச் சேமித்துக்கொள்வது நல்லது.

பேங்க் பேலன்ஸ்

நிதி விவகாரங்களில், வாழ்க்கைத் துணையிடம் ஒளிவு மறைவு கூடாது. அப்படி இருந்தால் திருமணத்துக்குப் பிறகு, நிதி சார்ந்து ஏற்படும் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம். ஒருவேளை, ஏதாவது கடன் சிக்கல் ஏற்பட்டாலும்கூட அதைத் தைரியமாக எதிர்கொண்டு, வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் சிக்கலில் இருந்து மீள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!