எந்த நாட்டில் எத்தனை புலிகள்? சர்வதேச புலிகள் தினம் ஏன்? #VikatanData | 115 Tiger deaths per year in India ... International Tiger Day

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (29/07/2018)

கடைசி தொடர்பு:10:26 (30/07/2018)

எந்த நாட்டில் எத்தனை புலிகள்? சர்வதேச புலிகள் தினம் ஏன்? #VikatanData

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. மணிக்கு 49 லிருந்து 65 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும். சிங்கத்தைக் கூட தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தது புலி.

எந்த நாட்டில் எத்தனை புலிகள்? சர்வதேச புலிகள் தினம் ஏன்? #VikatanData

காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும், வனத்திற்குள் கம்பீரமாக தனி நடை போட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. உணவுச் சங்கிலியில் முக்கிய இனமாகக் கருதப்படுகிறது. புலிகளைக் கூட்டம் கூட்டமாகக் காண்பது மிகவும் அரிது. புலிகள் ஒரு தனிமை விரும்பி. அதிலும் முக்கியமாக ஆண் புலி பெரும்பாலும் தனியாகத்தான்  வேட்டையாடும். புலிகள் மரம் ஏறும். நீச்சல் அடிக்கும். வேட்டை ஆடுவதில் புலிகளை மிஞ்ச முடியாது. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி. 

நம் முன்னோர்கள் புலிகளை நேரடியாகப் பார்த்திருப்பார்கள். தற்போதைய காலத்தில், காடுகளிலோ, புல்வெளிகளிலோ நேரடியாகப் புலிகளை பார்த்தவர்கள் மிகவும் அரிது. டி.வி. சேனல்களிலும், மிருகக் காட்சி சாலைகளிலும் நாம் புலியைப் பார்க்கிறோம். இனி வரும் சந்ததியினர் மிருகக் காட்சி சாலைகளிலாவது புலிகளைப் பார்க்க முடியுமா என்றால், கேள்விக் குறிதான்.

புலிகள்

உலகம் முழுவதும் 1900-களில் புலிகளின் எண்ணிக்கை  சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது. எனவே 2000-களில் புலிகளின் எண்ணிக்கை 3000-4000 ஆக மாறிவிட்டது. தற்போதைய காலத்தில் எடுத்துக் கொண்டால் உலகிலேயே புலிகள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலிகளில் 60% புலிகள் இந்தியாவில் உள்ளன. 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 2016ல் அதன்  எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 3,890 புலிகள் உள்ளன. 

இந்தியாவில் மட்டும் 2,226 புலிகள் உள்ளன. இந்தியாவுக்கு அடுத்து அதிகளவு புலிகள் உள்ள நாடு ரஷ்யா (433). இவை தவிர இந்தோனேஷியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, பங்களாதேஷில் 106, பூடானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாவோஸ் நாட்டில் வெறும் 2 என்ற விதத்தில் புலிகள் எண்ணிக்கை இருந்து வருகிறது.

 

 

 

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி புலிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் வசிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 229 புலிகள் உள்ளன. 2006ம் ஆண்டுக் கணக்கின்படி வெறும் 76 புலிகள்தான் தமிழகத்தில் இருந்தன. இதுவே 2010ம் ஆண்டு 163 ஆக அதிகரித்தது. தற்போது 229 ஆக உள்ளது.  

இந்தியாவில் புலிகளின் பாதுகாப்புக்காக 49 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர்- ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்தான் மிகப் பெரியது. சுமார் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு மேல், இந்தக் காப்பகம் அமைந்துள்ளது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கேஎம்டிஆர் என அழைக்கப்படும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தான் தமிழகத்தின் முதல் புலிகள் சரணாலயம்.  இந்தச் சரணாலயம் 1988-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுமார் 895 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தச் சரணாலயத்தில் மட்டும் 14 நதிகள் சிறியதும் பெரியதுமாக ஓடுகின்றன. நதிகளின் சரணாலயம் என்றும் இது அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கடந்த 2009-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

