வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (30/07/2018)

கடைசி தொடர்பு:12:07 (30/07/2018)

`பப்பி லவ், டான்ஸ் லவ், சீரியஸ் லவ்'... திருநங்கை கல்கியின் ஆட்டோகிராப்! #Transgender

``காதல் ஒருமுறை வருவதா? சினிமாவில்தான் காதல் ஒருமுறை வரும், எனக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே லவ் வந்திருக்கிறது."

காதல்... மானுட சமூகம் தன் இலக்கியங்களில், ஓவியங்களில், இசையில் கொண்டாடித் தீர்த்த பாடுபொருள். நம் எல்லோருக்கும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் எப்படி இருக்கும் என்று தெரியும். ஆணுக்கும் ஆணுக்குமான, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான, திருநங்கையின் காதல் எப்படி இருக்கும் தெரியுமா? அது,  சமூகம் வகுத்துள்ள ஸ்டாண்டர்ட் காதலைவிட மிக அழகாக இருக்கிறது. நாம் பதிவுசெய்ய மறந்த இவர்களின் காதலைக் குறித்து திருநங்கை கல்கி சுப்ரமணியம் சொல்கிறார்.

திருநங்கை

``காதல் ஒருமுறை வருவதா? சினிமாவில்தான் காதல் ஒருமுறை வரும், எனக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே லவ் வந்திருக்கிறது. என்னுடன் படிச்ச சுகுமாரை, ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவனை ரொம்ப பிடிக்கும் என்பதாலே அவனுடன் ரொம்ப சண்டை போடுவேன். நான் சண்டை போடறதா அவன் வீட்ல போய் சொல்லுவான். அவன் அம்மா, அவனை இடுப்புல தூக்கிவெச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு வருவாங்க. 'ஸ்கூலுக்கு வரமாட்டேங்கறான்' எனச் சொல்லி இடுப்பிலிருந்து இறக்கி விட்டுட்டு போவாங்க. எனக்குச் சிரிப்பா வரும். (சிரிக்கிறார்). அவனை ரொம்ப கிண்டல் பண்ணுவேன் ‘நீ என்ன பச்சைக் கொழந்தையா? அம்மா இடுப்புல தூக்கிவெச்சுட்டு வர்றாங்க’னு கேட்டதும் அழுவான். அதைப் பார்த்ததும் பாவமாயிருக்கும். அப்போ நானும் குட்டியா இருப்பேன். அவனும் குட்டியா இருப்பான். அவனுக்கு சுருள் சுருளா முடி. மலங்க மலங்க முழிப்பான். `ஐயோ பாவம்’னு தோணும். லவ்ன்னா என்னான்னு தெரியாது. ஆனா, என்னோட பப்பி லவ்ன்னா அது அவன்தான். 

அப்புறம், நான்காம் வகுப்பு படிக்கும்போது, ராமச்சந்திரன் என்ற பையனுடன் லவ் ஆச்சு. அப்போ என்னுடன் இன்னொரு திருநங்கையும் படிச்சாள். அவளுக்கும் அவன் மேலே லவ்வு. ஆனால், அவனுக்கு எங்க ரெண்டு பேர் மேலேயும் லவ் கெடையாது. எனக்கும் அவளுக்கும் என்ன போட்டின்னா, அவனுக்கு எங்களில் யாரைப் பிடிக்கும்ன்னு. `என்னைத்தான் அவனுக்குப் பிடிக்கும்’னு அவள் சொல்வாள். நானோ, `என்னைத்தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும், உன்னைவிட நான்தான் நல்லா படிக்கிறேன்’னு சொல்வேன். அவள் சண்டைக்கு வந்துட்டாள். `சரி வா! அவன்கிட்டயே கேட்கலாம்’னு இன்டர்வெல் நேரத்தில் அவனை வழிமறிச்சு நின்னோம்.

`இராமச்சந்திரா! உனக்கு அவளைப் பிடிக்குமா? என்னைய புடிக்குமா?’னு கேட்டேன். அவன் ‘ஏ! போங்க அந்தப் பக்கம். என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க! அப்புறம் அம்மாவைக் கூட்டிவருவேன். கம்ப்ளைன்ட் பண்ணுவேன்’னு சொல்லிட்டான். நாங்களோ, `டேய், உனக்கு யாரைப் பிடிக்கும்? சொல்லு, சொல்லு’னு ரொம்ப தொந்தரவு பண்ணினோம். அதனால், எங்களைக் கண்டாலே ஓடுவான். எங்க ரெண்டு பேருக்கும் பயங்கர போட்டி ஆகிருச்சு. என்னைத்தான் அவனுக்குப் பிடிக்கும்ன்னு ப்ரூப் பண்ண நினைப்பேன். அவளும் அப்படியே நினைப்பாள். ஒரு நாள், `இன்னைக்கு இந்த ராமச்சந்திரன விடக்கூடாதுடீ! அவன்கிட்ட கேட்டே ஆகணும். ஒண்ணு செய்யலாம், ரெண்டு பெரும் அவன் முன்னாடி பரதநாட்டியம் ஆடலாம். யாரோட டான்ஸ் அவனுக்குப் பிடிக்குதோ, அவளைத்தான் அவனுக்குப் பிடிக்கும்'னு சொன்னேன். சாயந்திரம் 4 மணிக்கு பெல் அடிச்சதும், ராமச்சந்திரன் பெட்டி தூக்கிட்டு, அப்போ அலுமினியப் பெட்டி இருக்குமில்ல? அதைத் தூக்கிட்டு கெளம்பினான். 

