சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்! | Sugar beet car with flanx coating... Netherland's green car

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (26/07/2018)

கடைசி தொடர்பு:17:13 (26/07/2018)

சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்!

இந்த ஃபைபர்கள் நானோ அளவுக்கு மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகம். ஆனால், அவற்றின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

சக்கரவள்ளிக் கிழங்கில் கார் செய்து அசத்திய நெதர்லாந்து மாணவர்கள்!

2015-ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செலுகாம்ப் (Cellucomp) என்ற நிறுவனம் நிலத்துக்கடியில் வேரோடு விளையும் காய்களை வைத்துத் தயாரிக்கும் ஃபைபர் (Fibre) கார்பன், சாதாரண ஃபைபர்களைவிட உறுதியானதாக இருக்குமென்றது. அவர்கள் தயாரிக்கும் அத்தகைய ஃபைபர்கள் ஒருநாள் விமான இறக்கைகளாகக்கூட வடிவமைக்கப் படலாமென்று நம்பிக்கையாகக் கூறியது.

முதலில் அவர்கள் நிலத்தடி விளைபொருள்களில் காரட் (Carrot) போன்றவற்றையே பயன்படுத்தினர். டாக்டர் டேவிட் ஹெப்வொர்த் மற்றும் டாக்டர் எரிக் வேல் (Dr. David Hepworth and Dr. Eric Whale) என்ற இரண்டு விஞ்ஞானிகளே இந்த முறையை முதலில் கண்டுபிடித்தனர். இந்த ஃபைபர்களை வைத்து மீன்பிடித் தூண்டில்கள் போன்ற சின்னச் சின்னப் பொருள்களை தயாரித்துக்கொண்டிருந்தது செலுகாம்ப் நிறுவனம். பிறகு பெயின்டிங், கோட்டிங் (Coating) போன்ற துறைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஃபைபர்கள் மிக நுண்ணிய தாதுப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் உறுதி எவ்வளவு அதிகமாக இருந்தாலும், எடை மிகக் குறைவாகவே இருக்கும். இதற்கு அவற்றிலிருக்கும் நானோ தாதுக்களே காரணம். அத்தோடு தேவையான பாகுத் தன்மையைக் (Viscosity) கொடுத்து உராய்வுகளை எளிமையாக்குகிறது. இந்த ஃபைபர்களை வைத்து வருங்காலத்தில் நாங்கள் விமான இறக்கைகளைக்கூட வடிவமைப்போமென்று கூறியது செலுகாம்ப் நிறுவனம். இப்படிச் சொல்லிவிட்டு மீன்பிடித் தூண்டில்களைத் தயார் செய்துகொண்டிருந்தது. அவர்கள் அதைக் கூறிய அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே நெதர்லாந்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அந்த வகை ஃபைபரை வைத்து காரே தயாரித்துவிட்டனர்.

லீனா

Photo Courtesy: TU/ Ecomotive

அவர்களைவிட இவர்கள் சிறிது முன்னோக்கிச் சென்று சக்கரவள்ளிக் கிழங்கைப் பயன்படுத்தினர். காரட்டைவிடச் சக்கரவள்ளிக் கிழங்கு சுக்ரோஸ் (Sucrose) என்ற ஒருவகைச் சக்கரையை அதிகமாகத் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்தியுள்ளார்கள். 

சக்கரவள்ளிக் கிழங்கில் கார்? இது உண்மையில் சாத்தியமா?

சாத்தியமாக்கியுள்ளார்கள், நெதர்லாந்தின் எய்ந்தோவென் பல்கலைக்கழக (Eindhoven University) மாணவர்கள். அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் எக்கோமோடிவ் (Ecomotive) துறையைச் சேர்ந்தவர்கள். அது சுற்றுச்சூழலோடு இயைந்த வகையிலான ஆட்டோமோடிவ் (Automotive) துறை.

அவர்கள் சக்கரவள்ளிக் கிழங்கிலிருந்து எடுக்கப்பட்ட பிசினைப் பயன்படுத்தி கார்களுக்கான வெளிப்புறப் பாகங்களைத் தயாரித்துள்ளார்கள். அந்தக் கிழங்கில் அதிகமான சுக்ரோஸ் இருப்பதால் அதிலிருந்து எடுக்கப்படும் பிசினில் அதிகமான நானோ தாதுப்பொருள்கள் (Nano Cellulose) இருக்கும். அது மிக உறுதியான மிகக் குறைவான எடைகொண்ட பாகங்களை உருவாக்க அவர்களுக்கு உதவியுள்ளது. சக்கரவள்ளிக் கிழங்கின் பிசின் மூலம் தயாரித்த ஃபைபர்களை வைத்து கார் வெளிப்புறப் பாகங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்கள் ஆளி விதைப் பிசின்களால் மேற்புறம் கோட்டிங் செய்துள்ளனர். பாகங்களில் உறுதி மற்றும் அழகான கட்டமைப்பு இரண்டுமே கிடைப்பதற்கு, கார் பாடி (Car's Body) பேனல்களைத் தேனீக் கூடுகளைப் போன்ற அமைப்பில் வடிவமைத்து அதற்குமேலாக ஆளிப் பூச்சு பூசியுள்ளனர்.