20 லிருந்து 26 வருடங்கள் வாழும் புலிகள், சுமார் 70 லிருந்து 120 செ.மீ வரை உயரம் கொண்டவை. இவற்றின் எடை ஆண் புலிகளுக்கு 90 லிருந்து 310 கிலோவும், பெண் புலிகளுக்கு 65 லிருந்து 170 கிலோவும் இருக்கும். 16 வாரங்களில் கர்ப்பகாலம் முடிந்து 2 லிருந்து 6 குட்டிகள் வரைப் போடும்.  மணிக்கு 49 லிருந்து 65 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும். 10 மீட்டர் வரை உயரம் தாண்டும்.  சிங்கங்களைப் போன்று கூட்டமாக வேட்டையாடாமல் தனியாகவே வேட்டையாடும். ஒரே நேரத்தில் பதினெட்டு கிலோ எடை இறைச்சியை உண்ணும். அதிக நாட்கள் பசி தாங்கும். சிங்கத்தைக் கூட தோற்கடிக்கும் ஆற்றல் படைத்தது புலி. மனிதனை விட 6 மடங்கு கூர்மையான ஆற்றல் கொண்ட புலிக்கு 30 மைல் சுற்றளவை தனது எல்லையாக எடுத்துக்கொண்டு வாழும். அவற்றின் எல்லைக்குள் வேறொரு புலி வந்தால் அண்ணன் தம்பி வரப்பு பிரச்னை போன்று வெடித்து விடும்.

 

 

உலகம் முழுவதும் சுமத்ரான், சைபீரியன், மலேசியன், காஸ்பியன், ஜவான், பாலினீஸ், பெங்கால், இந்தோசீனா, தென்சீன புலிகள் என்று 9 வகையான புலிகள் இருந்தன. அதில் ஜவான், காஸ்பியன், தென்சீன புலி வகை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. சுமத்ரான் வகை புலிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. உலகிலேயே இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் "ராயல் பெங்காலி புலிகள்" என அழைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 93% புலிகள் அழிந்துவிட்டன. 

புலி

காலம் செல்ல செல்ல, புலிகள் அழிந்து கொண்டே வருவதால், புலிகள் இனத்தைப் பாதுகாப்பதற்காகவே, பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி 2010-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொர் ஆண்டும் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இருந்தும் உலகம் முழுவதும் தற்போது 3,890 புலிகளை மட்டுமே விட்டு வைத்திருக்கிறோம்.

இந்தியாவில் மட்டும் கடந்த 2016ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாத காலகட்டத்தில் 74 புலிகள் இறந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்திலும் 5 புலிகள் இறந்துள்ளன. அதேபோல், 2017ம் ஆண்டில் இந்தியாவில் 115 புலிகள் இறந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் 28 புலிகளும், மகாராஷ்டிராவில் 21 புலிகளும், அசாமில் 16 புலிகளும் இறந்துள்ளன. இந்த 3 மாநிலங்களில் தான் அதிகளவில் புலிகள் இறக்கின்றன. இந்தியாவில் 49 காப்பகங்கள் இருந்தும் புலிகள் அழிந்து போவதை பெரும்பாலும் தடுக்கவே முடியவில்லை. 

இந்தியாவில் அழிந்துவரும் புலியை பாதுகாப்பதற்காக மத்திய அரசு 1970ம் ஆண்டு புலிகளை வேட்டையாடுவதைத் தடை செய்தது. வேட்டையாடுபவர்களுக்கு அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனையும் வழங்கி வருகிறது. மேலும், 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டமும்  மேற்கொள்ளப்பட்டது. 

புலி

 

உலகளவில் "Animal Planet" சேனல் நடத்திய வாக்கெடுப்பில் உலகின் மிகப் பிடித்தமான விலங்காகப் புலி வெற்றி பெற்றது. வெளித்தோற்றத்திற்கு மட்டும் மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் பழகுவதற்கு அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்டதாகப் புலிகள் இருப்பதால் அதுவும் நம்மைப் போன்றதே என்று உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின் கூறுகிறார்.

மனிதர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கைவிரல் ரேகை வித்தியாசப்படுத்திக் காட்டுவது போல், புலிகளின் கால் விரல் ரேகைகள் ஒவ்வொரு புலிக்கும் இடையேயும் பல்வேறு வித்தியாசத்தைக் காட்டும். மனிதர்களின் சுகாதாரமான வாழ்க்கைக்குச் சுத்தமான காற்றும் நீரும் அவசியம். அவை இரண்டையும் தருவது காடுகளே. அந்த காடுகளைக் காக்க உதவும் புலிகளை நாம் பாதுகாக்க வேண்டும். புலிகளைப் பாதுகாக்க அரசு மட்டும் இல்லாமல் அவர்களுடன் நாமும் இணைந்து விழிப்புஉணர்வை உண்டாக்கினால் புலிகளின் அழிவை மட்டுமின்றி, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்