காதல்

நாங்க ராமச்சந்திரனை வீட்டுக்குப் போகவிடலை. `வாட டேய் வாட டேய்'னு, இரண்டாம் வகுப்புக்கு இழுத்துட்டுப் போனோம். அவன் அழ ஆரம்பிச்சுட்டான். ‘வாய மூடுடா! எதுக்குடா அழறே? உட்காருடா! நாங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடறோம், பார்த்துட்டு யார் டான்ஸ் நல்லா இருக்குன்னு சொல்லுடா’னு ஆட ஆரம்பிச்சுட்டோம். அவனோ, 'ஓ....'னு அழறான். ‘எனக்கு வீட்டுக்குப் போகணும். விடுங்க விடுங்க. என் அம்மாவை கூட்டிட்டு வரேன், ஹெச்.எம்கிட்ட மாட்டிவிடறேன், அடி வாங்கித் தரேன்’னு அழறான். `அப்படியெல்லாம் சொல்லாதடா, எங்க டான்ஸைப் பாருடா’னு தொடர்ந்து ஆடறோம். அவன் எங்க டான்ஸைப் பார்க்கவே இல்லே. அழுதுட்டே இருக்கான். பயங்கர கடுப்பாகிடுச்சு. `ச்சீ! இவனுக்கு ஒரு ரசனையும் கிடையாதுடீ! டான்ஸையே ரசிக்க மாட்றான், ரொம்ப அழுமூஞ்சியா இருக்கான். எனக்கு இவன் வேண்டாம், எனக்குப் புடிக்கலை. நீயே லவ் பண்ணிக்கோ’னு சொல்லிட்டேன். அவள் என்ன நெனைச்சாளோ, ‘ச்சீ! நீ வேண்டான்னு சொன்ன பிறகு எனக்கு மட்டும் என்ன? அவன் எனக்கும் வேணாம். டேய்! நீ கெளம்புடா வீட்டுக்கு!’னு சொல்லிட்டா. (சிரிக்கிறார்) அழுது அழுது மூக்கிலிருந்து அவனுக்கு வடியுது. `இரு, இரு நாளைக்கு அம்மாவைக் கூட்டிட்டு வரேன்’னு சொல்றான். ‘டேய் ப்ளீஸ்டா! அம்மாவை கூட்டிட்டு வந்துறாதே’னு கெஞ்சறோம். அவன் அழுதுட்டே போய்ட்டான். அதோடு, அந்த லவ்வுக்கு ஃபுல் ஸ்டாப். ரெண்டுமே பப்பி லவ், ஸ்கூல்லே நடந்தது.

வளர்ந்து நான் முழு திருநங்கையா வெளியில் வர்றதுக்கு முன்னாடி, எங்க ஃபிரெண்ட் ஒருத்தன் வீட்டுக்கு சில திருநங்கைகள் போய், விக் எல்லாம் வெச்சுட்டு ஆடுவோம். அப்போ, அவனைப் பார்க்க சில ஃப்ரெண்ட்ஸ் அவன் வீட்டுக்கு வருவாங்க. அதுல ராஜாவும் ஒருத்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருத்தன். என்னைப் பார்த்து, ‘நீயும் உன் டோப்பா தலையும்! நல்லாவே இல்லே!’னு கேலி பேசுவான் 'ஹ்ம்ம்'னு சொல்லி, கண்ண உருட்டி அலட்சியமா பார்ப்பான். எனக்கு செம கடுப்பு. ‘நீ என்னடா சொல்றது என் டான்ஸ் நல்லா இல்லேனு? உனக்கு ஒரு தகுதியும் கெடையாது’னு சொன்னேன். ‘அப்படின்னா, எனக்குப் ப்ரூப் பண்ணிக் காட்டு’னு சொன்னான். ‘ப்ரூப் பண்றேன்! உன் முன்னாடி நான் யார்ன்னு காட்றேன்’னு சவால் விட்டுட்டேன். அடுத்த நாள் என் ஃபிரண்ட் மூலமா அவனை என் ஷோக்கு வரவைச்சேன். முதல்ல ‘வரமாட்டேன்’னு சொன்னான், ‘என்ன பயந்துட்டியா?’னு சீண்டினதும் வந்தான். 