பசுமைக் கார்

Photo Courtesy: TU/ Ecomotive

காரின் மேற்புறப் பாகங்கள் முழுவதையும் பல்வேறு உட்புறப் பேனல்களாக அமைத்து உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் அவற்றின் உறுதியை அவர்களால் அதிகமாக்க முடிந்துள்ளது. காரின் அடிப்பீடத்தை (Chassis) அலுமினியத்தில் செய்துள்ளார்கள். சஸ்பென்சன் (Suspension), முன்புற பின்புற பிரேக்குகள் என்று உட்புறப் பாகங்கள் அனைத்தும் வழக்கம்போலவே சாதாரணமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மின் சக்தியால் இயங்கக்கூடிய இந்த காரின் உட்புறப் பாகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துமே இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டவை. அதிலிருக்கும் மூன்று லித்தியம் பாட்டரிகள் இரண்டு மோட்டார்களை இயங்கவைத்து கார் இயங்குவதற்கான மின்சாரத்தைக் கொடுக்கிறது.

லீனா (Lina) என்று அந்த மாணவர்களால் பெயரிடப்பட்டுள்ள அந்த காரின் எடை வெறும் 310 கிலோ மட்டுமே. ஒருமுறை சார்ஜ் செய்தால் 62 மைல்கள் வரை ஓடும். கார்களில் மிகக் குறைவான எடையுடைய நிஸானின் லீஃப் (Nissan Leaf) என்ற காரைவிடக் குறைவான எடை கொண்டுள்ளது லீனா. அது ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 மைல்கள் வரை ஓடக்கூடியது. ஆனால், லீனாவால் அதில் பாதி மட்டுமே ஓடமுடியும். இருப்பினும் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் காரோடு ஒப்பிடும் தரத்துடன் ஒரு சில கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளார்கள் என்பது பிரமிப்பூட்டக்கூடியதே.

நான்கு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் லீனாதான் உலகின் முதல் பசுமை கார். இவர்கள் உட்புறப் பாகங்களைத் தவிர அனைத்தையும் மக்கும் பொருள்களை வைத்தே தயாரித்துள்ளார்கள். இவர்களின் இந்த முறையே வருங்காலமாகக்கூட மாறலாம். மின்சக்தியால் இயங்கும் பாட்டரி கார்கள் வருங்காலத்தில் விலை குறைவாகவும் எளிதில் வாங்கக்கூடியதாகவும் மாறும்போது அனைவராலும் விரும்பக்கூடிய வகையில் லீனா போன்ற மக்கும் கார்கள் சந்தைகளில் அதிகம் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சக்கரவள்ளிக் கிழங்கு, ஆளி போன்றவற்றால் தயாரிக்கக்கூடிய மக்கும் பொருள்கள் கார் தயாரிப்பில் எளிமையாக உள்ளது.

கார் தயாரிப்பாளர்கள் எடை குறைவான அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர்களையே பயன்படுத்துகிறார்கள். அதைவிட எளிமையான மூலப்பொருள்கள் கிடைத்தால் அதற்கு மாறிவிடுவார்கள். ஆனால், அது தரமிக்கதாகவும், இப்போதைய காரின் வேகம் மற்றும் செயற்பாட்டில் சிறிதும் குறைவில்லாத வகையிலும் இருக்கவேண்டும். அப்போது நெதர்லாந்து மாணவர்கள் தயாரித்த சக்கரவள்ளிக் கிழங்கு கார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.

நெதர்லாந்து

Photo Courtesy: TU/ Ecomotive

இதை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இயற்கைப் பொருள்களைப் பதனம் செய்து கார் தயாரிப்பதற்கு ஏற்றவாறு மாற்றுவது பல கட்ட பணிகள் அடங்கியது. இப்போதிருப்பதைவிட இது கார் தயாரிக்கும் நேரத்தைவிட ஆறு மடங்கு அதிகப்படுத்தும். அத்தோடு தற்போதிருக்கும் உலோகங்களைப் போல இயற்கைப் பொருள்கள் கார் உற்பத்தித் தேவைக்கு நிகராகக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இவற்றைவிட முக்கியமான குறைபாடு ஒன்று உண்டு. இப்போதைய கார் தயாரிக்கும் பொருள் களை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், மக்கும் பொருள்களைப் பயன்படுத்தி கார் தயாரித்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இது தயாரிப்புச் செலவை மேலும் அதிகப்படுத்தும்.

இரும்பை மட்டுமே மூலப்பொருளாக வைத்து கார்களைத் தயாரிப்பதிலிருந்து மாற்றமடைந்து பல்வேறு உலோகங்களைத் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த மக்கும் கார் தற்போது ஒரு வித்தியாசமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அதனால், எதிர்காலத்தில் பசுமைக் கார்களும் சந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்