வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (28/07/2018)

கடைசி தொடர்பு:18:01 (28/07/2018)

பார்வை இழந்த யானைக்காக வாசிக்கப்படும் பியானோ இசை... யானையின் ரியாக்‌ஷன்?

யானைகள் உலகத்திலேயே இருக்கிற பார்டோன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் லாம் டுவான் யானைக்கு பியானோ வாசிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் அங்கிருந்த மற்ற யானைகளுக்கும் வாசிக்க ஆரம்பித்தார். எல்லா யானைகளும் பியானோவின் இசைக்கு ஏற்ப நடனமாட ஆரம்பிக்கின்றன.

பார்வை இழந்த யானைக்காக வாசிக்கப்படும் பியானோ இசை... யானையின் ரியாக்‌ஷன்?

ண் தெரியாதவர்களுக்கு மனிதன் எப்படியெல்லாம் உதவுவான் எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து க்ரோஷியா அணிகள்  விளையாடிய போட்டியில் கண் தெரியாத ஒருவருக்கு அவருடைய சகோதரர் ஒருவர் கள நிலவரத்தை அப்படியே அப்டேட் செய்து கொண்டிருந்தார். கண்கள் இல்லையென்றால் என்ன, விளையாட்டின் பரவசத்தை அந்த வார்த்தைகளால் உணர்ந்தார். உலகக் கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருந்த அதே நாட்களில் தாய்லாந்தில் ஒருவர் கண் தெரியாத யானைக்கு பியானோ வாசித்திருக்கிறார். 

1900 ஆண்டின் தொடக்கத்தில் தாய்லாந்தில் 100000 யானைகளுக்கு மேலாக இருந்திருக்கின்றன. ஆனால் இன்று மொத்தமே 5000 யானைகள் மட்டுமே இருக்கின்றன. வேட்டையாடுவது மற்றும் காடுகள் அழிப்பின் மூலமாக மட்டும் 90 சதவிகித யானைகளை தாய்லாந்து இழந்திருக்கிறது. இருக்கிற யானைகளைக் காப்பாற்ற தாய்லாந்து அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. இந்த நிலையில் விலங்குகள் நல மருத்துவராகப் பணிபுரிந்த  சாம்ராட் என்பவர் 2008-ம் ஆண்டு தாய்லாந்தின் காஞ்சனபுரியில் 'யானைகள் உலகம்' என்கிற ஓர் இடத்தை நிறுவினார். அங்குக் காயம்பட்ட யானைகள் மற்றும் உடல் நலிவுற்ற யானைகளுக்கு சிகிச்சையளித்து பாதுகாக்கப்பட்டன. சிறிய அளவில் தொடங்கப்பட்ட யானைகள் உலகத்தில் இப்போது அங்கு சுமார் 30 யானைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. 

யானைகள் உலகம்

PHOTO: CATERS NEWS AGENCY 

தாய்லாந்து நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான Koh Samui என்கிற தீவில் லாம் டுவான் (Lam Duan) என்கிற யானை இருந்தது. 1956-ம் ஆண்டு பிறந்த லாம் டுவான் யானையை Theerasak Thongpat என்பவர் வளர்த்து வந்தார். அவர் 30 வருடங்களாக யானையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். யானை அவரிடம் இருந்த 20 ஆண்டுகள் மரம் தூக்குவதற்கும், இன்னும் பல கடுமையான பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1989-ம் ஆண்டு  தாய்லாந்து அரசு யானைகளை வைத்து எந்தக் கடுமையான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை போட்டது. அதன் பிறகு லாம் டுவான் சுற்றுலா பயணிகளை ட்ரெக்கிங் அழைத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் கடுமையான பணிகளைச் செய்த லாம் டுவான் யானைக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக அதன் உரிமையாளர் Theerasak Thongpat யானையை, யானைகள் உலகத்திற்குக் கொடுக்க முன் வந்தார். அப்படி யானைகள் உலகத்திற்கு 2012 ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி லாம் டுவான் கொண்டு வரப்பட்டது.

யானை கொண்டுவரும் பொழுது மிகவும் சோர்ந்து போய் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமொன்று இருக்கிறது. யானைக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. யானைகள் உலகத்தில் பராமரிக்கப்படும் எல்லா யானைகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவை. அவற்றை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக மாற்றவேண்டும் என்பதற்காக யானைகள் உலக ஊழியர்கள் பல வழிகளிலும் பணியாற்றினர். Nasuyo என்கிற பெண் ஒருவர் லாம் டுவான் யானைக்கு மாவூத்தாக நியமிக்கப்பட்டார். அவர் அதிக கவனமெடுத்து லாம் டுவானை பார்த்துக்கொண்டார். யானையை கவனித்துக் கொள்ளும் பொழுது சில பாடல்களைப் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். யானை பாடல் பாடும் பொழுது வழக்கத்திற்கு மாறாக இலகுவாக இருப்பதை உணர்ந்தார். இந்தத் தகவலை யானைகள் உலகத்தில் பியானோ வாசிக்கிற ஒருவரிடம் தெரிவிக்கிறார். அவரது பெயர் பார்டோன் (Barton) உடனே யானை இருந்த இடத்தில் பியானோவை கொண்டு சென்று யானைக்கு முன்பு பியானோவை வைத்து வாசிக்க ஆரம்பிக்கிறார். பியானோவின் இசையை உள்வாங்குகிற லாம் டுவான் யானை இசைக்கு ஏற்ப தலையையும், உடலையும் அசைத்து நடனமாடுகிறது. சோர்வாகக் காணப்பட்ட யானை பியானோ வாசிக்கும் பொழுதெல்லாம் இலகுவாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக பியானோ வாசிக்கிற பார்டோன் தெரிவிக்கிறார். 

பியானோ வாசிக்கும் பார்டோன்

PHOTO: CATERS NEWS AGENCY 

யானைகள் உலகத்திலேயே இருக்கிற பார்டோன் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் லாம் டுவான் யானைக்கு பியானோ வாசிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் அங்கிருந்த மற்ற யானைகளுக்கும் வாசிக்க ஆரம்பித்தார். எல்லா யானைகளும் பியானோவின் இசைக்கு ஏற்ப நடனமாட ஆரம்பிக்கின்றன. இப்பொழுது முழு நேரமாக யானைகள் உலகத்தில் இருக்கிற யானைகளுக்கு பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறார். அது குறித்த காணொளிகளை YOUTUBE-ல் பதிவேற்றியிருக்கிறார். கடைசியாகக் கடந்த வாரம் கண் பார்வை இழந்த லாம் டுவான் யானைக்கு இசைக்கும் காணொளியை தன்னுடைய YOUTUBE பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது வைரலாக இணையத்தில் சுற்றி வருகிறது...

லாம் டுவான்  என்கிற பெயருக்கு "Tree with Yellow Flowers" என்று பொருள்.


டிரெண்டிங் @ விகடன்