அப்பவும் அலட்சியமா இருந்தான். செம்ம வெறி! ‘நீ என்ன பெரிய இவனாடா? எல்லாரும் என் டான்ஸை ரசிப்பாங்க, நீ மட்டும் ரசிக்க மாட்டியா? அப்படி என்ன உனக்கு என் மேலே?’னு கோபமா கேட்டதும் சிரிச்சுட்டான். நானும் சிரிச்சுட்டேன், அப்புறம், நாங்க ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். டெய்லி என்னைப் பார்க்க வருவான். பேசுவான். அவன் அப்பாகிட்டருந்து காசெல்லாம் எடுப்பான். ஒரு நாள் அப்பாவின் பெட்டியை உடச்சு காசு எடுத்திருக்கான். அவர் செமையா மொத்திட்டாராம். நைட் என்கிட்ட வந்து அழுதான். `அப்பாகிட்ட ஏன் எடுக்கிற?’னு அறிவுரை சொல்லி அனுப்பினேன். நான் அப்பவே பெயின்ட்டிங் பண்ணுவேன். என் பெயின்ட்டிங் ஒண்ணை அவனுக்குக் கொடுத்தேன். அதை அவன் அம்மாகிட்ட காட்டியிருக்கான். ‘என்னடா உனக்குப் பெயின்ட்டிங் வரையுற ஃபிரண்ட்ஸும் இருக்காங்களா? எப்பவும் பொறுக்கிப் பசங்களோடதானே சுத்துவே’னு கேட்டு, என்னைக் கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போனேன். அவன் பாட்டியும் என்னோடு குளோஸ் ஆகிட்டாங்க. நானும் அவனும் லவ் பண்ணிட்டிருந்தோம். 

திருநங்கை

ஒரு நாள் `ஏய் ராஜா! ஒண்ணு கேட்பேன் சொல்வியா?’னு கேட்டேன். அவன் என்னன்னு கேட்டான். ‘நான் ஃபுல்லா பொண்ணா மாறிட்டா கல்யாணம் பண்ணிப்பியா?’

`ஓ! பண்ணிப்பேனே!’னு சொன்னதும், ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கறேன். `நா உன்ன லவ் பண்றேன்டா!’

`நானும் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறன்’ என்றான்.

அவ்ளோதான்.... `எடுறா வண்டிய!’னு ஹைவேயில் போய் ஒரு பாலத்துப் பக்கத்துல உட்கார்ந்து நிலா வெளிச்சத்துல கிஸ் பண்ணிக்கிட்டோம். அப்போ தொடங்கின காதல், ஏழெட்டு வருஷம் பிரச்னை இல்லாம இருந்துச்சு. அவன் குடும்பத்துல உள்ளவங்க என் குடும்பத்தோடு ஃபிரண்ட் ஆகிட்டாங்க. அவன் குடும்பத்துல எல்லாரும் என் மேலே அவ்ளோ அன்பு வெச்சாங்க, என்னை முழுசா ஏத்துக்கிட்ட குடும்பம் அது. அந்தக் குடும்பத்துல என் காதலைச் சொல்லி அவங்க அன்பை இழக்க விரும்பலை. அதனால், `அம்மா, அப்பா உனக்குப் பொண்ணு பார்த்தால், கல்யாணம் பண்ணிக்கோ!’னு சொல்லிட்டேன். அவன் அத்தைப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டான். நாங்க லவ் பண்ணினது அந்தப் பொண்ணுக்கும் தெரியும். அவள் அதைப் பொறாமையா எடுத்துக்கவே மாட்டா. She is a very sweet girl. 

எப்போவாவது அவனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் சண்டை வரும். ‘உங்க ராஜா ரொம்ப வம்பு பண்றார். அவரைக் கூட்டிட்டுப் போயிடுங்க!’னு என்கிட்ட போனில் பேசுவாள். நான் சமாதானப்படுத்துவேன். அவன் அந்தப் பொண்ண நேசிக்கிறான், அவளும் அவனை ரொம்ப ரொம்ப நேசிக்கிறா. இப்பவும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட், ராஜாதான். ரெண்டு பேருக்கும் 17 வயசு இருக்கும்போது மீட் பண்ணினது. 12 வருஷம் ஆகிருச்சு. அவனோட முதல் பையனுக்கு நான்தான் உயிர். ‘கல்கி ஆன்ட்டி, கல்கி ஆன்ட்டி எப்போ வருவாங்க’னு கேட்டுட்டே இருப்பானாம். அதுக்கப்புறம் நெறையா காதல் வந்துச்சு. ஆனாலும், என்னால் மறக்கமுடியாதது இந்த விஷயங்கள்தான். நான் சுதந்திரமா இருக்கணும்னு நினைப்பேன். அந்தச் சுதந்திரத்தைப் புரிஞ்சுட்டு என்னை நேசிக்கிறவன் இருந்தால் போதும். கல்யாண பந்தம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்” எனப் புன்னகைக்கிறார் கல்கி.

இவர்களின் காதல், அழகான புரிதலுடன், நிபந்தனையற்ற அன்புடன் வசீகரிக்கிறது!  


டிரெண்டிங் @ விகடன்